சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை -3
The Secret - (இரகசியம் - ரோண்டா பைர்ன்)
2006ல் 'The Secret' என்ற பெயரில் ரோண்டா பைர்ன் என்ற ஆஸ்திரேலிய பெண்மணிஎழுதி ஒரு ஆவணப்படத்தை ( Pseudoscientific Documentary) தயாரித்தார். அதில் அமெரிக்காவின் கல்வியாளர்கள், தத்துவவியலாளர்கள், எழுத்தாளர்கள் என்று 24 பேர்களின் கருத்துக்களைக் கேட்டு, வாழ்க்கையின் இரகசியத்தை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டிருக்கும்.
ஈர்ப்பு விதி (The Law of Attraction) தான் அந்த இரகசியம். அதையே புத்தகமாகவும் வெளியிட்டார். அது உலகெங்கும் 3 கோடி புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. அப்படி என்னதான் உள்ளது, அந்த புத்தகத்தில்? பார்க்கலாம்.
ஈர்ப்பு விதி (The Law of Attraction)
பிரபஞ்சத்திலேயே சக்தி வாய்ந்த காந்தம் நீங்கள்தான். வாழ்வின் மாபெரும் இரகசியம், ஆற்றல் மிக்க விதி - ஈர்ப்பு விதிதான். ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே கவர்ந்திழுக்கும் (Like attracts Like). நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அதை ஒத்தஎண்ணங்களை உங்கள் பால் ஈர்க்கிறீர்கள்.
உங்களை மகிழ்விக்காத ஏதோ ஒன்றை நீங்கள் சிந்திக்க தொடங்கினால், அதைப் பற்றி எண்ண எண்ண, மேலும் மோசமடைந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதா? எராளமான மகிழ்ச்சியற்ற எண்ணங்கள் உங்களுக்குள் படையெடுப்பதால், நிலைமை மோசமடைந்ததுபோல தோன்றுகிறது.
உங்கள் வாழ்க்கை உங்கள் கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே ஆகும். நீங்கள் அதிகமாக யோசிக்கும் விஷயங்களையே உங்கள்பால் ஈர்ப்பதால் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணம் ஆக்கிரமிப்பாக இருந்துள்ளது.
உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை மனதில் சிந்திக்க முடியுமென்றால், ஆதிக்க எண்ணமாக (dominent thoughts) மாற்ற முடியுமென்றால், அதை அடையப் போவது உறுதி.
எப்போதும் நல்லவற்றையே கவர்ந்திழுங்கள்
தாங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதற்கான காரணம். அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்று சிந்திப்பதைவிட, எது வேண்டாம் என்பதை அதிகம் சிந்திப்பதுதான்.
'வேண்டாம், இல்லை, கிடையாது' போன்ற எதிர்மறை வார்த்தைகளை ஈர்ப்பு விதி எடுத்துக் கொள்வதில்லை. நீங்கள் தாமதமாக போக வேண்டாம் என்று நினைத்தால்' தாமதமாக செல்ல வேண்டும்' என்றே எடுத்துக் கொள்ளும். ' சீக்கிரமாக போக வேண்டும்' என்றுதான் நினைக்க வேண்டும்.
நீங்கள் எப்போதும் குறைகூறிக் கொண்டே இருந்தால், உங்கள் வாழ்க்கையில் குறை கூறுவதற்கான பல சூழல்களை ஈர்ப்புவிதி ஆற்றலுடன் கொண்டுவந்து சேர்க்கும்.
நீங்கள் உங்கள் எண்ணங்களால் எவற்றில் கவனம் செலுத்துகிறீர்களோ, ஈர்ப்பு விதி அப்படியே துல்லியமாக பிரதிபலித்து அவற்றை உங்களுக்கு திருப்பி அளிக்கும். எந்த விஷயத்தையும் உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அவை இன்னும் விரைவாக நடை பெறத் தொடங்கும்..
நமக்கு என்ன வேண்டாம், எதற்கு பயப்படுகிறோம், எதைத் தவிர்க்க விரும்புகிறோம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, தனக்கு என்ன வேண்டும் என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினால் மொத்த வாழ்க்கையும் மாறிவிடும்
.
உங்கள் மனதின் சக்தி
உங்கள் எண்ணங்களை மாற்றி, நீங்கள் விரும்புபவற்றைக் குறித்து சிந்திக்கும்போது, உங்கள் அலைவரிசையை மாற்றுகிறீர்கள் அதை மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது.
அன்பு - ஒரு மகத்தான உணர்ச்சி
இப்பிரபஞ்சத்தில் அன்பின் சக்தியைவிடப் பெரிய சக்தி எதுவும் கிடையாது. உஙகள் ஒவ்வொரு எண்ணத்தையும் அன்பைக் கொண்டு போர்த்த முடிந்தால்,சகலத்தையும் சகலரையும் நேசிக்க முடிந்தால் உங்கள் வாழ்க்கை பரிபூரணமாக மாறிவிடும்.
இரகசியத்தைப் பயன்படுத்துவது எப்படி?
முதற்படி: கேளுங்கள், என்ன வேண்டும் என்பதைத் தெளிவாக பிரபஞ்சத்திற்கு ஆணையிடுங்கள்.
இரண்டாம்படி: நம்புங்கள், கேட்ட கணத்தில் அதைப் பெற்றுவிட்டதாக நம்ப வேண்டும். முழு நம்பிக்கை இருக்கவேண்டும்.
மூன்றாம்படி : பெறுங்கள், அதை ஏற்றுக் கொள்ள மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவேண்டும். கிடைத்துவிட்டது போல உணருங்கள், கிடைத்துவிடும்.
- நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திட பிரபஞ்சத்திற்கு சொடுக்கு போடும் நேரம் கூட ஆகாது. ஆகாது.ஒரு டாலராயினும், மில்லியன் டாலராயினும்.
- ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விஷயங்களில் துவங்குவது, ஈர்ப்புவிசை மீது நம்பிக்கை ஏற்பட சிறந்த வழி. வழி.ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள்கேளுங்கள். ஈர்க்க கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர, பெரிய விஷயங்களை ஈர்ப்பது எளிது.
- நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஆற்றல்மிக்க செயல்முறைகள்
எதிர்பார்ப்பு ஒரு ஆற்றல்மிக்க ஈர்ப்புசக்தியாகும். ஈர்ப்புசக்தியாகும்.நீங்கள் விரும்புபவற்றை மட்டும் எதிர்பாருங்கள்.
நன்றியுணர்தலின் (Gratitude) ஆற்றல்மிக்க செயல்முறை : இப்போது உங்களிடம் இருப்பவை குறித்து நன்றியுடன் இருங்கள். உங்களை மகிழ்ச் சியான மனநிலையில் வைத்திருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் நன்றியுணர்வைத் தெரிவியுங்கள்.
அகக்காட்சி படைப்பு (Visualization): உங்களுக்கு வேண்டியதை நீீீீீீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனதில் உருவாக்குவது. அப்படி உருவாக்கும்போது சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள். உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீீர்களோ, ஈர்ப்பு விதி அதை உங்களுக்கு திருப்பி அளிக்கும்.
பணத்திற்கான இரகசியம்
செல்வச் செழிப்பை காந்தமாகக் கவர்ந்திழுங்கள். அதில் கவனத்தைக் குவியுங்கள். உங்களது வேலை, கேட்பது, நம்புவது, பெறுவது மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பது மட்டும்தான். அவை எவ்வாறு நிகழப் போகின்றன என்பதை பிரபஞ்சத்திடம் விட்டுவிடுங்கள். பணத்தைப் பெற பணத்தைக் கொடுங்கள். கொடுக்கும்போது மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
உறவு மேம்பாட்டிற்கான இரகசியம்
உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு உறவு சரியாகச் செயல்பட வேண்டும் எனில் அடுத்தவரிடம் நீங்கள் மெச்சும் விஷயங்களில் கவன்ம் செலுத்துங்கள். குற்றங்குறைகள் மீது அல்ல.
ஆரோக்கியத்திற்கான இரகசியம்
மருத்துவத்துறையில் 'பிளாஸ்போ விளைவு' (Placebo Effect) என்ற ஒன்று உண்டு. சாதாரண சர்க்கரை நீரையோ, போலி மாத்திரையையோ தந்து, அதை மருந்து என நம்பவைத்து குணமளிக்கும் முறை. உண்மையில் மனமே உடலைக் குணமாக்குகிறது.
சிரிப்பு ஒரு அருமருந்து. சிரிப்பு மகிழ்ச்சியைக் கவர்ந்திழுக்கிறது. எதிர்மறை விஷயங்களை வெளியேற்றுகிறது.
உங்கள் சிந்தனை மூலமே முழுமையான ஆரோக்கியமான நிலையை அடைய முடியும். வயதாதல் மற்றும் வியாதி குறித்து சமுதாயம் கொண்டிருக்கும் கருதுக்களுக்கு செவிசாய்க்காதீர்கள்.
உங்களுக்கான இரகசியம்
மற்றவர்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அப்படியே திரும்பி வந்து நம்மை பாதிக்கிறது. போட்டி மனப்பான்மையால் ஒருபோதும் வெல்ல முடியாது. அதைக் குப்பைத் தொட்டியில் வீசியெறியுங்கள்.
உங்கள் வாழ்க்கையை அசை போட்டு, கடந்த கால கஷ்டங்களில் கவனம் செலுத்தினால், அதே போன்ற கஷ்டமான சந்தர்ப்பங்களை இன்னும் அதிகமாக கொண்டுவருவீர்கள்.
வாழ்க்கைக்கான இரகசியம்
உங்களது உன்னதத்தை ஆரத்தழுவுங்கள்.
உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உங்கள் வாழ்க்கைக் கரும்பலகையில் எழுதுங்கள். நீங்கள் இப்போது செய்யவேண்டியது மகிழ்ச்சியாக இருப்பது மட்டும்தான்.
நீங்கள் நேசிப்பதைச் செய்யுங்கள்!
--- இதுவே 'இரகசியம்' புத்தகத்தின் சாராம்சம்.
அடுத்த கட்டுரையில் வேறு சில புத்தகங்களைப் பற்றி காணலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக