"எங்கே தேடுவேன்?
- இது 1952 ல் 'பணம்' என்ற திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடியது.
இன்றுவரை, அதன் சாராம்சத்தில் எதுவும் மாறவில்லை. மாறாக, ரூபாய் மதிப்பைப் போல பல மடங்கு பணத்தின் தேவை எல்லோருக்கும் அதிகரித்துவிட்டது.
பணம் - மனிதனின் மூச்சுக்காற்றுக்கு அடுத்தபடியாக உயிர் வாழ தேவைப்படுகிறது. அன்றே சொல்லிவிட்டார்கள்- "பணம் இல்லாதவன் பிணம்' என்று.
"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசுமுன் செல்லாதடி"
- இது பராசக்தி படத்தில் உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிய பாட்டு. இதுவும் 1952 ல் வந்த திரைப்படம். பணத்தின் சக்தியை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருப்பார். இதில்
"பிணத்தை
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவக்கோனே"
என்று வரும். பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டவனின் நகைச்சுவை கலந்த அவலக் குரலாக (Black Humour) இது ஒலிக்கும். நடிகர்திலகத்தின் நடிப்பும் நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும்..
(ஒரு முறை யூ டியுபில் இந்த பாடலை கண்டு ரசியுங்கள்.காலத்துக்கும் மறக்க மாட்டீர்கள்)
பாடல்கள் கீழே.
சரி, பணத்தை எங்கே தேடுவது? ' பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?' என்று சொல்வார்கள். கொஞ்சம் சிந்தித்தால், 'பணம் யாராவது நமக்கு கொடுத்தால்தான் கிடைக்கும்' என்ற விடை கிடைக்கும். நாம் கொடுக்கும் பொருளுக்கோ, அல்லது சேவைக்கோதான் பணம் கிடைக்கும். அதுவல்லாமல் கிடைக்கும் பணம் தவறான வழியில் வந்ததாக கருதப்படுகிறது.
கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஒருவர் வேலைக்குப் போகிறார் என்றால், அவரது சேவைக்கு அந்த நிறுவனம் பணம் கொடுக்கிறது. உடல் உழைப்பாகவோ, மூளை உபயோகித்தோ அவர் அந்த சேவையை வழங்குகிறார்.
அடுத்தவர் வணிகம் செய்கிறார். அவர் கொடுக்கும் பொருளுக்கு பணம் வழங்கப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட சேவை (service) செய்தோ, ஆலோசனையாகவோ( consultant) பணம் பெறலாம்.
இவையல்லாது கிடைக்கும் பணம் எல்லாமே சட்டத்துக்கு புறம்பானது. திருட்டு, கொள்ளை, ஏமாற்றுதல், ஊழல் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
சரி, யாரிடம் பணம் நிறைய சேரும்? எந்ததுறையாக இருந்தாலும் நன்றாக படித்து, அல்லது நன்றாக தொழில் கற்று (Skills Learning) நிறுவனத்தின் நிர்வாகப் பதவிகளுக்கு வருபவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. பணிபுரிவோர் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டேஇருக்க வேண்டியது அவசியமாகிறது. சுந்தர்பிச்சை - கூகிள், சத்ய நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இவர்களைச் சொல்லலாம். சத்ய நாதெள்ளா B.E , M.S , MBA முடித்து சன் மைக்ரோசிஸ்டம் கம்பெனியில் சேர்கிறார். பின்னும் 25 ஆன்லைன் கோர்ஸ்களில் இணைந்து கற்றாராம். என்ன உழைப்பு! (அதான் தலையில் முடி இல்லை ☺☺)
அரசு அதிகாரிகள் இதில் சேராது. அரசுப்பணி என்ற உலகம் தனி.
அடுத்து வணிகம். புதுப்புது உத்திகளோ, தொழில்நுட்பமோ வழங்கினால்தான் அதிக பணம் கிடைக்கிறது. எலான் மஸ்க் நல்ல உதாரணம். இன்றைக்கு உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எப்படி எட்டினார்? புதுப்புது தொழில்நுட்பங்கள். ஜெப் பெசோஸ் அமேசான் ஆன்லைன் புத்தக விற்பனையைதான் தொடங்கினார். அவரது ஆரம்ப கால அலுவலகம் ஒரே ஒரு கணினியோடு துவங்கப்பட்டது. இன்று? அமேசான் உலகின் முன்னணி நிறுவனம். காரணம், வியாபார உத்திகள்.
சரி, எல்லோருமே சுந்தர் பிச்சையாகவோ, எலான் மஸ்க் ஆகவோ முடியுமா? கண்டிப்பாக முடியாது. இவ்வுலகில் யாரும் யாராகவும், யார் மாதிரியும் ஆக முடியாது. மேலும் அவர்களும் பணத்தை நோக்கி ஓடியவர்களல்ல. (எலானின் மந்திரமே பணத்தை எண்ணி தொழில் செய்யாதே. புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடி என்பதுதான்) திறமையாலும் தொழில்நுட்பத்தாலும் பணம் அவர்களை நோக்கி வந்தது. நம் முழு கவனமும் (Focus) புதுமைகளில் மட்டுமே இருந்து, குடும்ப சூழலும், புற சூழலும் அமைந்தால் நாமும் பணக்காரர்கள்தான். கலைத்துறையாக இருந்தாலும் அதுதான்.
முடியவில்லையா? பெரு மூச்சு விடுவதை நிறுத்துங்கள்.
இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ பழகுங்கள்.
சரி அடுத்து, அரசியல்வாதிகள் எல்லோரும் பணக்காரர்களாக உள்ளனரே, நாமும் அரசியல்வாதியாகிவிடலாமா? ஹலோ, அரசியல் என்பது நாட்டை நிர்வாகம் செய்வதற்காக மக்கள் தேர்வு செய்வது. பணம் சம்பாதிக்க அல்ல. அது சட்டப்படி குற்றம். என்றைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும்.
'காசேதான் கடவுளப்பா; அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கைமாறும் பணமே, உன்னைக் கைப்பற்ற துடிக்குது மனமே'
நிறைய பணம் சம்பாதித்தால் வாழ்க்கை சந்தோஷம் தானே?
அது வேற டாபிக், பிறகு சந்திக்கலாம் நண்பர்களே!
கருத்துகள்
கருத்துரையிடுக