வாழ்க நீ எம்மான்!
"இறைவா, என் நாட்டு மக்களுக்கு உள்ள உறுதியைக் கொடுத்து, கல்வியிலும், தொழிலிலும், விவசாயத்திலும், கணிப்பொறியிலும் உயர்ந்த நாடாக உழைத்து முன்னேற அருள் கொடையைக் கொடுப்பாயாக"
- இது கலாம் அய்யா அவர்கள் ஒரு பத்திரிகையில் எழுதிய பிரார்த்தனை. சற்றேநினைத்துப்பாருங்கள்; இன்றைய காலகட்டத்தில் நாட்டுக்காக பிரார்த்திக்கும் தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்த பிரார்த்தனையுடன் துவங்கும் 'அக்னிச்சிறகுகள்' என்ற கலாம் அய்யா அவர்களின் சுயசரிதையில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிவிப்பதே இந்தக் கட்டுரை.
அக்னிச்சிறகுகள் - ஆ.பி.ஜெ. அப்துல் கலாம்
கலாம், அவரது அன்னை ஆஷியம்மா அவர்கள் மீது கவிதை பாடித் தொடங்குகிறார் -
'கடல் அலைகள். பொன் மணல்,
'கடல் அலைகள். பொன் மணல்,
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே' - என்று துவங்கி, அவரது அன்பினை நினைவு கூர்ந்து
'நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்' - என்று முடிக்கிறார். (இப்போது உங்கள் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்).
.இந்தப் புத்தகத்தில் 5 அத்தியாயங்கள் உள்ளன.
1.முனைதல் (1931-1963)
தனது தந்தை, ஜைனுலாபுதீன் அவர்களின் ஞானத்தையும், தரும சிந்தனையையும், இளமைக்கால நினைவுகளாக கூறுகிறார். 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை நினைவு கூறும் விதமாக, அவர் கூறிய ஒரு அறிவுரையைக் குறிப்பிடுகிறார்.
"எத்தனை சிரமங்கள் வந்தாலும் அதற்கான காரண காரியங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பாதிப்புகள் வரும்போது உள்முகத் தேடலுக்கான வாய்ப்புகளும் கூடவே வரும்."
தனது சிந்தனையாக, 'சிறுவயதில் வானத்தில் பறக்கும் கொக்குகளையும். சீகல் பறவைகலையும் அடிக்கடி கவனித்துப் பார்ப்பேன். நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன் என்று எனக்குள்ளே திட்டவட்டமாக சொல்லிக் கொள்வேன்' என்கிறார்.
கலாமின் தந்தையின் நண்பரும், ராமேஸ்வரம் கோவிலில் தலைமைக் குருக்கள் இலக்ஷ்மண சாஸ்திரி அவர்களது அன்பையும், பள்ளி நண்பர்களையும் நினைவுகூர்கிறார். அதே போல மைத்துனர் ஜலாலுதீீீன் அவர்களின் அன்பையும் குறிப்பிடுகிறார்.
கலாம், இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், பின் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலையும் பயின்றவர். இலக்கியங்களிலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் உள்ளவர். பிறகு வானியலில் (Aerodynamics) ஆர்வம் கொண்டு எம். ஐ.டி யில் இணைகிறார்.அங்கு அவர் செய்த ப்ராஜெக்ட், தாழ்வாகப் பறந்து தாக்கும் விமானத்தின் டிசைன்.
அதன் பின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) 6 மாதம் விமானம் ஓவர்ஹாலிங் (overhauling) பயிற்சி எடுக்கிறார். விமானப்படையில் சேர விண்ணப்பிக்கிறார். ஆனால் கிடைக்கவில்லை. பிறகு DTD&P(Air) -Directorate of Technical Development & Production (Air) ல் சேர்ந்து சூப்பர்சோனிக் டார்கெட் விமானத்தை வடிவமைக்கும் குழுவில் இடம் பெறுகிறார். அப்போது பெங்களூரில் ADE (Aeronautical Development Establishment) என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அதில் 'நந்தி' என்ற ஹோவர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றிகரமாக முடிக்கிறார்.
(பறக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு கலாம் அவர்களின் இந்த முயற்சிகள் தூண்டுதலாக இருக்கும். இப்படி எல்லாம் அமைப்புகள் உள்ளதே எவ்வளவு பேருக்கு தெரியும்?)
அவரது வாழ்வின் முக்கிய திருப்பம் நிகழ்கிறது. டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களால் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு இந்திய விண்வெளி ஆய்வுக்குழுவில் (INCOSPAR) ராக்கெட் இன்ஜினியராக சேர்கிறார். அதிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் ராக்கெட் தளம் நிறுவும் பணியில் ஈடுபடுகிறார். அமெரிக்க நாஸாவில் சவுண்டிங் ராக்கெட் (Sounding Rocket) ஏவுவது பற்றிய 6 மாத பயிற்சிக்கு சென்று வருகிறார்.
2.படைத்தல் (1963 -1980)
இந்தியாவின் முதல் ராக்கெட் 1963, நவம்பர் 21 ல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதுநாஸாவில் தயாரிக்கப்பட்ட 'நைக்-அபாத்' என்ற சவுண்டிங் ராக்கெட். தொழில் நுட்பம் பெரிதாக முன்னேறாத அந்தக் காலத்தில், அந்த ராக்கெட் ஏவியதில் நிறைய வேலைகள் மேனுவலாக செய்ததை விவரிக்கிறார். விக்ரம் சாராபாய் அவர்களின் அர்ப்பணிப்பையும், தலைமைப்பண்புகளையும் பற்றி நிறைய எழுதியுள்ளார்.
தும்பா ராக்கெட் தளம் (TERLS) உருவெடுக்கிறது. அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்-VSSC என்று அழைக்கப்படுகிறது முதலாவதாக, 'ரோஹினி சவுண்டிங் ராக்கெட் திட்டம் ஆரம்பிக்கிறது. அதில் செயற்கைக்கோள் இணைக்கும் பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. கலாம். ராட்டோ ( RATO- Rocket-Assisted Takeoff) சிஸ்டத்தில் பணியாற்றுகிறார்.
(இந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே ஆங்கில கவிஞர்கள் ஜான் மில்டன், கலீல் ஜிப்ரான், பெர்னாட்ஷா, எலியட், எமர்சன், லூயி காரல் போன்றோரின் கவிதைகளை மேற்கோள் காட்டுகிறார்)
அப்போது, எதிர்கால செயற்கைக்கோள் ஏவுகலம் SLV (Satellite Launching Vehicle) உருவாக்க திட்டமிடுகிறார்கள். 1968ல் இந்திய ராக்கெட் சொஸைட்டியை ஏர்படுத்துகிறார்கள். அணுசக்திதுறையின் கீழே "இந்திய விண்வெளி அமைப்பு"ISRO உருவாக்கப்படுகிறது. ISRO 1975 ல் அரசு அமைப்பாக மாறியது.
கலாம், எஸ்.எல்.வி-3 ன் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். அந்தப் பணியைப் பற்றியும்,அதில் வரும் இடர்ப்பாடுகளையும் விளக்குகிறார். அப்போது டி.என்.சேஷன் (எலக்ஷ்ன் கமிஷனர் புகழ்) விண்வெளித் துறையின் இணைச் செயலர். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
அவரது, தந்தை, மைத்துனர் ஜலாலுதீன், தாயார் ஆகியோரின் மரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன.
1979 ஆகஸ்ட் 10 ல் SLV-3 விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டின் முதற்கட்ட பயணம் வெற்றிகரமாக நிகழ்ந்து, இரண்டாவது கட்டத்தில், கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.மிகுந்த ஏமாற்றம். கோபம், விரக்தி அடைகிறார். அவரது வாழ்க்கையில் செயலாற்றிய ஹோவர் விமானம், ராட்டோ திட்டம். எஸ்.எல்.வி-டைமண்ட், இப்போது எஸ்.எல்.வி-3 ஆகிய எல்லாமே தோல்வியுற்றதாக மனவாட்டமுறுகிறார்.
VSSC யின் இயக்குனர் டாக்டர் பிரம்மபிரகாஷ் அவரைத் தேற்றி, ஆறுதல் அளித்து ஊக்கமூட்டியதை நன்றியோடு நினைவுகூர்கிறார். எஸ்.எல்.வி-3 தோல்விக்கான காரணங்களை குழுவினருடன் அலசுகிறார். ISRO தலைவர் பேராசிரியர் தவான் மிகுந்த ஆதரவளிக்கிறார்.
1980 ஜுலை18ல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ரோஹினி, ஏவுகலம் (SLV) SHAR ல் இருந்து விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்மூலம் உலகின் குறிப்பிட்ட நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்று சரித்திர சாதனை படைத்தது.
VSSC விரிவுபடுத்தப்படுகிறது.
இடையிடையே பணியிடத்து அரசியலையும் குறிப்பிடுகிறார். ஆனால் யாரையும் குறிப்பிடவில்லை. பொதுவாக குறிப்பிட்டு மனவருத்தத்தை இப்படி கூறுகிறார்-
"மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக்கொண்டு நான் என்றுமே வாழ்ந்ததில்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது, எனது இயல்புதான் ஈவிரக்கமற்ற சாதனையாளராகவோ, கொடூரமான தலைவராகவோ, சுரண்டல் புத்தி கொண்ட உயரதிகாரியாகவோ அல்லது குழப்பமும் மர்மமும் சூழ்ந்தவனாகவோ நான் இருந்ததே கிடையாது."
1981ல் அணுவிஞ்ஞானி ராஜா ராமண்ணாவைச் சந்திக்கிறார். ராஜா ராமண்ணா, பொக்ரானில் முதல் அணுவெடிப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியவர். அவர் இவரிடம், DRDL (Defence Research and Development Laboratory) ல் சேர்ந்து வழிகாட்டியபடி இலக்கைத் தாக்கும் ஏவுகணை GDMP (Guided Missile Development Programme) திட்டத்திற்கு வடிவம் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறீர்களா? என்று கேட்கிறார்.
"மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக்கொண்டு நான் என்றுமே வாழ்ந்ததில்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது, எனது இயல்புதான் ஈவிரக்கமற்ற சாதனையாளராகவோ, கொடூரமான தலைவராகவோ, சுரண்டல் புத்தி கொண்ட உயரதிகாரியாகவோ அல்லது குழப்பமும் மர்மமும் சூழ்ந்தவனாகவோ நான் இருந்ததே கிடையாது."
1981ல் அணுவிஞ்ஞானி ராஜா ராமண்ணாவைச் சந்திக்கிறார். ராஜா ராமண்ணா, பொக்ரானில் முதல் அணுவெடிப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியவர். அவர் இவரிடம், DRDL (Defence Research and Development Laboratory) ல் சேர்ந்து வழிகாட்டியபடி இலக்கைத் தாக்கும் ஏவுகணை GDMP (Guided Missile Development Programme) திட்டத்திற்கு வடிவம் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறீர்களா? என்று கேட்கிறார்.
1981ல் 'பத்மபூஷண்' விருது பெறுகிறார்.
3.அமைதிப்படுத்துதல்(1981 -1991)
கலாம் அவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் விஞ்ஞானத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
1982, ஜூன்1. DRDL ஆய்வுக்கூடத்தில் பணியில் சேர்கிறார். ஏற்கனவே DRDL, ப்ராஜெக்ட் டெவில் (Project Devil) என்ற ஏவுகணைத் திட்டத்தை துவக்கி, தோல்வியடைந்திருந்ததால், தொய்வுற்றிருந்தது. கலாம் இணைந்தவுடன் ஏவுகணைத் தொழில்நுட்பக்குழு (Missile Technology Committee) அமைக்கப்படுகிறது. அதன் மூலம் IGMDP (Integrated Guided Missile Development Programme) உருவாகிறது.
அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களும், பாதுகாப்பு அமைச்சகத்தின் விஞ்ஞான ஆலோசகர் டாக்டர்.அருணாசலம் அவர்களும் கலாமுக்கு பக்கபலமாக இருந்து ஊக்குவிக்கின்றனர்.
டெவில் ஏவுகணையை சீர்திருத்தி, 1984, ஜூன்24ல், விண்ணில் செலுத்தி சோதனைரீதியில் வெடிக்க வைத்து வெற்றிபெறுகிறார்கள்.
பிருத்வி, திரிசூல், ஆகாஷ், நாக், அக்னி ஆகிய 5 ஏவுகணைத் திட்டங்கள் உருவாகின்றன. அவற்றைத் திறம்பட செய்யக்கூடிய அணிகளைத் தேர்வு செய்கிறார். இவற்றைத் தேர்வு செய்வதில் எழும் அரசியல், குழுக்களின் செயல்பாடுகளை வகுத்தல், அவற்றின் அணுகுமுறை அனைத்தையும் விரிவாகக் கூறுகிறார்.
முதல் ஏவுகணை சோதனை 1985, செப்டெம்பர்18ல், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 'திரிசூல்' வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது குறைந்த தொலைவு (9Km) தரையிலிருந்து வானில்இலக்கைத் தாக்கும் ஏவுகணை.
1988, பிப்ரவரி25ல், 'பிருத்வி' வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது தரையிலிருந்து தரைப்படையைத் தாக்கும் ஏவுகணை.
1989, ஏப்ரல் 20ல் 'அக்னி' என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை விண்ணில் செலுத்த ஆயத்தமாகிறது. இது 500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் உழைப்பால் உருவானது. ஏவுகணையைச் செலுத்த 14 நொடிகள் இருக்கும்போது ஒரு கருவி கோளாறினால் நிறுத்த வேண்டியதயிற்று. அடுத்து மின்சக்தியில் கோளாறு என்று தடங்கல்கள். திட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. ஏற்கனவே வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பத்திரிக்கைகளும் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டன.
10 நாட்கள் 24 மணிநேரமும் பணி செய்து மறுபடி தயார் செய்கின்றனர் 1989, மே1, செலுத்த தயாராகிறது.ஆனால் மறுபடி தடங்கல். செலுத்த 10 நொடிகள் இருக்கும்போது மீண்டும் கோளாறு. அதை சரிசெய்த பிறகு புயல் அபாயம். இப்படி 5 வாரங்கள் கடுமையான சோதனைகளுக்கு பிறகு..
1989,மே22ல், காலை 7.10க்கு 'அக்னி' விண்ணில் பறந்தது.
" அது வெறும் ஏவுகணையன்று.
இந்த நாட்டின் எரியும் பெருமை" என்று எழுதுகிறார்
1988, செப்டெம்பர் இறுதியில் இரண்டாவது முறையாக 'பிருத்வி' விண்ணில் செலுத்தப்பட்டது. அபார வெற்றி.
4.தியானம் (1991 - )
1990 குடியரசு தினத்தில் கலாம் அவர்களுக்கும், டாக்டர் அருணாசலம் அவர்களுக்கும் 'பத்மவிபூஷண்' விருது வழங்கப்பட்டது.
அடுத்து 'நாக்' என்ற பீரங்கி தடுப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
கலாம் தனது பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கெல்லாம் புகழஞ்சலி செலுத்துகிறார்.
'ஆகாஷ்' ஏவுகணை 1990 சுத்ந்திர தினத்தன்று சோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் வான் எல்லையை தரையிலிருந்தே பாதுகாத்துக் கொள்ளும் முக்கிய கட்டத்தில் நுழைந்துவிட்டோம்.
அதே ஆண்டு ஜாத்வ்பூர் பல்கலைக்கழகம், கலாமுக்கு கௌரவ டாக்டர் பட்டம்வழங்குகிறது. மும்பை ஐ.ஐ.டி விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் வழங்குகிறது.
தொழில்நுட்பம் என்பது ஒரு கூட்டு நடவடிக்கை. பலரது அறிவாற்றலின் சங்கமத்தில் பிறப்பது. 5 ஏவுகணைத் திட்டங்களுக்கு தான் உருவாக்கிய அணியினரின் உழைப்பை எண்ணி பெருமை கொள்கிறார்.
நிறைவுரை
இந்த தேசத்தின் உயர்ந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களான பேராசிரியர் விக்ரம் சாராபாய், பேராசிரியர் சதீஷ் தவான், டாக்டர் பிரம்ம பிரகாஷ் என்ற மும்மூர்த்திகளுடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவன் நான். இவர்கள் எல்லாம் என் வாழ்க்கையை மிகவும் வளப்படுத்தியவர்கள்.
பொருளாதாரச் செழிப்பு, வலுவான பாதுகாப்பு என்ற இரண்டும் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை.
சுயசார்பு லட்சியம்; தொழில்நுட்ப தொலைநோக்கு -2020 மூலம் நமது தேசம் வளர்ச்சிடைந்த தேசமாக உயர்வடையும்.
"நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியை கொழுந்துவிடவைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை."
- முன்னுரையில் கலாம் அவர்கள்
எனது பார்வை:
இந்தியாவில் ஒவ்வொரு இளைஞனுக்கும் வழிகாட்டியாக அமைந்தவர். அவர் மறைந்த அன்று நான் டெல்லியில் இருந்தேன். அவருக்கு நாடெங்கும் மக்கள் செலுத்திய அஞ்சலி, எந்த ஒரு தலைவருக்கும் கிடைத்திருக்காது. இனியும் கிடைக்காது. ஜனாதிபதியாக இருந்த போதும், நேர்மை: எளிமை: நடுநிலைமையாக தேச வளர்ச்சியையே குறிக்கோளாக பணியாற்றியதை யாரும் மறக்க முடியாது. டெல்லி, ஜெய்ப்பூர், நொய்டா, உத்தரபிரதேசம் என நான் சென்ற இடமெல்லாம் அவரது புகழைக் கண்டிருக்கிறேன்.( தமிழ்நாட்டில் தான் அரசியல் காரணங்களால் குறைவு என்பது என் கருத்து)
"வாழ்க நீ எம்மான்"
- பாரதியின் வார்த்தைகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
Some Quotes of Dr.APJ Abdul Kalam
"My message to young people is to have courage to think, to travel the unexplored path, courage to discover the impossible and to conquer the problems and succeed"
"Dream is not that which you see while sleeping; It is something that does not let you sleep"
"If you want to shine like a Sun, first burn like a Sun"
"Don't take rest after your first Victory because if you fail in second, more lips are waiting to say your first victory was just your luck"
கருத்துகள்
கருத்துரையிடுக