பெயரைக் கேட்டாலே சிலிர்த்துப் போய்விடுவேன், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை. (இனி 'பாலா' என்றே குறிப்பிடுகிறேன் டைப் பண்ண வசதி). அவர் மறைவை ஒட்டி எல்லோரும் எழுதிவிட்டார்கள். இருந்தாலும், அந்த மனிதருள் மாணிக்கத்தைப் பற்றி நான் எழுதாவிட்டால் என் ஜென்மம் ஈடேறாது.
இந்திய அரசு பாலா அவர்களுக்கு ' பத்ம விபூஷன்" விருது அறிவித்துள்ளது. ஏற்கனவே 'பத்மஸ்ரீ ' பத்ம பூஷன்' பெற்றுவிட்டார், பாடல்களுக்கு 6 தேசிய விருதுகள்.
நான் தமிழில் எனக்கு பிடித்த பாடல்கள் என்று 750 பாடல்கள் வைத்திருக்கிறேன். அதில் 300 பாடல்கள் பாலா- இளையராஜா பாடல்கள் இருக்கும். பாலா மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியது 150 இருக்கும். இப்போதும் வாரத்தில் 10 பாடல்களாவது அவரது பாடல்களைக் கேட்கிறேன். மனிதர்கள் இருக்கும் போது அவர்களது மதிப்பு தெரியாது என்பார்கள்: ஆனால் பாலு இருக்கும்போதும் மதிப்பு மிக்கவராகத்தான் இருந்தார். இறந்த பின்னால் இன்னும் உள்ளங்களில் ஒளி வீசிக்கொண்டுள்ளார். FB யிலும் யூடியூபிலும் அவரது கோடானுகோடி ரசிகர்கள் அவர் பெயர் இருக்குமிடமெல்லாம் கதறிக் கொண்டுள்ளனர்.
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் பாலா. அவரது தொழில் பக்தி, தொழிலில் பன்முகத்தன்மையை வளர்த்துக் கொண்டது, அவரது மனிதாபிமானம் இவற்றை பின்பற்றினாலே, எவரும் சிறப்பாக வாழலாம். அவரது திறமையா, மனிதாபிமானமா எது சிறந்தது என பட்டிமன்றமே நடத்தலாம். அதுவும் திரைத்துறையில் இது இரண்டும் இணைந்து உள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 40000 பாடல்கள், 50 ஆண்டுகள், எத்தனை மொழிகள்! அவரைப் பற்றி 1000 பக்கங்கள் எழுதினாலும் முழுமையாகாது.
Disclaimer:இங்கு பாலா- இளையராஜா இணைந்த பாடல்களைப் பற்றி எழுத அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். எல்லோரும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்து பேசி, எழுதியாகி விட்டது. எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றினால், தனி கட்டுரையாக எழுதுகிறேன். யாரும் அதை தவறாக எண்ண வேண்டாம்.
அவரது தமிழில் முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா' மற்றும் ' இயற்கையென்னும் இளைய கன்னி' இன்று வரை கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். 'ஆயிரம் நிலவே வா' பாடலுக்கு உடல் நலக் குறைவின் காரணமாக, குறிப்பிட்ட தேதியில் பாலா ஒலிப்பதிவுக்கு போகாததையும், MGR அவர்கள் அதிசயமாக ஒரு மாதம் காத்திருந்து பின் ஒலிப்பதிவு செய்ததையும் பல நேரங்களில் பாலா நன்றியோடு வியந்து கூறுவார். சாந்திநிலையம் (1969) முதலில் ரிலீஸ் ஆனதால், ' இயற்கையென்னும் இளைய கன்னி' தமிழில் முதற்பாடலாக ஆயிற்று என்பதையும் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.(Simply SPB என்ற Youtube சேனலில் அவரது அனுபவங்களை கேளுங்கள்).
எனக்கு பாலா அறிமுகம் ஆனது, நான் ஏழாவது, எட்டாவது படிக்கும் காலம் இருக்கும். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் அவரது பாடல்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. அந்தக் காலம் டி.எம்.எஸ் அவர்கள் உச்சத்தில் இருந்த நேரம். அப்போது அந்த புதிய குரலில் வானொலியில் ஒலித்த பாடல்களில் 2 பாடல்கள் மறக்க முடியாதவை. இந்த கட்டுரை எழுத ஆரம்பிக்கும் போது முதலில் ஞாபகம் வந்தது: 40 ஆண்டுகள் கழித்து தேடி கேட்டேன். பாடல் வரிகள் மறக்கவேயில்லை. அவை, 'இறைவன் என்றொரு கவிஞன்', மற்றும் 'பேசு மனமே பேசு'. இளமையான பாலாவின் வெல்வெட் குரலில் மற்றுமொரு பாட்டு, ' நேற்று வரை விண்ணில் இருந்தாளோ'. ( கீீீீழே இணைைத்துள்ளேன்.)
தனக்கு கர்நாடக சாஸ்திரிய சங்கீதம் தெரியாது என்று கடைசி வரை குறைப்பட்டுக்கொள்வார். ஆனால் முழுக்க கர்நாடக இசையிலேயே அமைந்த சங்கராபரணம் (1979) தெலுங்கு படத்தில் கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் பாடி தன் முதல் தேசிய விருதைப் பெற்றார். அந்தப் படம் எனக்கு கல்லூரி காலத்தில் தான் தெரிய வந்தது, 'சங்கரா' 'புரோசேவரே வருரா' பாடல்கள் பல காலமாக நான் திரும்ப திரும்ப கேட்கும் பாடல்கள்.
எம்.எஸ்.வி அவர்கள் இசையில் பாலா பாடிய ' எங்கேயும் எப்போதும்' தான் என்னைப் பொறுத்தவரையில் தலைசிறந்தது ( Masterpiece). மற்றுமொரு சிறப்பான பாடல் ' எனக்கொரு காதலி இருக்கின்றாள்' அதில் எம்.எஸ்.வியோடு போட்டி போட்டு பாடியிருப்பது மிகச் சுவாரசியம். மேலும் என்னைக் கவர்ந்தவை- இருமனம் கொண்ட, கம்பன் ஏமாந்தான், மை நேம் இஸ் பில்லா, நான் பொல்லாதவன், வான்நிலா நிலா, ராகங்கள் பதினாறு, சிப்பி இருக்குது முத்து இருக்குது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
பாலாவின் பாடும் பாணி குரல் நடிப்பு (Voice Acting) வகை என்று சொல்லுவார்கள். பொதுவாக டப்பிங் கலைஞர்களைத்தான் வாய்ஸ் ஆர்டிஸ்ட் என்பார்கள். பாலா பாடுவதிலேயே படத்தில் தோன்றும் கதாபாத்திரத்தின் உணர்வுகளைக் கொண்டு வந்துவிடுவார். அதனால் தான் ரஜினி, கமலுக்கு பாடும்போது அவரவர்களே பாடுவது போல தோன்றுகிறது.
கன்னடத்தில் விஷ்ணுவர்தன் படம் கையெழுத்திடும்போதே தனது பாடல்களை பாலாதான் பாட வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் கையெழுத்திடுவாராம். பாலா குரலிலேயே 80% உணர்வைக் கொண்டு வந்துவிடுவார். நான் 20% நடிப்பைக் கொடுத்தால் போதும் என்பாராம். விடுதலை படத்தில் அவருக்கு சந்திரபோஸ் இசையில் ' நீலக்குயில்கள் ரெண்டு' என்று பாடியிருப்பார். அவ்வளவு மென்மையாக..
நீங்கள் நல்ல இசையை, பாடலை ரசிக்க வேண்டுமென்றால், ஒலி (Audio)யாகத்தான் கேட்க வேண்டும்.வீடியோ கூடவே கூடாது. அதிலும் பாலா மற்றும் இளையராஜா பாடல்கள் ஒலியாகக் கேட்கும்போதுதான் பாடலின் முழு பரிமாணத்தையும் ரசிக்க முடியும். நிறைய பாடல்கள் குப்பையாக எடுக்கப்பட்டிருக்கும். பாலசந்தர், கமல் பாடல்கள் சிறப்பாக இருக்கும்.
ராஜாவைப் போலவே சங்கர் கணேஷும் பாலாவுக்கு நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இசையிலும் நிறைய நல்ல பாடல்கள் பாடியிருக்கிறார். கணேஷ், ' பாலா வந்தால், டியூனைக் கேட்பார், பாடல் வரிகளைக் கேட்பார், பாடி விட்டு சென்றுவிடுவார்' என்கிறார். 'ஒரு தடவை கூட திருத்தமோ, ரீடேக்கோ எடுத்ததில்லை, நாங்கள் எதிர்பார்ப்பதைவிட பிரமாதமாயிருக்கும்.' என்கிறார்.அவர்கள் இசையில் சில:
'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்'
'ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்'
'மலரே என்னென்ன கோலம்'
நான் உன்ன நினெச்சேன்
'அவள் ஒரு மேனகை (சிவரஞ்சனி)'
'ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்' - ----- கேட்டுப்பாருங்கள்.
கே.பாலசந்தர் அவர்கள்தான் பாலாவின் திறமைகளை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்பது என் எண்ணம். சில உதாரணங்கள் - ' இருமனம் கொண்ட திருமண வாழ்வில், கடவுள் அமைத்து வைத்த மேடை, ஓடுகிற தண்ணியிலே, புன்னகை மன்னன், நினைத்தாலே இனிக்கும், டூயட் படங்களில் எல்லா பாடல்களும்.
அதேபோல டி.ராஜேந்தருக்கு பாடிய ' வாசமில்லா மலரிது' வில் ஆரம்பித்து, வசந்தம் பாடிவர, மூங்கினிலே பாட்டிசைக்கும், சலங்கையிட்டால் ஒரு மாது' என்று எத்தனை ஹிட் பாடல்கள்.
ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தவற்றில் பாலா பாடியுள்ள பாடல்கள்தான் அனைத்துமே சூப்பர் ஹிட். 'மின்சார கனவு' படத்தில் ' தங்கத் தாமரை மகளே' பாடலுக்கு தேசிய விருது பெற்றார். அந்த பாடலை அவர் தான் பாடினார் என்று கொஞ்ச நாள் தெரியாது. அந்த அளவு குரலை மாற்றி, ஸ்டைலாக பாடியிருப்பார்.
பின்னால், ஆடுகளத்தில் தனுஷுக்கு,' ஐயயோ நெஞ்சு அலையுதடி' வரைக்கும் அத்தனை கதாநாயகருக்கும் பாடிவிட்டார்.
இன்னும் ஹிந்தியில் பாடிய பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அவரது ஞாபகமாக சில அரிய பாடல்களை உங்களிடம் பகிரவே இந்த கட்டுரை. பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் கொஞ்சம் உள்ளங்கையில் அள்ளி பருக கொடுத்துள்ளேன்.
மேலும் அவரது இசை, நடிப்பு, டப்பிங் எல்லாமே மகத்தான பணிகள்.
எல்லாவற்றையும் விட, அவரது மனிதாபிமானம், நிலை உயர்ந்த பின்னும் கடைசி வரை காட்டிய பணிவு அவரை பெரிய மகானாகத்தான் பார்க்கிறேன்.
பாலா, பாஸ்கியிடம் ஒரு பேட்டியில்' மரணிக்க எனக்கு விருப்பமில்லை. அடுத்த தலைமுறைக்கும் பாட வேண்டும் ' என்றீர்கள். உங்களுக்கு ஏது மரணம்? உலகம் உள்ளவரை, தமிழர் ஒருவராவது உங்கள் பாடலை பாடிக் கொண்டிருப்பார்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக