முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு பார்வை - 1


ஒவ்வொரு மனிதனுக்குமே, தான் வாழ்க்கையில் என்றைக்காவது பெரிய செல்வந்தனாக ஆகமாட்டோமா? புகழ் பெற்ற கலைஞர்களைப் போல தானும் புகழ் பெற மாட்டோமா என்ற தீராத தாகம் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு என்னென்ன வழிகள் என்று தேடிக் கொண்டே இருக்கிறோம். இதில் சுய முன்னேற்ற, தன்னம்பிக்கை புத்தகங்களைப் படித்து முயற்சிப்பவர்கள் பலர். வருடாவருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகங்கள்தான் அதிகம் விற்பனையாகிறது என்று கூறுவார்கள். இந்தப் புத்தகங்களில் என்னதான் இருக்கிறது? உண்மையிலேயே தன்னம்பிக்கை தருகின்றனவா? இதைப் படித்து யாராவது முன்னேறியிருப்பார்களா? என்பதை அலசுவதே இக்கட்டுரை.

எனக்கு இந்த புத்தகங்களில் எப்போதுமே ஈடுபாடு இல்லை. தாயத்து, ராசிக்கல் விற்கிற மாதிரிதான் இதுவும் என்பது என் எண்ணம். ஆனால் மேடைப் பேச்சிற்கு பயன்படும்.

முதலில் சில பிரபலமான புத்தகங்களின் சாராம்சத்தை சுருக்கமாக கூறுகிறேன். எனவே சற்று நீளமான கட்டுரையாக இருக்கும். 

இந்த சுய முன்னேற்றப் புத்தகங்கள், தன்னம்பிக்கை புத்தகங்கள், வாழ்வது எப்படி போன்ற சமாசாரங்கள், பாடத்திட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் என்று எல்லாம் அமெரிக்காவில் கோடிகள் குவிக்கும் தொழிலாக இருக்கிறது. அப்படியே நமது நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது (அந்த அளவுக்கு இல்லை).. இது தொடங்கியது1937 ல். ஆரம்பித்து வைத்தவர் ' நெப்போலியன் ஹில் என்ற எழுத்தாளர், 'Think and Grow Rich' புத்தகத்தின் மூலம். அமேசான் இந்த புத்தகத்தை 'ஊக்கப்படுத்தும் இலக்கியத்தின்(?) பெரிய்ய அப்பா (Granddaddy of Motivational Literature) என்று விளம்பரப்படுத்துகிறது. 

Think and Grow Rich - Nepolean Hill ( தமிழில் -  சிந்தனை மூலம் செல்வம்)

இதன் முன்னுரையில் நூலாசிரியர், தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றி போர்டு, ராக்பெல்லர், கிரகாம் பெல் போன்ற நூற்றுக் கணக்கான வெற்றியாளர்களின் வெற்றிக்கு காரணங்களை அலசி ஆராய்ந்ததாக குறிப்பிடுகிறார்.

இதில் செல்வத்தைக் குவிக்க 13 கொள்கைகள் (13 Principles) கூறப்பட்டுள்ளன.

1. Desire - எதையாவது அடைய, நிகழ்த்த திடமான ஆசைகள், விருப்பங்கள் இருக்க வேண்டும் (Burning Desire)

2. Faith - முழுமையான நம்பிக்கை வைத்தல்

3.Autosuggestion - நமது மனதில் உருவாகும் யுக்திகள், யோசனைகள். அதற்கு ஆழ்மனதில் நமது இலக்கை விதைக்க வேண்டும்.

4. Specialised Knowledge - இலக்கைக் குறித்த கருத்துகள், தகவல்கள், திறமைகள் போன்ற தனித்துவமான அறிவு (Facts, Informations, Skills)

5.Imagination - உங்கள் இலக்கை மனதில் காட்சிப்படுத்துதல் (Visualize), அதைக் குறித்து இதுவரை தோன்றாத யோசனைகள், உருவங்கள், எண்ணங்களை உருவாக்குதல்

6.Organised Planning - என்ன செய்யவேண்டும் என்ற விளக்கமான திட்டங்களையும், யுக்திகளையும் எழுதி நடைமுறைப்படுத்தல்

7.Decision - விரைவாக முடிவுகளை எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுதல் 

8.Persistence - இலக்கை அடைய சிரமங்களையும் எதிர்ப்பையும் தாண்டும் விடாமுயற்சி

9. Power of Mastermind - அறிவையும் செயலையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக இலக்கை அடைய வைக்கும் சக்தி

10. Mystery of  SexTransmutation - மனிதனின் பாலியல் உணர்ச்சி பல மடங்கு சக்தி வாய்ந்தது. அதை நமது இலக்குகள் நோக்கி திசை திருப்புவது அல்லது உருமாற்றுவது.

11.Subconscious Mind - எதிர்மறையான எண்ணங்களை அழித்து, நேர்மறையான எண்ணங்களை வளர்த்து ஆழ்மனதின் சக்தியை அதிகரிப்பது.

12. The Brain - மூளை, சிந்தனைகளை உள்வாங்கும் மற்றும் ஒளிபரப்பும் நிலையம். நேர்மறையான தகவல்கள் மூலம் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

13. Sixth Sense: ஆழ்மனத்தின் ஒரு பகுதியான ஆறாவது அறிவின் மூலம் எல்லையில்லா ஞானத்தை அடைதல்

மேலும் மனிதர்களுக்கு உள்ள ஆறு பயங்கள் - ஏழ்மை, தம்மீது எழும் விமர்சனங்கள், உடல் நலக்குறைவு ஆகிய பயங்கள் மூன்றும் அனைத்து கவலைகளுக்கும் அடிப்படை. வயது முதிர்ச்சி, மரணம், அடுத்தவர் அன்பை இழந்துவிடுவோமோ ஆகியன மற்ற மூன்று பயங்கள்.

கடைசியாக, மனிதர்கள் தாங்கள் வெற்றி பெறாததற்கு கூறும் 57 காரணங்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது.' என்னிடம் பணமில்லை, கல்வியில்லை, குடும்பம் சரியில்லை, உடல் நலமில்லை, வாய்ப்புகள் அமையவில்லை ' மாதிரி.
 "வெற்றியின் ரகசியம் - நம்பிக்கையின் மந்திரசக்தி"- என்கிறார் நெப்போலியன் ஹில்.

அவர் இந்த ஒரு புத்தகம் பிரபலமாகி, அதிக பிரதிகள் விற்று நிறைய சம்பாதித்தார். 'The Law of Success' என்றொரு நூலையும் எழுதியுள்ளார் மற்றபடி அவர் பெரும் பணக்காரர் ஆகிவிடவில்லை. இப்போது நிறைய பேர், இந்த புத்தகத்தை வைத்து எல்லோரையும் பணக்காரர்களாக்குகிறோமென்று இன்ஸ்டிடியூட், கோர்ஸ் என்று கல்லா கட்டுகிறார்கள்.

இந்த புத்தகத்தை எனக்கு திருமண பரிசாக நண்பர் ஒருவர் அளித்தார் (1995). அவருக்கு அப்போது 65 வயதிருக்கும். ஓரளவிற்கு வசதியானவர். அப்போதே கோவை புலியகுளத்தில் 8 வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுடன் பார்க்க சென்றிருந்தேன். அப்போது அவர் படுக்கையில் இந்த புத்தகம் வைத்திருந்தார். உடன் ஒரு நோட்டும் இருந்தது. நான் ஒரு ஆர்வத்தில் அங்கு யாருக்கும் தெரியாமல் அந்த நோட்டை திறந்து பார்த்த போது, அந்த நோட்டு முழுக்க ''ஒரு கோடி பணம் வேண்டும்" என்று, 1008 முறை ராமஜெயம் என்று எழுதுவார்களே, அது போல எழுதி இருந்தது. இந்த புத்தகம் நினைவிற்கு வரும்போதெல்லாம், எனக்கு அந்த சம்பவம் ஞாபகம் வரும். அந்த ஆண்டு அவர் இறந்து விட்டார்.

How to win Friends & Influence People  - Dale Carnegie ( தமிழில் -  நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?)
                        (தமிழ்ல தலைப்பைப் படிக்கும்போதே மூச்சு வாங்குதே..)
அதே 1937 ல் வெளிவந்து சக்கை போடு போட்ட புத்தகம். எழுதியவர் டேல் கார்னகி
என்ற பேராசிரியர். இவர் ' மனித உறவுகளை (Interpersonal Skills) மேம்படுத்துதல் புத்தகங்கள் மூலம் 
 பிரபலமானார்.
இந்த புத்தகத்தில், மக்களைக் கையாளும் வழிகள், நம்மை மக்கள் விரும்பவைக்க வழிகள், நமது சிந்தனை மூலம் மக்களை வெற்றி கொள்ளுதல், தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் ஆகிய 4 பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 3 முதல் 12 வரை கொள்கைகள் (Principles) வகுக்கிறார். அவற்றை தனது வாழ்விலும், மற்றவர்களின் வாழ்விலும் நிகழ்ந்தவற்றைக் கூறி விளக்குகிறார்.
அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். மற்றதெல்லாம், எனது
பார்வையில்,  பைக் ஓட்டும்போது சைட் ஸ்டாண்ட் எடுக்க வேண்டும், இரவில் லைட் போட வேண்டும் என்ற அளவில்தான் உள்ளன.
  • மற்றவர்கள் மீது விமர்சனம் செய்வதோ, கண்டனம் தெரிவிப்பதோ, புகார் கூறுவதோ கூடுமானவரை தவிருங்கள்.
  • உண்மையான மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.
  • அடுத்தவர்கள்மீது உண்மையான அக்கறை காட்டுங்கள்.
  • ஒவ்வொருவருக்கும் அவர்கள் பெயர்கள்தான் இனிமையானது. அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு பேசுங்கள். பெயர்களை மறந்துவிடாதீர்கள்.
  • மற்றவர்களை அதிகம் பேச விடுங்கள். அக்கறையோடு காது கொடுத்து கேளுங்கள்.
  • அடுத்தவர்களின் துறை, அவர்கள் விருப்பம் இவற்றைக் குறித்தே அதிகம் பேசுங்கள்.
  • வாக்குவாதங்களைத் தவிருங்கள். 
  • அடுத்தவர் பார்வையிலிருந்தும் விஷயங்களை அணுகுங்கள்.
  • பேசுவதை வாழ்த்துக்களிலோ, அவர்களைப் புகழ்வதிலோ துவங்குங்கள்.
  • ஒருவருக்கு வேலை சொல்ல உத்தரவிடாதீர்கள், கேள்வியாக கேளுங்கள். ( செய் என்று சொல்லாமல் 'செய்ய முடியுமா? 'என்று கேட்பது)
           Your Network is Networth!
அவ்வளவுதாங்க! விலாவாரியா தெரிஞ்சுக்க அமேசான்ல வாங்கி படியுங்கள். இன்னும் தெரிந்து உலக மக்களை ஈர்க்கணும்னா கோர்ஸ் எல்லாம் உண்டு. பணம் கட்டி படியுங்கள் மக்களே!
 கூடவே அவரோட இன்னும் ஒரு நூலையும் பார்த்துவிடுவோம்.

How to Stop worrying and Start Living  - Dale Carnegie ( தமிழில் -  கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?)

சுய உதவி புத்தகமான இதுவும் உலக அளவில் அதிக பிரதிகள் விற்ற புத்தகம். டேல் கார்னகி டிரெயினிங் கோர்ஸ்களும் உண்டு.
இந்த புத்தகத்தில் உள்ள தலைப்புகள் மட்டும் கொடுக்கிறேன். அதுவே எனக்கு முழுவதும் படித்த உணர்வு.
  • நிகழ்காலத்தில் வாழுங்கள்
  • கவலைகளைத் தோற்றுவிக்கும் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்ப்பது எப்படி?
  • தொழில் குறித்த கவலைகளை 50%  தவிர்ப்பது எப்படி?
  • கவலை உங்களை நாசமாக்குவதற்கு முன்னால் அதை தீர்ப்பது எப்படி?
  • பழிக்கு பழி வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
  • மரத்தூளை ரம்பத்தால் அறுக்க முயற்சிக்காதீர்கள்!
  • இறந்து போன நாயை எவரும் எட்டி உதைப்பதில்லை (on criticism)
  • பணப்பிரச்னை குறித்த கவலைகளை குறைப்பது எப்படி?
  • களைப்பு, கவலை, கோபம் ஆகியவற்றை உருவாக்கும் சலிப்பைக் களைவது எப்படி?
  • தூக்கமின்மை பற்றி கவலைப்படுவதை தவிர்ப்பது எப்படி ? (புரியுதா?)
  • கவலைகளை எப்படி வென்றார்கள் - 32 உண்மைக் கதைகள்.
விரிவாக படிக்க அமேசானில் ஆர்டர் பண்ணுங்கள். இவரது மற்ற புத்தகங்கள்- How to enjoy your life and job, The art of Public Speaking, The Leader in you.
இவரோட ஒரு மேற்கோள் (Quote) - "Remember, Today is the Tomorrow, you worried about Yesterday" (படிச்சவுடன் எனக்கு புல்லரிக்குது)


மேலும் சில புத்தகங்களைப் பற்றி அடுத்த ப்ளாக்கில்..









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....