முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதனால் என்ன? (So What?)

 அதனால் என்ன?

இந்த இரண்டு வார்த்தைகள் எனது வாழ்வில் மந்திரச் சொல். எப்பேர்ப்பட்ட மனநிலையிலும் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகள் அவை.

2012 ல் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட அனுபவம். அதன் தலைவர் (Chairman) ஊழியர்களை சந்திக்கும்போது, அவர்கள் என்ன புகார் தெரிவித்தாலும், என்ன குறை கூறினாலும், 'So What? What are you doing?' என்று கடந்து விடுவார். 

அந்த நிறுவனத்தில் அலுவலக அரசியல் (Office Politics) மிக மிக அதிகம். யாருமே 6 மாதங்களுக்கு மேல் வேலை செய்ய முடியாது. காரணம், ஒரு வேலையும் தெரியாதவர்கள், வேறு எங்குமே வேலைக்குப் போக முடியாதவர்களே மிகக் குறைந்த சம்பளத்தில் அதிக காலமாக பணியாற்றுவார்கள். எனவே அவர்கள் வேலையைவிட அரசியல் செய்வதுதான் அதிகம். இதை தலைவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவர் என்னிடம் சொல்வார்," நான் என்ன குப்பைத் தொட்டியா? இவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, எந்நேரமும் இவர்கள் குறைகளை என்மீது கொட்டுவதற்கு? இவர்களிடம் பேசினாலே நமது மூடையும் மனதையும் கெடுத்து விடுவார்கள்"

அந்த "So What?" எனது மனத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. என்ன பிரச்னைகள்,
கஷ்டங்கள் வந்தாலும், 'அதனால் என்ன?' என்பதுதான் எனது மனதில் தோன்றும் முதல் கேள்வியாக இருக்கும். அது நமது பிரச்னையை நேர்வழியில் சிந்திக்க தூண்டும். எதையும் எதிர்நோக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும்.

கோபம் குறைக்கும் வழி
வாழ்க்கையில் கடினமான தருணங்கள், நமக்கு கோபம் வரும் நேரங்கள்தான். கோபத்தை வென்றாலே அமைதி கிடைக்கும்.   கடந்த 10 வருடங்களில் எனது கோபம் 90 சதவீதம் குறைந்துவிட்டது. மனது அமைதியாகி விட்டது இதற்கு இந்த வார்த்தைகள் ஒரு காரணம். (வயதும் ஒரு காரணம்).

" நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
   பகையும் உளவோ பிற "  - முக மலர்ச்சியும் அக மலர்ச்சியும் கொல்லுகிற
சினத்தைவிட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ? என்கிறார் திருவள்ளுவர். 
திருக்குறளில், வெகுளாமை (கோபம் கொள்ளாமை) என்ற அதிகாரம் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும். "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க'', பலிக்கக் கூடிய இடத்தில் தடுப்பவனே கோபத்தை அடக்கியவனாகிறான். பலிிக்காத இடத்தில் அடக்கினால்  என்ன; அடக்காவிட்டால் என்ன? - இவை அந்த அதிகாரத்தின் முக்கிய கருத்துக்கள்.

கோபத்தை அடக்க பல வழிகள் சொல்வார்கள். கோபம் வந்தால் 1-10 வரை எண்ணிவிட்டு செயல்படு அல்லது பேசத் துவங்கு, கோபம் வரும்போது நம் வாயிலிருந்து வரும் வசவுகளை எழுதி வைத்து, பிறகு வாசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒரு திருக்குறள் கதையில், கோபம் வரும்போது 10 அடி பின்னே நடந்து முன்னே வர வேண்டும் என்றெல்லாம் வரும்..
நான் செய்வது, ' அதனால் என்ன ' என்று நினைப்பது மட்டும்தான்!

மனச்சோர்வுக்கான மருந்து
கோபத்தைப் போல நம் மனதைச் சோர்வுறச் செய்பவை - கவலை, சோகம், விரக்தி, ஆத்திரம், வேதனை, வருத்தம், துன்பம் , துக்கம், துயரம் ஆகியவை. 
அனைத்தும் ஒன்றுதானே என்கிறீர்களா? இல்லை.
 
கவலை - எதிர்கால நிகழ்வின் மீதுள்ள கற்பனையால் வரும் அச்சம் போன்ற உணர்வு (உதாரணத்திற்கு - தேர்வில் தோற்றுவிடுவோமோ, வேலை கிடைக்காதோ - போல)

சோகம் - ஈடு செய்யக்கூடிய இழப்பினால் வருவது: சாதகமற்ற நிகழ்வினால் வருவது     (உதா - தேர்வு நேரத்தில் உடல் நலமின்றி தேர்வு எழுதமுடியாமல் போனால்?) நமக்கு பிடித்த நண்பர்களோ, உறவோ படும் துயரம் கண்டு ஏற்படுவதும் சோகம்தான்.

விரக்தி - தோல்வியால் நம்பிக்கை இழந்து, அடுத்து என்ன செய்வது; இலக்கு என்ன என்று தெரியாதிருக்கும் நிலை (பள்ளி, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளில் தோல்வியுற்றால்; தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியானால்  வருவது)

ஆத்திரம் - அதீத கோபம் அல்லது பொறாமையோடு, பொறுமையின்மையும் சேர்ந்தால் ஏற்படுவது. வன்முறைகளுக்கு மூல காரணம் இதுதான். 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' அல்லவா?

வேதனை - வெளியில் நடந்த நிகழ்வோ அல்லது நினைவுகளோ தரும் மனவலி.(நண்பனோ காதலியோ விலகிவிட்டால்)

வருத்தம் - நம்முடன் பழகியவர் அல்லது புதியவர் இடையில் ஏற்படும் சங்கடம் அல்லது அவர் செய்யும் செயல் மீது நமக்கிருக்கும் கருத்து வேறுபாட்டால் ஏற்படும் வெறுப்பு

துன்பம் - பிறரால் ஏற்படுவது (வறுமையில் இருக்கும் ஒருவரிடம் கடன் கொடுத்தவர் கேட்டு அவமானப்படுத்தும்போது)

துக்கம் - அடக்க முடியாத மனவலி ; ஒன்றை இழ்ப்பதின் வலி (நெருங்கியவரின் மரணம்)

துயரம் - இல்லாமை அல்லது வறுமை; கிடைக்காமை அல்லது இயலாமையினால் ஏற்படுவது  (வெற்றி பெறாதவர்கள் அடைவது)

இவை அனைத்திலிருந்தும் மீள, " அதனால் என்ன" மனப்பான்மை அவசியம். அப்போதுதான் நாம் வாழ்க்கையில் முன்னோக்கி நகர முடியும்.

கவலை வேண்டாம்
'தி லயன் கிங்' (The Lion King) கார்டூன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில், குட்டி சிங்கம் சிம்பா, ராஜாவான தந்தையை இழந்து, தனது நாட்டை விட்டு பாலைவனத்துக்கு
துரத்தப்படும். அங்கு பாலைவனச்சோலையில் இரு நண்பர்கள் (காட்டுப்பன்றி, கீரி) அறிமுகம் கிட்டும். அவை குட்டி சிங்கத்துக்கு ஆறுதல் கூறி சந்தோஷப்படுத்த "ஹகூனா மட்டாடா" என்ற பாடலைப் பாடும். மிக அருமையாக ஜாலியாக இருக்கும்.
பாடல் முடியும்போது குட்டி வளர்ந்து பெரிய சிங்கமாகிவிடும். அந்தப் படம் பார்த்து அந்த வார்த்தைகள் எனக்கு மறக்கவேயில்லை. "ஹகூனா மட்டாடா" (Hakuna Matata) என்றால் 'கவலை வேண்டாம்' (No worries) என்று அர்த்தமாம். ஆப்ரிக்க மொழியான ஸ்வாஹிலி (Swahili) வார்த்தைகளாம் அது. (அந்தப் பாடலை கீழே இணைத்துள்ளேன். கண்டு களியுங்கள்)
அந்த இரண்டு வார்த்தைகள் பிரச்னைகளை முடித்து வைக்கும் என்று அந்த பாட்டில் வரும். அதே போல்தான் ' அதனால் என்ன?" வார்த்தைகளும். 

காதலன் படத்தில் பிரபுதேவா ஆடுவாரே "ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் ஈசி ஊர்வசி;
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி" அதுதான் 'அதனால் என்ன?' மனப்பாங்கு.
அதே கவலை வேண்டாம் வார்த்தைகளை ரஜினிகாந்த் நடித்த ஒரு பாட்டில் ' இதுக்கு போய் அலட்டிக்கலாமா?' என்று எஸ்.பி.பி குழைந்து பாடியிருப்பார்.
"மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா? என்று P.B.சீனிவாஸ் குரலில் ஒரு பாடல் உண்டு. கண்ணதாசனின் வைரங்களில் அதுவும் ஒன்று. இவற்றிற்கெல்லாம் எளிமையான வெர்ஷன்  'அதனால் என்ன?'.

குழப்பமான மனநிலையைத்தான் கவலை என்கிறோம். ஒரு பிரச்னைக்கு தீர்வு காணமுடியாக் குழப்பத்தில், கவலைப்பட ஆரம்பிக்கிறோம். தீர்வு நம் கையில் இருந்தால், உடனே முடிக்க முயற்சி செய்ய வேண்டியதுதானே! கவலைப்பட அவசியமில்லையே. தீர்வு நம் கையில் இல்லாவிட்டால் கவலைப்பட்டு என்ன பயன்? காலத்திடமோ, இறைவனிடமோ விட்டுவிட்டு 'அதனால் என்ன' என்று அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதான். அவ்வளவுதாங்க!

திருக்குறளில் 'ஊக்கமுடைமை' அதிகாரமும் சிறந்த தன்னம்பிக்கை மருந்து. படியுங்கள். ஊக்கமுடன் வாழ்வோம்!

 "ஹகூனா மட்டாடா"

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....