சங்க நூல்கள் அறிமுகம் - 4
ஐங்குறு நூறு - இலக்கியச் செறிவு
3 அடி முதல் 6 அடி வரை உள்ள 500 அகப்பாடல்கள் கொண்டது. ஐந்திணைகளுக்கும் 100 பாடல்கள் வீதம், ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர்.
- மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
- குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
- பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
- முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
ஒவ்வொரு திணையிலும் உள்ள 100 பாடல்கள் பத்துப் பத்து பாடல்களாகப்பிரிக்கப்பட்டுத் தனித்தனி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவர் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார். முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
கடவுள் வாழ்த்து
"நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே"
பொருள்
நீலமேனியினளான, தூய அணிகள் பூண்ட தேவியைத் தன் பாகத்தில் வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பற்றவனின் இரு திருவடிகள் நிழலின் கீழாக, 'மேல், நடு, கீழ்' என்னும் மூவகை உலகங்களும் (தேவருலகம், மானிட உலகம், பாதாள உலகம் என்றும் கொள்ளலாம்) முறையே தோன்றின.
சில பாடல்கள்
மருதத்திணை (ஓரம்போகியார்)
வேட்கைப் பத்து
தோழி தலைவனிடம் சொன்னது
'வாழி ஆதன், வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே'
பொருள்
வாழ்க ஆதன் (குடி மக்கள்) ! வாழ்க அவினி (மன்னன்) ! நெல் பலவாக விளைவதாக! செல்வம் கொழிக்கட்டும்! எனத் தாய் வேண்டினாள். மொட்டுக்களையுடைய காஞ்சி மரத்தையும், சினைகளையுடைய சிறு மீன்களை மிகுதியாகக் கொண்ட ஊருக்குரியவனாகிய தலைவன் வாழ்க; அவன் ஏவலனாகிய பாணனும் வாழ்க! என்று நாங்கள் வேண்டினோம்.
கிழத்தி கூற்றுப்பத்து
பரத்தையரிடமிருந்து திரும்பிய கணவனிடம் மனைவி ஊடும் பாங்கினைக் காட்டும் பாடல்கள் இவை
வாளை நாள் இரை பெறூஉம் ஊர!
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே"
பொருள்
பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், புலவு நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வளை மீனை தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய உன் மார்பினை அணைக்க மாட்டேன்.
நெய்தல் திணை (அம்மூவனார்)
தோழிக்குரைத்த பத்து
தலைவன் வரவுக்காக மனம் இரங்கி, தலைவி தோழியிடம் கூறும் செய்திகள் இதில் உள்ளன. அம்ம வாழி தோழி – என்று எல்லாப் பாடல்களும் தோழியை விளித்துக் கூறுகிறது.
"அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங் கழிச்சேர்ப்பன்
தான் வரக் காண்குவம்நாமே;
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே".
பொருள்
பசுமையான இலை கொண்ட செருந்தி மரமானது உப்பங்கழிப் பரப்பில் பூத்துக் கிடக்கும் சேர்மிக்க சேர்ப்புநிலத் தலைவன் அவன். அவன் வருவதை முன்பெல்லாம் கண்டு இன்புற்ற நாம் இப்போது அவனை நெஞ்சம் மறக்கும் நிலை ஆயிற்றே. இதனை வெளியில் சொல்லவும் நெஞ்சம் நாணுகிறதே.
தொண்டிப் பத்து
இதிலுள்ள பாடல்கள் தொண்டி துறைமுகம் பற்றி பேசுகின்றன.
"இரவினானும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங் கூந்தல் அணங்குற்றோரே".
பொருள்
பின்னிய கூந்தலில் தொண்டியில் பூத்த நெய்தல் மலரைச் சூடிக்கொண்டிருக்கும் அவள் அழகில் மயங்கி வருந்துபவர் இரவிலும் கூடப் பாம்பு பாய வருவது போல் தூங்காமல் இருப்பர்
குறிஞ்சி திணை (கபிலர்)
அம்ம வாழிப் பத்து
"அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன்
இன்னினி வாராமாறுகொல்
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே?"
பொருள்
தலைமகள் தோழியிடம், அம்ம வாழி, தோழி! நம் ஊருக்கு வந்து செல்லும் மார்பன்; மணக்கும் மார்பன்; இதமாகத் தழுவும் மார்பன், இனி தம் ஊருக்கு வரமாட்டாரோ என்று என் நெற்றி பசக்கிறது போலும்.
பாலைத்திணை (ஓதலாந்தையார்)
தலைவி இரங்கு பத்து
தலைவி கலக்கத்துடன் தோழியிடம் சொல்கிறாள்
"அம்ம வாழி, தோழி! நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள் பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே"
பொருள்
அம்ம தோழி! இதனைக் கேள்; பிரியாதவர் போல காட்டிக்கொண்டு என்னைப் புணர்ந்தார். பொருள் ஆசை அவரை விடவில்லை. பொருள் தேடிவரக் கோடை காலத்தில் பிரிந்து சென்றுவிட்டார்.
முல்லைத்திணை (பேயனார்)
பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து
கார் காலம் வரும்போது திரும்பிவிடுவேன் – என்று கூறிச் சென்ற கணவன் வராமை கண்டு மனைவி கூறும் செய்தி இங்குக் கூறப்படுகிறது.
"அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ,
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே:
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து,
மின் இழை ஞெகிழச் சாஅய்,
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே!"
பொருள்
அரசனே, நீ உன் பகையைத் தணித்துக்கொள் – என்று முரசு முழக்கிச் சொல்வது போல கார்மேகம் இடிக்கத் தொடங்கிவிட்டது. அந்தோ! என் அகன்று விரிந்த மார்பகத்தோள் இரங்கத் தக்கது. ஒளி பசந்து, மின்னும் அணிகலன்கள் கழன்று, பழமையான நலமெல்லாம் இழந்து வாடுகிறது.
முழு நூலை உரையோடு படிக்க
கருத்துகள்
கருத்துரையிடுக