முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணங்கள் முடிவதில்லை

 பயணம்

"பயணம்                                                                                                     
பத்து மாத சித்திரமொன்று ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்"
என்று எம். எஸ்.வி பாடிய சினிமாப் பாடல் ஒன்று உண்டு. நம் வாழ்க்கையையே பயணம் என்றுதான் சொல்கிறோம். அதில்தான் எத்தனை விதமான பயணங்கள். 

எப்போதோ படித்த ஞாபகம் " உலகம் ஒரு புத்தகம். நீ பயணிக்கவில்லை என்றால், முதல் பக்கத்திலேயே நிற்கிறீர்கள் என்று அர்த்தம்"

மனிதன் ஆப்ரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் பயணப்பட்டதாக (The Human Journey) ஒரு கோட்பாடு உண்டு. யூ டியூபில் ' The Incredible Human Journey(2009) by Alice Roberts ' என்ற ஆவணப்படத்தை முடிந்தால் பாருங்கள். சுவராசியமாக உள்ளது.  கற்கால மனிதனில் இருந்து நவீன உலகிற்கு வந்திருப்பது எவ்வளவு நீண்ட பயணம்!

உலகத்தில் புகழ் பெற்ற கடற்பயணிகளாக, கொலம்பஸும், வாஸ்கோடகாமாவும் அறியப்படுகின்றனர். ஆனால், நமது ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் பதிவு செய்யத் தவறிவிட்டோம். 
இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய தேசங்கள், உலகெங்கும் பயணம் செய்து, கொள்ளையடிப்பது, நாடுகளைப் பிடிப்பது, மற்ற பண்பாடுகளை சிதைத்து, தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அடிமைகள் என்ற எண்ணங்களை அந்த மக்கள் மனதில் விதைக்க, வரலாறுகளை திருத்தி எழுதியது, போன்ற செயல்களில் ஈடுபட்டதை அறிவோம்.
யுவான் சுவாங்

உலகத்திலேயே  புகழ்பெற்ற பயணி யுவான் சுவாங் (Xuan Zang). புத்த மத நூல்களைத் திரட்ட இந்தியா வந்த அவர் நமது காஞ்சிபுரம் வரை வந்து, வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார். 17 ஆண்டுகால பயணம் அது. அவருக்கு முன்னேயே பாஹியான் (Fa Xiang) என்ற யாத்ரிகர் புத்த மத நூல்களைத் தேடி இந்தியா வந்திருக்கிறார். இவர்களது காலகட்டம் கிறிஸ்துவுக்கு பிந்தையது என்று ஆங்கிலேயர்களால் வரலாற்றில் திருத்தப்பட்டது என்ற சர்ச்சை புத்த மதத்தினரிடையே உண்டு. சரி, இந்தியாவிலிருந்து புத்த மதம் கீழைநாடுகளுக்கு எப்படி பயணப்பட்டது என்ற வரலாறு நமக்கு கற்பிக்கப்பட்டதா? அதேபோல்தான் போதிதர்மரின் பயணமும்.. அவர் இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே சீனாவில் உள்ளது. எங்கிருந்து வந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

'நிக்கொலா மனுச்சி' (Niccolao Manucci) யைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  1653 ல் தனது 14 வயதில் இத்தாலியின் வெனிசில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். ஷாஜஹான் 
நிக்கோலா மனுச்சி
காலத்தில், ஹென்றி பேர்டு என்ற இங்கிலாந்தின் தூதுவருக்கு வேலையாளாக இந்தியா வருகிறார். பின் ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை  வீரனாகவும், மொகலாய அரசவை மருத்துவராகவும் பணியாற்றியவர். மன்னர் ஷா ஆலமின் கோபத்திற்கு ஆளாகி சிறைப்பிடிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி கோல்கொண்டா மன்னரின் அரசவையில் மருத்துவராகிறார்.  இறுதியில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார். மொகலாய ஆட்சியின்போது தான் பெற்ற அனுபவங்களை 'மொகலாய இந்தியாவில் எனது பயணக்குறிப்புகள்'
(Storia do mogor) என்ற நூலாக எழுதியுள்ளார்.
 
 வரலாறு பயணப்படுபவர்களையே பதிவு செய்கிறது. செல்வத்தை தேடி, அதிகாரத்தை தேடி, அறிவைத்தேடி, ஆன்மீகத்தைத் தேடி, காதலைத் தேடி பயணப்பட்டவர்களே வரலாற்று நாயகர்கள். சம காலத்தில், சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, கமலா ஹாரிஸின் தாயார் எல்லோரும் பயணப்பட்டதால்தான் உயர்ந்துள்ளனர்.

எனது கல்லூரி காலத்தில் ராகுல சாங்கிருத்தியாயனின் " ஊர் சுற்றிப்புராணம்"
படித்திருக்கிறேன்
. அவர் 45 ஆண்டுகாலம் இந்தியா முழுதும், திபெத், ஈரான், சீனா,
சோவியத் யூனியன் என்று சுற்றியவர். பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த அவர் 130 நூல்கள் எழுதியுள்ளார் (அவரது "வால்காவிலிருந்து கங்கைவரை" - Master Piece).  ஊர் சுற்றிப்புராணம் பயணக்கட்டுரைகள் அல்ல. ஊர் சுற்றிகளுக்கான வழிகாட்டி.
ஊர் சுற்றிப்புராணத்தில் அவர் எழுதியுள்ளது," உலகின் பெரிய மஹான்களெல்லாம் ஊர் சுற்றிகள்தான். மகாவீரர், சங்கரர், குருநானக், தயானந்தர் எல்லோரும் ஊர் சுற்றிகள். ஊர் சுற்றிகளுக்கெல்லாம் அரசர்- புத்தர். புத்தர் கூறியபடி, மாரிக்காலம் 3 மாதம் தவிர மற்ற மாதங்களெல்லாம் ஊர் சுற்ற வேண்டும். நட, நடந்துகொண்டேயிரு என்கிறது உபநிடதங்கள். " தானுண்டு தன்வேலையுண்டு என்று வாழ்வது மரத்தில் கட்டப்பட்ட மாடு போன்ற வாழ்க்கை என்பார் ராகுல்ஜி. இந்தப்புத்தகத்தை முழுவதும் படித்தால், அப்போதே ஊர் சுற்ற கிளம்பவேண்டும் என்று தோன்றும்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களது எழுத்துக்களும் எனக்கு மிகவும்
பிடிக்கும். அவர் சுற்றிய ஊர்களைப் பற்றி 'தேசாந்திரி ' புத்தகத்தில் சுவராசியமாக எழுதியிருப்பார். "உலகம் பெரியது எனினும் உலகை அறிய நினைக்கும் மனித ஆசை அதைவிடப் பெரியது. எல்லா இரவு பகலிலும் யாரோ ஒரு மனிதனின் கால்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எல்லாப் பக்கமும் திறந்து கிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மை கொண்டு செல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை!" என்பார். அற்புதமான புத்தகம்.

எனது கல்லூரி காலத்தில் எழுத்தாளர்களில் 'பயணக் கட்டுரைகள் எழுதுவது ஒரு பேஷனாக இருந்தது. (படு போர்) அப்பொது நெ.து.சுந்தரவடிவேலு, மணியன் போன்றோர் எழுதிகொண்டிருந்தனர். இப்போது போக்குவரத்து, தொலைத் தொடர்பு பெருகிவிட்ட இன்டர்நெட் காலத்தில் அது அவசியமில்லாமல் போய்விட்டது.(தப்பிச்சோம்)

சே குவாராவின் ( நம்ம ஊர் பசங்களின் பனியனில் இருப்பாரே) மோட்டார் சைக்கிள் டைரிகள் (The Motorcycle Diaries) புகழ்பெற்ற புத்தகம் (தமிழில் கூட வந்துள்ளது). அவர் புரட்சியாளராக மாறுவதற்கு முன்னால், 1951 ல், 8 மாத காலம் மோட்டார் சைக்கிளில் அர்ஜென்டினாவிலிருந்து, சிலி, பெரு, பிரேசில், கொலம்பியா வழியாக வெனிசுலா வரை பயணம் செய்ததை எழுதி இருப்பார். 

நம் எல்லோருக்கும் சாகச பயணக்கதைகள் (Adventures) மிகவும் பிடிக்கும். இன்றைக்கும் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்ட சாகச பயணக்கதைகளைத்தான் சொல்கிறோம்.
விக்கிரமாதித்தன், அரேபிய கதைகளான சிந்துபாத், அலாவுதீன் போன்ற கதைகளைக் கேட்கும்போது நாமும் அந்த உலகத்துக்குள் பயணிக்கிறோம். சிறு வயதில் உண்மையிலேயே அந்த உலகத்துக்குள் போக மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறோம். 
உலகப் புகழ் பெற்ற ஆங்கில சாகச பயணக் கதைகள் சில- Around the World in 80 days, Journey to the centre of the Earth, Treasure Island. Gulliver's Travels. மேலும் காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாமே சாகச பயணங்கள்தான். முத்து காமிக்ஸ் கதைகள் இப்போதும் எனக்கு பிடிக்கும். ஆங்கில காமிக்ஸ்  பிற்காலத்தில்தான் எனக்கு அறிமுகமானதால் அவ்வளவு கவரவில்லை.
 
இன்றைக்கு வரும் ஹாலிவுட் படங்களில் பெரும்பான்மையானவை சாகச பயணங்கள். கற்பனையானாலும் அவையே நமக்கு கிளர்ச்சியூட்டுகின்றன. படம் பார்க்கும்போது, நாயகனுடன் நாமும் பயணிக்கிற உணர்வைப் பெறுகிறோம். பிரபலமான அட்வென்சர் திரைப்படங்கள் சில- Mackenna's Gold, Raiders of the Lost Ark, Indiana Jones series, Jumanji, Pirates of the caribbean series, Harry Portar series, National Treasure, Space Travel films, so on.

மேலும் ஹாலிவுட்டில் பயண சினிமாக்கள் Road Films  நிறைய உண்டு. எனக்குப் பிடித்த சில படங்கள் - Its a mad mad mad mad world 1963, The cannon ball run 1981, Rainman 1988, Planes, Trains & Automobiles 1987 (நம்ம ஊர்ல 'அன்பே சிவம்'),  Madmax இன்னும் சில. 

பயணத்தோடு வாழ்க்கையின் அர்த்தத்தையும் அழகாகச் சொன்னது ' எவடே சுப்ரமணியம்' (Yevade Subramanyam) என்ற ஒரு தெலுங்கு படம். 2015 ல் வந்த இந்த படத்தில் இமயமலையில் உள்ள 'தூத் காசி (Dudh kashi) ' என்ற நதிக்கு பயணம் செல்வார்கள். நானி, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள இந்த படத்தை ஒருமுறை பாருங்கள்.

அதே போல மலையாளத்தில், "சார்லி' Charlie (தமிழில்- மாறா) மற்றும் "நார்த் 24 காதம்"(North 24 Kadham) இரண்டும் என்னை மிகவும் கவர்ந்த பயண சினிமாக்கள்.. 

பொதுவாக, சொந்த ஊரிலேயே தொழிலோ, வேலையோ செய்வது பாக்கியம் என்பார்கள். அவர்கள் சுகமாக இருப்பதாக (Comfort Zone) எண்ணுகிறார்கள்.               மனிதன் தாவரங்களைப் போல ஒரே இடத்தில் வாழ்வது ஏற்புடையதல்ல என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். பதற்றம் ( Anxiety), மன அழுத்தத்தாலும் (Depression), சோர்வினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் பரிந்துரைப்பது பயணங்கள் தான். அதற்காக கடன் வாங்கிவிட்டு ஊரைவிட்டு ஓடுவது இந்த வகையில் சேராது.

கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்களை உலக அறிவு கொண்டவர்களாக, அனுபவசாலிகளாக மாற்றுவது பயணங்கள். பழங்காலத்தில் இல்லற வாழ்க்கையின் கடமைகள் முடிந்துவிட்டால், வட இந்தியர்கள்   ராமேஸ்வரத்திற்கும் தென் இந்தியர்கள் காசிக்கும் யாத்திரை சென்றனர்.

தேடல்கள் உள்ள மனிதர்களாக, சுதந்திரமாக வாழ்க்கையின் அழகை ரசிக்க நினைப்போருக்கு பயணங்கள் அவசியம். பயணிப்போம்!






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி  இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல .. அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா .. அவ என்ன சொன்னாலும் பிடிக்கும் , எது பேசினாலும் பிடிக்கும் , பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும் , கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான் .   ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து , நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு , நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா ..   சாப்பிட்டியா என்ன பண்றே   பைக் பார்த்து கவனமா ஓட்டு உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா .. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா .. கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா .. சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா .. பல காயங்களுக்கு மருந்து போடுவா , சில காயங்களுக்கு அவளே காரணமாவா .. இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா .. அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா .. ஒரு பெ...