முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகநானூறு அறிவோம் ( பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் - 3

 உள்ளக் கிளர்ச்சியூட்டும் அகநானூறு பாடல்கள்

பெயரே அறிமுகப்படுத்துகிறது - இது 400 அகப்பாடல்கள் கொண்ட நூல். குறைந்தது 13 அடி முதல் 31 அடி நீளங்கொண்ட பாடல்களும் உண்டு. எனவே நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நூல்

  • களிற்றுயானை நிரை - 120 (1 - 120) பாடல்கள்
  • மணிமிடைப்பவளம் - 180 (121 - 300) பாடல்கள்
  • நித்திலக்கோவை - 100 (301 - 400) பாடல்கள்

என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. மேலும் 

  • 1, 3, 5, 7, 9 என வரும் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள் (200 பாடல்கள்)
  • 2, 8 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் (80 பாடல்கள்)
  •  4, 14, 24 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் முல்லைத்திணைப் பாடல்கள்(40 பாடல்கள்) 
  • 6, 16, 26 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்கள்(40 பாடல்கள்) 
  • 10, 20, 30 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் நெய்தல் திணைப் பாடல்கள் (40 பாடல்கள்)
என அழகாகத் தொகுக்கப்பட்டது. இந்நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிகிழார் மகனார் உருத்திர சன்மானர். ஆதரவளித்தவர் பாண்டியன் உக்கிர பெருவழுதி. இதை முதலில் பதிப்பித்தவர் வே,ராசகோபால ஐயங்கார். இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். மூன்று பாடல்கள் பாடியவர் பெயர் தெரியவில்லை. 

கடவுள் வாழ்த்து

பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தப் பாடல் சிவனை வாழ்த்துகிறது.

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;

நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் 

வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே -
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,   

முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்  

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.

பொருள் 
கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூவைத் தார், மாலை, கண்ணி என்னும் தொடைகளாக்கி அணிந்துகொண்டுள்ளவன் இவன். இவனது மார்பில் பூணூல் உள்ளது. இமைக்காத கண் ஒன்று இவன் நெற்றியில் உள்ளது. தோல்வி காணாத இவனுக்குக் கையில் கணிச்சி, மழு, மூவாய் வேல் (சூலம்) ஆகிய படைக்கருவிகள் உள்ளன. 
இவன் ஏறிச் செல்வது காளைமாடு. இவனோடு சேர்ந்து ஒன்றாய் இருப்பவள் உமை. இவனுக்குச் செவ்வானம் போன்ற மேனி. அந்த வானில் விளங்கும் பிறை போல் வளைந்த வெண்ணிறப் பற்கள் இவனுக்கு உண்டு. பற்றி எரியும் தீ போன்று விரிந்துகிடக்கும் சடைமுடியை உடையவன். 
அதில் இளநிலாவைச் சூடிக்கொண்டுள்ளான். மூப்பில்லாத தேவர், முனிவர், மற்றும் பிறர் யாவராலும் அறியப்படாத பழமையான மரபினனாக விளங்குபவன். வரிப்புலியின் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டிருப்பவன். யாழ் ஒலி போன்று இசைக்கும் குரலை உடையவன், இவன் அறநெறி பேணும் அந்தணன். குற்றமற்ற இவன் திருவடி நிழலில் உலகம் இயங்குகிறது.

சில பாடல்கள்

களிற்றுயானை நிரை
இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

நெய்தல் திணை
பாடியவர்: மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்
பாடல் பின்னணி: தலைவி தலைவனிடம் சொன்னது

"கொடுந்தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற, தண் கடல் சேர்ப்ப,
நினக்கு எவன் அரியமோ யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 

பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்,
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பன் மலரக் கவட்டு இலை அடும்பின்
செங்கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ,  

மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந்தாது உறைக்கும்
புன்னை அம் கானல், பகல் வந்தீமே"

பொருள்
நெய்தல் நிலத்தின் தலைவனே! வளைந்த கால்களையுடைய முதலைகளோடு, கொம்பையுடைய மீன்கள் உலவும், பெரிய உப்பங்கழி வழியாகக் குறுகிய அரிய பாதையில் வந்துள்ளாய்!
நீர்முள்ளிச் செடிகள் தழைத்த நீரடைந்த கடற்கரையில், ஒளியுடைய பல மலர்களையுடைய பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பின் சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை உன்னுடைய தேரின் உருள் (சக்கரம்) அறுத்துவர, பல மணிகளை அணிந்த குதிரைகளைப் பூட்டிய உயர்ந்த தேரினைச் செலுத்தி, ஒளியுடைய இலைகளுடன் பொலிந்து விளங்கும் பூங்கொத்துக்கள் மலர்ந்த பொன்போலும் குளிர்ச்சியுடைய, நறுமணமான, பசுமையான தாதுக்களைச் சொரியும் புன்னை மரங்களுடைய அழகிய கடற்கரைச் சோலைக்குப் பகலில் வருவாயாக.
அங்கு நாங்கள், எங்கள் தந்தை, பொருந்திய அலைகளையுடைய கடலில் துழாவிக் கொணர்ந்த, பல வகை மீன்களை உலர வைத்து, அவற்றைத் தாக்கும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்போம்.  இவ்வாறு எம்மிடம் வருவது கடினம் என்று ஏன் நினைக்கின்றாய்?

மருதத் திணை
பாடியவர்: நல்லவூர் கிழார் 
பாடல் பின்னணி: தலைவன் வாயில் மறித்த தோழியிடம் சொன்னது

'உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்,  

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப், 

புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
“கற்பினின் வழாஅ நற் பல உதவிப்,
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக” என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
“பேர் இற் கிழத்தி ஆக” எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,  

கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை யாழ, “நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை” என  

இன்னகை இருக்கை பின் யான் வினவலின்,
செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்,  30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே".

பொருள்
உளுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, வரிசையாகக் கால்களையுடைய (கம்பங்களுடைய, தூண்களுடைய) பெரிய பந்தலில், கொணர்ந்து இட்ட புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், 

தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட,

 புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ‘கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக’ என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக்  கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர்.  இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து,  ‘பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ’ என்று அவளை வாழ்த்தி, என்னிடம் அவளைத் தந்தனர்.

நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம்.  தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள்.  அவளை அணைக்கும் விருப்பத்துடன், நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள்.  ‘உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு’ என்றேன் நான். 

 இனிய மகிழ்ச்சியுடன், நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்தக் கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.

மணிமிடைப்பவளம்
இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

பாலைத்திணை
பாடியவர்: ஔவையார்
பாடல் பின்னணி: தலைவி தோழியிடம் சொன்னது

"ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன,
ஊன்பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவு பசி கூர்ந்தெனப்,  

பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்,
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே, பல புலந்து  

உண்ணா உயக்கமொடு, உயிர் செலச் சாஅய்
தோளும், தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே"

பொருள்:
தோழி! தலைவன் பிரிந்ததால், பலவற்றையும் வெறுத்து, உண்ணாத வருத்தத்துடன், உயிர் போகுமளவு மெலிந்து, தோளின் அழகுக் கெட்டு, நாள்தோறும் துன்புறுகின்றேன்.  அவர் நீங்கிய வருத்தத்திற்கு மருந்து ஒன்றும் இல்லாததால், உயிரோடு இருந்தும் செயலற்று இருக்கின்றேன்.

ஆதலால், உயர்ந்த மலைச் சாரலில், பிடவ மலர்களுடன் மலர்ந்த நறுமணமான வேங்கை மலர்களின் இலையைப் போல், பகுதி, பகுதியாக வகுத்து வைத்தாற்போல், தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றைப் பெற்ற, ஒதுங்கிய இடத்தில், மலைப் பிளவாகிய குகையில் உள்ள தன் பெண் புலி மிகுந்த பசியை அடைந்ததால், பொறி விளங்கும் பிளந்த வாயை உடைய ஆண் புலி, உடைந்த கொம்பையுடைய ஆண் மானின் குரலைக் கேட்கும், பிரிந்தப் பாதைகள் பொருந்திய எல்லையில்லாத பெரிய காட்டிலே, தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போல் செல்லுதலைப் பெரிதும் விரும்புகின்றேன்.

குறிஞ்சித்திணை
பாடியவர்: கபிலர்
பாடல் பின்னணி: தலைவி தோழியிடம் சொன்னது

"கூறாய் செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும், மென் முறிச்
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி, வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்  

தூங்கும் ஆயின், அதூஉம் நாணுவல்,
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல், புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி, நடுநாள்
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்  

கடுவிசைக் கவணின் எறிந்த சிறு கல்,
உடுஉறு கணையின் போகிச், சாரல்
வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக்காலே".

பொருள்
என்ன செய்வது என்று கூறுவாயாக என் தோழி! என் நிலைமையைத் தவறாக புரிந்துக் கொண்ட அன்னையும் கட்டுவிச்சி வேலன் முதலியோருக்கு வீணே பொருளைக் கொடுத்து, மனம் சுழலுகின்றாள். சிறிய இளந்தளிரை உண்ணும், தாய்ப் பாலைப் பெறாத ஆட்டுக்குட்டியைக் கொலை செய்வதற்கு விரும்பி, வெறியாட்டத்தை விரும்புகின்ற தொடர்பில்லாத வேலன் தன்னுடைய மலர்மாலை அசையும்படி வெறியாடுவான் ஆயின், அத்தகையைச் செயலுக்கு நான் நாணுகின்றேன்.

என்னுடைய ஒளியுடைய வளையல்கள் நெகிழும்படியான துன்பத்தைக் கண்டு, தன்னுடைய தினைப் புனத்திற்கு இரவில் மேய வரும் யானையின் காலின் நடையை அறிந்து, நடு இரவில் மலைமேல் உள்ள பரணில் இருக்கும் வலிய கைகளையுடைய கானவன் விரைந்து செலுத்தும் கவணில் வைத்து செலுத்தப்பட்ட சிறிய கல் ஒன்று இறகுடைய அம்பைப் போலச் சென்று, மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தின் மலர் கொத்துக்களைச் சிதறச் செய்து அதிலுள்ள தேன் கூட்டைச் சிதைத்து, அருகில் உள்ள பலாவினது பழத்தில் தங்கும், மலை பொருந்திய நாட்டின் தலைவன் என்னை மணக்காத வேளையில்.

நித்திலக்கோவை
இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

முல்லைத்திணை
பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 
பாடலின் பின்னணி : தலைவி தோழியிடம் சொன்னது

"மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து
ஏறுடைப் பெருமழை பொழிந்தென, அவல் தோறு
ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
நீடு இணர்க் கொன்றை கவின் பெறக், காடுடன் 

சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக், கல்ல
பகுவாய்ப் பைஞ்சுனை மா உண மலிரக்
கார் தொடங்கின்றே காலை, காதலர்
வெஞ்சின வேந்தன் வியன் பெரும் பாசறை  

வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்,
யாது செய்வாம் கொல் தோழி? நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே".

பொருள்
திசையெல்லாம் புதையும்படி மழை தன் காலை இறக்கி இடியுடன் பொழிந்திருப்பதால், கூத்தாடும் களத்தில் பறை முழங்குவது போல, தேர் மணலைப் பிளந்துகொண்டு செல்லும் ஓசை கேட்கும்படி அவர் போர்க்களத்தில் செல்கிறார். பொன்னணிகள் தொங்குவது போல் நீண்ட கொத்துகளுடன் கொன்றை பூத்துக் காடே அழகுடன் திகழ்கிறது. 

அந்தக் காட்டில் விளக்கு எரிவது போல் தோன்றிப் பூக்கள் புதர்களில் மலர்ந்துள்ளன. அவற்றுடன் முல்லை, இல்லம் ஆகிய பூக்களும் மலர்ந்துள்ளன. விலங்கினம் நீர் உண்ணுமாறு கல்லிடுக்குகளில் சுனை நிறைந்திருக்கிறது. இப்படிக் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு கார்காலம் தொடங்கிவிட்டது. இப்படிப்பட்ட காலத்தில் என் காதலர் வெற்றி கொள்ளும் வேட்கையோடு வேந்தனின் பாசறையில் இருக்கிறார். 

அவர் என்னைப்பற்றி நினைக்கவில்லை. தோழி! நாம் என்ன செய்யலாம்? 
என்னைக் கொல்வதற்கென்றே மாலைக்காலம் முனைந்து வருகிறது. என்னால் இந்த மாலைக் காலத்தை நீந்திக் கடக்க முடியவில்லையே!

அனைத்துப் பாடல்களும் உரையுடன் இணைப்பில் காண்க





(குறிப்பு: சங்க நூல்களுக்கு சிறந்த உரைகளை வழங்கிய திரு. புலியூர்க் கேசவன் அவர்களது பணி என்றென்றும் போற்றத்தக்கது. நாட்டுடமையாக்கப்பட்ட அவரது படைப்புகள் சங்க இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கின்றன.)




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...