வாழ்க்கை தத்துவத்தை அறிந்தவர் உண்டோ?
பலரும் பலவிதமாக கூறுகின்றனர். அவரவருக்கு தெரிந்த மாதிரி. கேட்பவருக்கு ஏற்ற மாதிரி. மனிதன் தோன்றிய காலம் முதல் வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே வருவது போல, மனித மனங்களும் மாறிக்கொண்டே வருகிறது.
ஷேக்ஸ்பியர்' சொன்னார் 'உலகம் ஒரு நாடகமேடை; நாமெல்லாம் நடிகர்கள்' என்று. சற்றே கற்பனை செய்தால் சரியென்றே தோன்றுகிறது. பெரிய மேடை, 780 கோடி நடிகர்கள் (உலக மக்கள்தொகை). ஒவ்வொருவரின் கதாபாத்திரம், தன்மை (Role,Character, casting), வேறுவேறு. சூழலை (situation) மட்டும் இயக்குபவர்- கடவுள். அப்படியானால் கடவுள் இருக்கிறாரா என்று கேட்கிறீர்களா? வேதங்களையும், சங்க நூல்களையும், சனாதன தர்மத்தையும் நம்பும் நான் ஆத்திகன். கடவுள் இருக்கிறார் என்றுதான் கூறுவேன்.
சுஜாதா ' கடவுள் தேவைப்படுகிறார்' என்கிறார் ( அவரது ' கடவுள் இருக்கிறாரா' - வாசியுங்கள், நல்ல அனுபவம் - சிந்திக்க வைத்துவிடுவார்)
நினைத்துப்பாருங்கள். 780 கோடி மனிதர்களுக்கும் குணாதிசயம், சூழல் வேறுவேறு. அண்ணன் தம்பி, ஏன் இரட்டையருக்கு கூட ஒரே மாதிரி இல்லை. உனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை (கதாபாத்திரத்தை) வாழ்ந்தால் போதும், விதிக்கப்பட்ட வயது வரை. ஏன் அவனுக்கு ராஜா வேஷம், இவனுக்கு பிச்சைக்காரன் வேஷம்? ஒவ்வொருவருக்கும் ஏன் வெவ்வேறு வயதில் முடிவு? என்று கேட்கிறீர்களா? கர்மா - என்கிறது இந்து மதம். உனது பாத்திரத்தை சிறப்பாக செய். நீீீீீயும் ராஜாவாகலாம்.
அப்படியானால், ராஜா சிறந்தவன், பிச்சைக்காரன் மோசமானவனா? உயர்ந்தவன், தாழ்ந்தவன் உண்டா? இல்லவே இல்லை..அது பார்ப்பவர் மனதில்தான் உள்ளது. அவரவர் தலைவலி அவர்களுக்குதானே தெரியும். ஒருவரின் வாய்ப்பு வசதிகள், அவர்களுக்கான பிரச்சினைகள், துயரங்கள் கர்மாவின் பலன்கள் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.
ஒருவரின் வாழ்க்கை 70 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் 25 ஆண்டுகள் தூக்கம் மட்டுமே. 15 ஆண்டுகள் இளமைக்காலம். நாம் எந்த முடிவும் எடுக்க இயலாத காலம். மீதி 30 ஆண்டுகள்தான் நாம் நாமாக வாழும் காலம் (எவ்வளவு சிறியவாழ்க்கை!). இதில் படிப்பு, வேலை, இல்லறம், பொதுவாழ்க்கை, பொழுது போக்கு அனைத்தும் அடக்கம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம்,காமம், குரோதம் ஆகிய உணர்வுகளுக்கும் 30 ஆண்டுகள்தான். இப்போது சொல்லுங்கள். எவ்வளவு காலம் எந்த உணர்வு தேவை? காலம் முழுவதும் மகிழ்ச்சிதானே தேவை. மற்ற உணர்வுகளை தள்ளுங்கள் என்கிறது சனாதன தர்மம். எது நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன் என்பவரை யாரால் தடுக்க முடியும்? இன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கடப்போமே..
சரி, எப்படிதான் வாழ்வது? கொஞ்சம் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கேட்போமா? " சமூகத்தில் நிலவும் பகைமை, வன்முறை, வெறுப்புணர்ச்சி யாவும் மனித மனத்தின் ஆங்கார வெளிப்பாடுகளே! காருண்யம் நிரம்பிய உள்ளத்தை
கொண்டவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும்" என்கிறார். மேலும் "துயரத்தில் - உங்கள் துயரத்தை மட்டுமன்றி உலகத்தின் துயரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அதை கடந்து போக முடியும். துயரத்தின் ஒட்டு மொத்த அர்த்தத்தை புரிந்து கொள்ளும்போது மட்டுமே காருண்யம் உருவாகும்."
கொண்டவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும்" என்கிறார். மேலும் "துயரத்தில் - உங்கள் துயரத்தை மட்டுமன்றி உலகத்தின் துயரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அதை கடந்து போக முடியும். துயரத்தின் ஒட்டு மொத்த அர்த்தத்தை புரிந்து கொள்ளும்போது மட்டுமே காருண்யம் உருவாகும்."
என்றார் ஜே.கே.
மேலும், "நாம் எப்போதும், யாருக்கேனும் நம்மை நிரூபித்துக் கொண்டே இருக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். இது தேவையற்ற வீண்வேலை. நாம் நாமாக, நம் குற்றங்குறைகளுடன் பலவீனங்களுடன் நம்மையே ஏற்றுக்கொள்வதும், நம்மை நேசிப்பதும் மிக முக்கிய தேவை" என்பார் ஜே.கே.
"சுயநல வேட்கை உள்ளவனிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது" என்பார். சத்தியமான வார்த்தை.
வாழ்க்கை தத்துவங்களை படிக்க, உணர ஆசைப்பட்டால், மனதை வெறுமையாக்கிக் கொண்டு, ஜே.கே அவர்களின் எழுத்துக்களைப் படியுங்கள்.
நான் படித்தது, பார்த்தது, கேட்டது அனைத்திலும் பொதுவான முக்கிய தத்துவம் ' உலகின் சிறந்த மனிதர்கள் (Awesome Personalities) யார் என்றால் அடுத்தவர்களுக்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள்தான்'. பொருளை, அறிவை, கல்வியை, உழைப்பை, சந்தோஷத்தை எதுவானாலும்.
செல்வம், வசதிகளை அடைய நாம் அடுத்தவரை சார்ந்தே இருக்க வேண்டும். சிறந்த மனிதராகத் திகழ யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
வாழ்க்கையை எளிமையாக வாழும்போது அமைதியும் சந்தோஷமும் இருக்கும். ஆடம்பரமாக, ஆரவாரமாக வாழ நினைக்கும்போது அதற்கேற்ற விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். Life is Simple, We are making it Complicated.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது "
என்று குறள் எளிமையாக வழிகாட்டுகிறது. வாழ்ந்துதான் பார்ப்போமே!
கருத்துகள்
கருத்துரையிடுக