முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாள் ஒரு கனவு

 கனவுகள் - விளக்கங்கள், சுவராசியமான தகவல்கள்

எத்தனையோ கனவுகள் வந்ததுண்டு. ஆனால் இப்படி ஒரு கனவு வரும் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாது. சுஜாதாவின் பாதிப்பாகத்தான் இருக்க வேண்டும். பின்னே, சயின்ஸ் பிக்ஸன் ரேஞ்சுக்கு கனவு வந்தால்? உடனே பதிவு செய்ய வில்லையென்றால் மறந்துவிடுவேன்.

நாள் : 09/07/2021 நேரம்: அதிகாலை நேரம் 3- 4 மணிக்குள் இருக்கலாம்.

கனவு எப்படி தொடங்கியது என்றெல்லாம் நினைவில்லை. ஒரு பாதி நிகழ்வில் நுழைந்தமாதிரி உணர்வு.. அதற்கு பின் கனவிலே தொடர்ந்து, சற்று நினைவு திரும்பி லூசிட் ட்ரீம் (Lucid dream) ஆக மாறுகிறது. நான் உள்ளே நுழைந்து டைரக்டர் போல திருத்தங்கள் சொல்கிறேன். எப்படி இதெல்லாம் ? 

சரி, கனவு நினைவு இருப்பதில் தொடங்கி...

நம் மொபைலில் கூகிள் மேப்ஸ் (Google Maps) இருக்கிறதல்லவா? அதேபோல் ஒரு ஆப் (App) ஒரு டேப்(Tab)பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 

அந்த ஆப் , மனித எண்ணங்களையும், குணாதிசயங்களையும் பதிவு செய்து வைத்துள்ளது போலும். வயது, ஜென்டரை பதிவிடுகிறேன். அதில் கூகிள் மேப்பில் பாதைகள் காட்டுவது போல, வெவ்வேறு பாதைகள் ஒளிருகின்றன. நீங்கள் பணக்காரராக வேண்டுமா, இந்த பாதையைத் தேர்ந்தெடுங்கள் என்கிறது. பெரிய அறிவாளியாக (Genius) வேண்டுமா, இப்படிப் போங்கள் என்கிறது. அதேபோல தொழிலதிபராக வேண்டுமா, நடிகராக வேண்டுமா, அரசியல்வாதியாக வேண்டுமா, என்று பல வேண்டுமாக்கள்... (அந்தப் பாதைகளில் என்ன இருக்கிறது, நினைவில்லை..)

இந்த நிலையில் சற்று நினைவு வந்து லூசிட் ட்ரீமில் தொடர்கின்றேன். எனக்கு

இதெல்லாம் போதாது. டைம் மெசின் புரொகிராம் செய்து, எனது வாழ்க்கையை ரீவைண்டு (Rewind) பண்ணி, சில கரக்ஷன் செய்து திரும்ப வேண்டும் என்கிறேன். யாரிடம்? தெரியவில்லை.  அவ்வளவுதான் கனவு... இது ஹாலிவுட் சினிமா பாதிப்புதான். ஆனால் முதல் பாதி என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

கனவுகள்

கனவு என்பது ஒருவர் தூங்கும்போது அவரது மனத்தில் ஏற்படும் காட்சிகள், உணர்வுகள், ஓசைகள், நிகழ்வுகள் அகியவற்றைக் குறிக்கிறது. நம் மூளையில் உள்ள நினைவுகள், தகவல்கள் அகியவற்றிலிருந்து கதாபாத்திரங்களை, இடங்களை உருவாக்கி ஒரு கற்பனை உலகத்தை உருவாக்குகின்றது.

கனவுகளைப் பற்றிய விளக்கங்கள் எல்லாமே அநுமானங்கள் தான். இதுவரை அறிவியல் ரீதியான தீர்க்கமான விளக்கங்கள் இல்லை.

கனவு எப்படி உருவாகிறது?

பெருவாரியான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடு - நமது மூளை எப்போதும் தகவல்களைச் சேகரிப்பதும், உத்தரவிடுவதும் என வெளிப்புற செயல்பாடுகளை கவனிக்கும் ஒரு பகுதி- வெளிப்புற மனம் (Conscious mind), சேகரித்த தகவல்களை பிரிப்பதும், நினைவில் கொள்வதும், தேவையில்லாதவற்றை ஒதுக்குவதும் ஒரு பகுதி - ஆழ்மனம் (Sub-conscious Mind). நாம் விழித்திற்கும் நேரத்தைவிட உறங்கும்போது மூளை அல்லது மனம் அதிகமாக செயல்படுகிறது. அப்படி ஆழ்மனம் கடினமாக செயல்படும்போது, வெளிமனத்தில் சில காட்சிகளை உருவாக்கிவிடுகிறது. அவையே கனவுகள்.

நாம் கனவு காணும்போது கண்ணின் மணி வேகமாக இடம் வலமாக நகர்ந்து கொண்டே இருக்கும். இதை REM (Rapid Eye Movement) என்பார்கள். எல்லோருக்குமே தினமும் 3-4 கனவுகள் வரும். ஆனால் நினைவுக்கு வருவது மிகச்சிலவே என்கிறார்கள். அதேபோல கனவின் தொடக்கமும், முடிவும் நினைவுக்கு வருவதே இல்லை. கனவுகளின் நீளம் சில விநாடிகளில் தொடங்கி 20-30 நிமிடங்கள் வரை. நமது 8 மணி நேரத் தூக்கத்தில் 2 மணி நேரமே REM தூக்கம் இருக்கும். அதுவே கனவுகள் வரும் நேரம்.

லூசிட் ட்ரீம்ஸ் (Lucid Dreams) எனப்படும் தெளிவான கனவுகள், நாம் நினைவோடு காணும் கனவுகள். அவற்றை நாம் கட்டுப்படுத்தவும், வடிவமைக்கவும் முடியும். கிறிஸ்டோபர் நோலனின் 'இன்செப்சன்' (INCEPTION) திரைப்படத்தில் கண்டோமல்லவா? பயிற்சியின் மூலம் நம்மாலும் லூசிட் ட்ரீம்ஸ்சை உருவாக்க முடியும்.

குழந்தைகள் தூக்கத்தில் பாதிநேரம் கனவிலேயே இருக்கும். மனநோயாளிகளுக்கு கனவே வராது. நீரிழிவு நோயாளிகளுக்கும்.வராது - இரவில் அடிக்கடி விழிப்பதால். கண்பார்வையில்லாதவர்களுக்கு கனவுகள் காட்சிகளாக இல்லாமல், உணர்வுகளாக வேறுமாதிரியாக ( ஓசை, மணம் போன்று) இருக்கும் என்கிறார்கள்.

சிக்மண்ட் ப்ராய்டு என்ன சொல்கிறார்?

ஆஸ்திரிய உளவியல் நிபுணர் சிக்மண்ட் ப்ராய்டுதான் முதலில் தீவிரமாக கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவர் 1899ல் 'கனவுகளின் விளக்கம்' (The Interpretation of Dreams) என்ற நூலை எழுதினார். இன்று வரை அதுதான் கனவு ஆராய்ச்சிக்கான பிரபலமான நூல். 

அதில் - கனவுகள்  ஒழுங்கற்றவை, அவை உள்மன ஆசைகளின் வெளிப்பாடு; உண்ர்வுகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.

கனவுகள் சாதாரண மானவற்றில் தொடங்கி விநோதமான, இயற்கைக்கு மாறுபட்ட நிகழ்வாக பலவிதங்களில் வரலாம். எல்லாமே ஆழ்மனதின் ஜாலங்கள். அதில் பரவசம், அதிர்ச்சி, பயம், மந்திர மாயங்கள், பயணங்கள், துக்கம், பாலுணர்வு (sexual) போன்ற பல உணர்வுகளையும் அனுபவிக்கலாம். இதில் ப்ராய்டு, மேற்கத்திய உலக பண்பாடுகளின்படி, வெகுவாரியான கனவுகளுக்கான காரணம் பாலுணர்வே என்கிறார். (அவரது Oedipus Complex theory தெரியுமோ? படியுங்கள்) அவருக்கு புட்பாலில் இருந்து பூட்டு சாவி வரை எல்லாமே செக்ஸ்தான் காரணம்.

Hobson's Dreams Theory Characteristics

அவரைப் போன்றே ஜான் ஆல்லன் ஹாப்சன்(John Allen Hobson) என்ற உளவியல் நிபுணர் REM தூக்கத்தைப் பற்றி ஆராய்ந்துள்ளார். 

கனவுகள் - சில தகவல்கள், மேற்கோள்கள், பழமொழிகள்

  • எகிப்தியர்கள் கனவுகளை தெய்வீகச் செயல் பாடாகக் கருதினர். கடவுளர்கள் மனிதர்களுக்கு அனுப்பும் செய்திகளாகக் கருதினர்.
  • உலகில் முதலாகப் பதிவு செய்யப்பட்ட கனவுகள் - 3100 BC யில் மெசபடோமியாவில் பாபிலோனியர்களுக்கு பாறைகளில் கனவுகளைச் செதுக்கி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மெழுகு, அரக்கு போன்ற பொருட்களிலும் எழுதி வைத்துள்ளனர். அவை இப்போதும் அருங்காட்சியகங்களில் உள்ளன.
  • நமது சங்க நூல்களிலும் நிறைய கவிதைகளிலும், இலக்கியங்களிலும் கனவுகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • கனவுகளின் பலன்களைத் தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் அதிகம். ஜோதிடத்தைப் போன்று வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் உள்ளன. உண்மை யாரறிவார்?
  • அதிகாலையில் காணும்கனவு பலிக்கும் என்பர். கண்ணகியும், கோப்பெருந்தேவியும் அதிகாலையில் கனவு கண்டதால் அக்கனவு பலித்தது. அது காப்பியக் கனவு ஆகும். மக்களின் வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வரும்  நம்பிக்கை இது.
  • பொதுவாக ஏதாவது பயத்தோடு தூங்கினால் கெட்ட கனவுகளாக வரும் என்பது எனது நம்பிக்கை.
  • "ஊமை கண்ட கனவு போல"- ஒரு பழமொழி. யாரிடமும் சொல்லமுடியாத கனவுகளை (நிகழ்வுகளையும்) இப்படிக் கூறுவர்
  • சிலர் (சோம்பேறிகள்) விழித்துக் கொண்டிருக்கும்போது தங்களைப் பற்றியும் நடக்க முடியாத செயல்களைக் குறித்தும் கனவு கண்டு கொண்டே இருப்பர். அது 'பகற் கனவு' 
  • சில கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளையும் எடுத்துரைத்துள்ளதாக நம்பிக்கைகள் உண்டு.
  • கனவுகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலமாகவும் அமைந்திருக்கின்றன. கணிதமேதை ராமானுஜம் அவர்கள் பல கணக்குகளுக்கு விடை காண கனவுகள் துணைபுரிந்ததாக எழுதியுள்ளார். தையல் மிஷின், DNA வளையம், Periodic Table, Benzene ஆகியவை கண்டு பிடிக்க கனவுகள் உதவியுள்ளதாகக் கூறுகின்றனர்.
  • கனவு மெய்ப்பட வேண்டும் - பாரதியார்
  • உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - அப்துல் கலாம்
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா ?
  • கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா ? - பழமொழிகள்

கனவு காணுங்கள் - விழிகளை மூடி! சொர்க்கமும் தெரியலாம்!










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...