கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம்
நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போதுஅடிக்கடி பிட்காயின் என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்!
இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.
பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் - 17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )
பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்குகளை பராமரிக்கின்றன. கிரிப்டோகரன்சிக்கு அப்படி எதுவும் கிடையாது (Decentralized). நீங்கள் ஒரு பிட்காயின் வாங்கினால், அதன் சாப்ட்வேரில் (ப்ளாக் செயின் லெட்ஜர்) அனைத்து பரிவர்த்தனைகளையும் பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சியின் வரலாறு
1983ல் அமெரிக்க கிரிப்டோகிராபர் டேவிட் சாம் (David Chaum) என்பவர் முதன்முதலாக எலக்ட்ரானிக் பணத்தை உருவாக்குகிறார்.அது 1995ல் டிஜிகேஷ் (DigiCash) என்ற பெயரில் எலக்ட்ரானிக் பண பரிவர்த்தனையாக உருவெடுக்கிறது. பிறகு NSA இது போன்ற கிரிப்டோகரன்சி பற்றி ஆய்வுகள் செய்து பேப்பர் சமர்ப்பிக்கிறது.
2008ல் 'சடோஷி நாகமோட்டோ' என்பவர் கிரிப்டோகரன்சிக்கான வெள்ளை அறிக்கை (White paper) bitcoin.org இணைய தளத்தில் வெளியிடுகிறார். அதன் தலைப்பு" Bitcoin:A Peer to Peer Electronic Cash System. முதல் கிரிப்டோகரன்சி பிட்காயின் (BTC)
கிரிப்டோகரன்சிக்கு வெள்ளை அறிக்கை அடிப்படைத் தேவை. அதில்தான் அது உருவாக்கப்பட்ட டெக்னாலஜி, பாதுகாப்பு அம்சங்கள், கரன்சி பரிமாற்ற முறைகள், வெளிப்படையான, திருத்தங்கள் செய்ய முடியாத தரவாக இருக்கும்.
ஜனவரி3,2009ல் முதல் பிட்காயின் எடுக்கப்படுகிறது. அதை எடுக்கும் முறை 'மைனிங்' (Mining) என்று அழைக்கப்படுகிறது. அது ப்ளாக்குகளாகத்தான் பெறப்படும். முதல் பிட்காயினை' ப்ளாக் 0 (Block 0),Genesis Block என்று கூறுகிறார்கள். உடன் 'பிட்காயின் சாப்ட்வேர்' வெளியிடப்பட்டு மைனிங் தொடர்கிறது.
பிட் காயினை அறிமுகப்படுத்திய சடோஷி நாகமோட்டோ, யார் என்பது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது. அவர் தனி நபரா, குழுவா எல்லாம் ரகசியம். பாதுகாப்பு காரணமாகவும் இருக்கலாம். அவரிடம் மட்டும் 1-3 மில்லியன் பிட்காயின் இருப்பதாகச் சொல்கிறார்கள். (இன்றைக்கு இந்திய மதிப்பில் 1 பிட்காயின் - 34 இலட்ச ரூபாய், மொத்தம்? அம்மாடியோவ், எத்தனை சைபர் வருது)
மொத்தம் 21 மில்லியன் பிட்காயின்கள் கிடைக்கும் (எண்ணிக்கை முதலிலேயே முடிவு செய்யப்பட்டு விடும்). இதில் இதுவரை 18.64 மில்லியன் பிட்காயின்கள் (88%) மைனிங் செய்யப்பட்டு லெட்ஜரில் ஏற்றப்பட்டு விட்டன. மீதம் 2.36 மில்லியன் மட்டுமே எடுக்கவேண்டியுள்ளது. மொத்த மைனிங் 2140ல் தான் முடியும்.
3 - 4 மில்லியன் பிட்காயின்கள் தொலைந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் யாராலும் கணிப்பது கடினம்.
பிட்காயினை அடுத்து நிறைய கிரிப்டோகரன்சிக்கள் வந்து விட்டன. இப்போது ஏறக்குறைய 6700 கிரிப்டோகரன்சிக்கள் உள்ளன.
ஸ்டாக் மார்க்கெட் போன்று ஆன்லைனில் பெரிய சந்தை நடைபெற்று வருகிறது. அவை ஆல்ட்காயின் (AltCoins) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் முன்னணியில் உள்ள சில -
ஏதெரியம், கார்டனோ, ரிப்பில், லைட்காயின், டோஜ்காயின் போன்றவை
கிரிப்டோகரன்சிக்களின் சிறப்பு
- அவற்றின் மதிப்பு உயர்ந்து கொண்டே போவது
- யுனிவர்சல் கரன்சி. உலகம் முழுவதும் ஒரே மதிப்பு. நாடுகளின் பொருளாதாரம் இதை பாதிக்காது
- வங்கிகள் போல கட்டுப்படுத்தும் மையங்கள் இல்லாததால், அவற்றின் மதிப்பைக் குறைக்க முடியாது ( reduce via Inflation)
- நமது பணப் பரிவர்த்தனைகளைவிட ப்ளாக்செயின் மூலமான பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை. வ்ங்கி சர்வரை ஹேக் செய்தால், பணம் மாற்ற முடியும். ஆனால். ப்ளாக்செயின் உலகம் முழுவதும் உள்ள கம்ப்யூட்டர்களில் உள்ள லெட்ஜர் என்பதால் ஹேக் பண்ண முடியாது (Decentralised).
- அரசாங்கத்திற்கு எந்தக் கணக்கும் காட்ட வேண்டியதில்லை.
- எந்த அளவிலும் வாங்கலாம். 100 ரூபாய்க்கு கேட்டால் 0.0000003 பிட்காயின் என்று சுரண்டிக் கொடுப்பார்கள்.
கிரிப்டோகரன்சிக்களின் அபாயம்
- நேர்மையான முதலீடுகள் அல்ல. வெறும் யூக வணிகத்தால் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. நிலையானதில்லை. எப்போது வேண்டுமானாலும் மதிப்பிழக்கலாம்.
- உருவாக்கியவரே அழித்துவிட்டால் யாரிடமும் முறையிட முடியாது.
- யாராவது அதிக விலைக்கு வாங்கினால் ஒழிய மதிப்பு உயராது. புழக்கத்துக்கு வராத கரன்சி, வியாபாரத்திற்கும் பெரியதாக உதவாது.
- இணைய தள ஹேக்கர்களால் திருட முடியும். 2014ல் ஒரு பெரிய எக்ஸ்சேஞ்ச்சில் பல கோடி டாலர் மதிப்புள்ள பிட்காயின்கள் ஹேக் செய்யப்பட்டு, அது திவாலானது.
- அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அனுமதித்தாலும், சட்ட ரீதியான தீர்வுகளுக்கு அணுக முடியாது. சொந்த ரிஸ்க்தான்.
கிரிப்டோகரன்சிக்களை எப்படி வாங்குவது?
பிட்காயின், மற்றும் சில கரன்சிகளை பணம் கொடுத்து வாங்கலாம். மற்ற கரன்சிகளை பிட்காயின் போன்ற கரன்சிகளைக் கொடுத்து பரிவர்த்தனைதான் செய்ய முடியும்.
Coinbase, Binance, Huobi, Kraken, eToro, Cash app, Gemini, Robinhood, Coinswitch etc. - மிகப் பிரபலமான கிரிப்டோகரன்சி டிரேடிங் எக்ஸ்சேஞ்ச்கள். இந்த தளங்களில், வாலட் உருவாக்கி, அனைத்து கிரிப்டோகரன்சிக்களும் வாங்க விற்க முடியும். நிறைய ஏமாற்றும் ப்ராட் தளங்களும் உண்டு. மிகுந்த எச்சரிக்கை தேவை.
தினசரி நிலவரம் அறியவும் நிறைய தளங்கள் உள்ளன. சில - Coinmarketcap, CoinGecko, Livecoinwatch, OnchainFX..
அமெரிக்கா, ஆஸ்திரேலியாபோன்ற சில நாடுகள் கிரிப்டோகரன்சிகளை அனுமதிக்கின்றன (எலான் மஸ்க் தீவிர ஆதரவாளர்). சீனா ICO வை தடை செய்துவிட்டது. அங்கு மைனிங் பண்ண முடியாது. வாங்கலாம் விற்கலாம். ஆனால் சட்டரீதியான பணம் இல்லை. இந்தியா போன்ற நாடுகள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. கிரிப்டோகரன்சிகள் வந்தால் நமது ரூபாய் மதிப்பு கடுமையாக பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியா சொந்த கிரிப்டோகரன்சி கொண்டு வரலாமா என்று கூட யோசிக்கிறது.
அடுத்த கட்டுரையில் Mining, Mining pool, Blockchain, Distribution ledger, ICO பற்றி சிறிது வெளிச்சம் பாய்ச்சலாம்.
பர்ஸ் பத்திரம் பாஸ்!
Images: Google
தற்போது நடைமுறையில் சாத்தியமானதா
பதிலளிநீக்குரொம்ப யோசித்து சொல்ல கூடிய விஷயம்,