வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி
நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். 'லீசா' மற்றும் 'குடும்பம்' அமைப்புகள் மூலமாக 'கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.
1996ல் மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம் மேற்கொண்டார்.(மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்புக்களை வழங்கலாமே என்றார்.
இவரது சேவையைப் பாராட்டி, திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
இறுதி காலம் வரை இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல், விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக ஓய்வு இல்லாமல் உழைத்தவர், 2013, டிசம்பர் 30ம் நாள் இயற்கையுடன் இணைந்து விட்டார்.
அவர், இயற்கை வேளாண்மைக்காக 15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்' என்ற தலைப்பில் சுயசரிதையை விகடன் பிரசுரம் வெளியிட்டது. அந்த நூலின் சுருக்கத்தை வழங்குவதே இந்தக் கட்டுரை.
'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்' - கோ. நம்மாழ்வார்
1963ல் இருந்து, கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில், பண்ணை மேலாளராகபணியாற்றி, 1969ல் அந்த பணியைத் துறப்பதாக பேச ஆரம்பிக்கிறார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் பட்டம் பெற்றவர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமும் அமெரிக்க எண்ணெய் கம்பெனி ராக்பெல்லர் நிறுவனமும், புதிய ஒட்டுரக சோளம், கம்பு விதைகளை உண்டு பண்ணி கோவில்பட்டிக்கு அனுப்பினார்கள். அவற்றுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி நஞ்சுகளைப் பரிந்துரைக்கின்றனர். ஒட்டுரக விதைகள், முற்றிலும் வேறுபட்ட இரண்டு செடிகளின் மகரந்தத்தையும் சூலையும் ஒட்டுக் கட்டி தயாரிக்கப்பட்டவை.
நம்முடைய விதைகள் பொறுக்கு விதை முறையில் தனித் தேர்வு (Pure Line Selection) செய்யப்பட்டவை. இந்த முறையில் நன்கு விளைந்துள்ள சில கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து, உலர்த்தி, மணிகளை உதிர்த்து சேமித்து, தனி நிலத்தில் விதைப்பார்கள். இவற்றை மீண்டும் மீண்டும் செய்வதே பொறுக்கு விதைகள்.
ஓட்டுரக விதைகள் விளைச்சலில் இருந்து மறுபடி விதை எடுக்க முடியாது. எடுத்தாலும் பயனில்லை. கதிரில் மணி பிடிக்காது. அமோக விளைச்சல் ரகங்கள் (High Yielding Varieties) என கொடுக்கப்பட்ட அவை அமோகமாக விளையாதது மட்டுமல்ல, பக்க விளைவுகள் அதிகமாக இருந்தன.
மழை பொய்த்தால் இன்னும் சிரமம். வானம் பார்த்த பூமியில் நிச்சயமற்ற வேளாண்மை. பணச் செலவு மிகுந்த இந்த சாகுபடி உழவர்களை எப்படிக் காப்பாற்றும்? என்று யோசித்துக் கொண்டே சொந்த ஊர், சின்ன வயது ஞாபகங்கள் என ப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பிக்கிறார்.
இவரது சொந்த ஊர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு. சிறுவயதில் முதன்முதலாக ஏர் பிடித்த (மேழிப்பால் குடித்தல் என்று பெயராம்) நினைவுகளைப் பகிர்கிறார். அதேபோல் முதல் விதை நட்டதையும் நினைவுகூர்கிறார்.
வெள்ளையர்கள், தற்சார்பாக இருந்த நம் கிராமங்களைச் சிதைத்து, பொருள் உற்பத்தியை வணிகமயமாக்கினார்கள்.
நெசவு, அரவை மில், எண்ணெய் செக்கு போன்ற தொழில்களில் வேலைக்கு மாற்றாக உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நம்மிடையே இருந்த தற்சார்பு முறை, இயற்கையோடு இயைந்தது. (நெசவு கூலிக்கு நெல், அரவைக் கூலிக்கு தவிடு,
நெல்லைக் கொடுத்து எள். இப்படி..) இன்று அவற்றை அழித்து வெள்ளைச் சர்க்கரை, கலப்பட எண்ணெய், அரிசி என வணிகமயமாக்கப்பட்டுவிட்டது.
நெல்லைக் கொடுத்து எள். இப்படி..) இன்று அவற்றை அழித்து வெள்ளைச் சர்க்கரை, கலப்பட எண்ணெய், அரிசி என வணிகமயமாக்கப்பட்டுவிட்டது.
முத்துச் சம்பா, கட்டைச் சம்பா, தங்கச்சம்பா, குரங்குச்சம்பா, கொடி வெள்ளை எனப் பல நெல்வகைகள் இருந்தன. அவை மனிதர்களுக்கு நெல்லையும், மாட்டுக்கு வைக்கோலையும் வாரி வாரிக் கொடுத்தன.
அவரது அண்ணன் திருவேங்கடம் காந்தி கிராமத்தில் பயிற்சி பெற்று விவசாயத்தில் இயற்கை உரங்கள், நெல் நடவு பற்றிய ஆலோசனைகளை சொல்கிறார். மாட்டின் சாணம் மட்டுமல்ல, மூத்திரமும் நிலத்திற்கு உரம்: மனிதக் கழிவுகளும் கூட ( 'காப்பான் ' படத்தில் வருமே) உரம் தான் என்கிறார்.
தான் படித்த பள்ளி ஆசிரியர்கள், அனுபவங்களைப் பகிர்கிறார்
நம்மாழ்வார், பூண்டி கலை அறிவியல் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் சேர்கிறார்.
இயற்கைப் பகுப்பாய்வு
'நிலம், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்தும் கலந்த மயக்கம் இவ்வுலகு' என்கிறது தொல்காப்பியம். நீங்களும் நானும் உள்பட உலகத்தில் உள்ள அனைத்தும் ஐந்து பூதங்களின் சேர்க்கையாகும். ஐம்பூதங்களுக்கும் உயிர் கிடையாது. எனவே இவற்றை ' உயிரில்லா இயற்கை' என்கிறோம்.
உயிர் இயக்கத்தில் விலங்கினம், செடியினம் என இரு பிரிவு. செடி கொடி, மரங்களில்
இரண்டு பிரிவுகள் - பூவா தாவரங்கள், பூக்கும் தாவரங்கள். பூக்கும் தாவரங்களிலும் இரு வகை- நாம் பயிரிட்டு உண்ணும் செடி, கொடிகள் 6 மதம், 1 வருடம் மட்டுமே வாழ்ந்து மறைகின்றன. இரண்டாவது பல்லாண்டு வாழும் செடி, கொடி, மரங்கள்.
விலங்கினங்கள் தாவரங்களைப் போல் உணவு உற்பத்தி செய்வதில்லை. உயிர்வாழ தாவரங்களைச் சார்ந்து உள்ளன அல்லது தாவரங்களை உண்ணும் விலங்குகளைச் சார்ந்து உள்ளன. இவற்றிலும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை குட்டி போடுபவை முதுகெலும்பு உள்ள விலங்குகள்.அவற்றில் மனிதர்கள் சிந்திக்க கூடிய விலங்குகள்.
உயிரினங்களை ஐந்து வகையாகப் பிரிக்கிறது, தொல்காப்பியம். தொடு உணர்வு மட்டுமே கொண்ட மரம், செடி, கொடி எல்லாம் 'ஓர் அறிவு உடையன'. இவைகளுக்கு இயக்கம் கிடையாது. தொடு உணர்வோடு, சுவை உணர்வும் கொண்டவை ஈரறிவுடையவை. தொடுதல், சுவைத்தல் மற்றும் நுகரும் ஆற்றல் கொண்டவை மூவறிவுள்ளவை. நான்கறிவு உள்ளவற்றுக்கு செவி புலன் வலர்ச்சி அடைந்துள்ளது. ஐந்தறிவுள்ளவை, கூர்மையான பார்வையைப் பெற்றுள்ளன. மனம் என்ற ஒன்று இருப்பதால் மனிதருக்கு ஆறறிவு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பூஞ்சை வகை உயிரினஙகள் பாலை, வெண்ணைய், மோர் என மாற்றுகின்றன. தோசை மாவைப் புளிக்க வைக்கின்றன. இவை செடிகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
செடிகளில் உள்ள குளோரோஃபில் உற்பத்தியில் நைட்ரஜன் என்ற காற்று முக்கிய பங்காற்றுகிறது. நாம் உள்வாங்கி வெளியிடும் சுவாசக் காற்றில் 78% நைட்ரஜன் உள்ளது. இந்தக் காற்றை அம்மோனியாவாக மாற்றி, யூரியா தயாரிக்கப்படுகிறது. இந்த யூரியாவைக் கலந்து டி.ஏ.பி தயாரிக்கப்படுகிறது.
வேர்க்கடலைச் செடியின் வேரில் உள்ள குமிழ்கள் செடிக்கு நைட்ரஜனை வழங்குகின்றன. செடியின் வேரில் இருந்து வரும் இந்தக் காற்றை ஒரு பூஞ்சனம் வழங்குகிறது. இது போன்று பன்னிரண்டாயிரம் செடி, கொடி, மரங்கள் உள்ளன. அவரை, துவரை, மொச்சை, பயறு, உளுந்து, கடலை போன்ற தானே வளர்ந்து, மலரும் தாவரங்கள் தானியப் பயிர்களுக்கும், எண்ண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் உதவி புரிகின்றன. இதை உணர்ந்த நமது மூதாதையர், கலப்பு பயிர் சாகுபடி, பயிர் சுழற்சி முறையைக் கையாண்டு, கடன்படா வேளாண்மையைக் கடைப்பிடித்து வந்தார்கள். இதுவே இயற்கை வழி வேளாண்மை.
வேளாண்கல்லூரியின் வேளாண்பண்ணையில் கலப்பையைப் பிரித்து பூட்டுவது முதல், அறுவடை முடித்து, பயிர்களில் தானியம் பிரிப்பதுவரை அனைத்து பணிகளையும் மனநிறைவோடு செய்ததாகக் கூறுகிறார். ஏர் உழும் மாடுகள், ஏர் உழுதல், கால்நடை மருத்துவமும் கற்றுக் கொண்டார். அவர் தோட்டக் கலைப் பேராசிரியரிடம் பப்பாளியைப் பற்றி கற்றுக் கொண்டதைக் குறிப்பிடுகிறார்.
பப்பாளி: பப்பாளி விதைகளைப் பழ த்திலிருந்து எடுத்தவுடனே முளைக்கப் போடவேண்டும். வைத்திருந்து விதைத்தால் முளைக்க நாளாகும். அல்லது முளைப்புத் தன்மை குறைவாக இருக்கும். 20 பெண் மரங்களுக்கு ஒரு ஆண்மரம் தேவை. ஆண்மரம் 5 மாதத்தில் பூக்கும். உடனே தேவையில்லாத மரங்களையெல்லாம் களைந்துவிட வேண்டும். 7 மாதங்களில் காய்க்கத் தொடங்கி 10 மாதங்களில் பழம் தரும்.
பப்பாளி மரத்தின் இலைகள் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகின்றன. காலை உணவுக்கு பப்பாளி பழம் உகந்தது. இதில் வைட்டமின்கள் ஏ,பி,சி மூன்றும் உள்ளன. பப்பாளி பால் சதையை இளக்குகிறது. ஆதலால், முகத்தில் பூசக்கூடிய அழகு சாதனங்களில் பப்பாளிப் பால் சேர்க்கப்படுகிறது.
ஜி.டி.நாயுடு.. தமிழகம் கண்டுகொள்ளாமல் விட்ட விந்தை விஞ்ஞானி:
கோவையின் ஜி.டி.நாயுடு அவர்கள் பற்றி குறிப்பிடுகிறார். அவர் வேளாண்கல்லூரியில் ஆற்றிய உரையை நினைவு கூர்கிறார். உணவில் புரதத்தை அதிகம் கொடுக்கும் பருப்பு துவரை. அது மானாவாரி (மழையை நம்பி பயிரிடுதல்) பயிர். செடியாக இருந்தால்தானே மழையை எதிர்பார்த்து விதைக்க வேண்டும். அதை மரமாக்கி விட்டால், மழையில்லாவிட்டால் விளைச்சல் குறையும். மற்றபடி மரம் அழியாது என்று மரமாக்கியவர் 'ஜி,டி,நாயுடு துவரை' என்று பெயர்.
ஜி.டி. நாயுடுவின் மூளையை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது என்கிறார் நம்மாழ்வார்.
முதலில் குறிப்பிட்ட துபோல, வேளாண் பட்டதாரியாகி, கோவில்பட்டி வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி, வேலையைத் துறக்கிறார்.
பிறகு களக்காடு ஒன்றியத்தில் பெல்ஜியம் நாட்டவரின் பண்ணையில் சேர்கிறார்.
அங்கு பண்ணை அனுபவங்களைத் தவிர, வடகரையில்பொது வாழ்க்கையில் ஈடுபட்டதையும், கம்யூனிசம், மக்கள் வாழ்க்கைத் தரம் உயர சேவை ஆற்றியவர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
அடுத்து, தர்மபுரி, மோட்ராகி, நாட்டார்பள்ளி,பூதலூர் ஆகிய இட்ங்களில் ஆற்றிய பணிகளை சுவராசியமாக எழுதியுள்ளார். சமூகப் பொருளாதார மாற்றத்துக்காக 'செயல்பாட்டுக்குழுக்களின் கூட்டமைப்பு' (Federation of Action Groups) உருவாக்கி பணியாற்றுகிறார். பிறகு இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்புகிறார்.
இந்த அத்தியாயங்கள் வரை நம்மாழ்வார் எழுதினார். அவர் இறந்தபின் அவரைப்பற்றி மற்றவர்கள் கூறுவதாக புத்தகம் தொடர்கிறது.
ஜெர்மனியில் நடந்த வேம்பு காப்புரிமை வழக்கில் இந்தியாவிற்காக போராடினார் நம்மாழ்வார். அவருடைய 'குடும்பம்' அமைப்பு, கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை இயற்கை வேளாண்மையில் குறிப்பிடத்தக்க பணியாற்றின.
அவருடைய பசுமைப் பயணம் அனைவரது நினைவிலும் என்றும் இருக்கும்.
அவரது மேலும் சில புத்தகங்கள்:
நம்மாழ்வார் அவர்களின் பேச்சுக்கள் நிறைய யூடியூபில் உள்ளன. கண்டு விவசாயத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக