சங்க நூல்கள் அறிமுகம் - 5
கலித்தொகை - இசைத்தமிழ் இலக்கியம்
கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன.
கலித்தொகையின் ஒவ்வொரு பாடலும் சிறு நாடகமாக அமைகின்ற அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர் பெற்ற நூல். மூவேந்தர்களில் பாண்டிய மன்னனைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது.
பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
கலித்தொகை ஐந்து திணைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக உள்ளது.
பாலைக்கலி -பாடியவர் - பெருங்கடுங்கோன் (35 பாடல்கள்)
'உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந்துயரம் கண்ணீா் நினைக்கும் கடுமை காடு'
எனப் பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும் தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கியக் கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள்
குறிஞ்சிக்கலி -பாடியவர் - கபிலர் ( 29 பாடல்கள்)
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும். குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அமைந்து படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளன
மருதக்கலி -பாடியவர் - கபிலர் ( 35 பாடல்கள்)
பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும் அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும் தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை.
முல்லைக்கலி -பாடியவர் - சோழன் நல்லுருத்திரன்( 17 பாடல்கள்)
தலைவனோடு மனத்தால் ஒன்றுபட்டு இருந்த தலைவி தலைவன் பிரிந்து சென்ற போது இல்லிருந்து தன்மனதை ஆற்றியிருத்தலைக் கூறுகின்றன. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச் சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
நெய்தல்கலி -பாடியவர் - நல்லந்துவனார் ( 33 பாடல்கள்)
பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது
கடவுள் வாழ்த்து
பாடியவர் - நல்லந்துவனார். இந்தப் பாடல் சிவபெருமானை விளித்து அவனது
கூத்தைப் போற்றிப் பாடுகிறது.
"ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி: (தரவு)
படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?
கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ? (தாழிசை)
என ஆங்கு
இது தனச்சொல்
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி ( சுரிதகம்)
பொருள்
சிவபெருமான் நெறிமுறைகளை அந்தணர்க்கு அவர்களின் மறையாகிய வேதத்தைச் சொன்னவன்; சடையில் (கங்கை)நீரை அடக்கியவன்; முப்புரம் எரித்தவன்; கூளியாகவும் விளங்கி போர் புரிபவன்; நஞ்சுமணியைத் தொண்டைக்குள் அடக்கிக்கொண்டவன்; எட்டுக் கைகளைக் கொண்டவன். –
எண் கையாய், இதனைக் கேள்!
பறை முழக்கத்துடன் பல உருவம் காட்டிக்கொண்டு நீ ‘கொடுகொட்டி’ ஆடும்போது உன்னோடு இருக்கும் உமை சீர் பாடுவாளோ?
திரிபுரம் எரித்து அதன் சாம்பல் நீற்றை அணிந்துகொண்டு ‘பாண்டரங்கம்’ ஆடும்போது அவன் ‘தூக்கு’-இசை பாடுவாளோ?
புலித்தோல் அணிந்துகொண்டு, கொன்றைமாலை தோளில் புரளும்படி, நீ வென்றவரின் மண்டையைக் கையில் வைத்துக்கொண்டு ‘கபாலம்’ ஆடும்போது அவள் பாணி பாடுவாளோ?
இப்படி அவள், பாணி, சீர், தூக்கு தந்து உன் ஆட்டத்துக்குத் துணை புரிய நீ எங்களைக் காப்பாற்றுவதற்காக ஆடிக்கொண்டே இருப்பாயாக.
சில பாடல்கள்
குறிஞ்சிக்கலி - பாடல் - 51
"சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,
அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்"
(இந்தப்பாடல் ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்து இன்பம் பயப்பதாகும். இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின் முன்னோடியாகக் கூறப்படுகிறது.)
பொருள்
தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.
சுடரும் வளையல் அணிந்தவளே கேள்.
அன்று ஒருநாள் நாம் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடினோம். அப்போது, அங்கு ஒருவன் வந்தான். தன் காலால் நம் மணல் வீட்டைக் கலைத்தான். நாம் சூடியிருந்த மாலைகளைப் பரித்துக்கொண்டான். நம் பந்துகளையும் எடுத்துக்கொண்டு ஓடினான். இப்படியெல்லாம் நமக்குத் துன்பம் உண்டாக்கியவன் அவன்.
குறும்பு செய்யும் பட்டிக் காளை போன்றவன் அவன்,
பின்னர் ஒருநாள் வந்தான். என் தாயும் நானும் வீட்டில் இருந்தோம்.“தண்ணீர் தாகமாக இருக்கிறது” என்றான். என் தாய் அடர்ந்த பொன் கிண்ணத்தில் தண்ணீர் மொண்டுகொண்டு வந்தாள். சுடரும் அணிகலன் பூண்டவளே! அவன் நீர் உண்ணும்படிச் செய்துவிட்டு வா - என்றாள்.நானும் முன்பு குறும்பு செய்த அவன் என்று அறியாமல் சென்றேன். அவன் வளையலணிந்த என் கையைப் பற்றி இழுத்துத் துன்புறுத்தினான். நான் மருண்டுபோனேன்.
“அன்னாய், இவன் ஒருவன் செய்வதைப் பார்” என்று கூச்சலிட்டேன். என் தாய் அலறிக்கொண்டு ஓடிவந்தாள். “உண்ணும் தண்ணீர் விக்கினான்” என்றேன். அன்னை அவன் பிடரியை நீவினாள். அவனோ என்னைக் கடைக்கண்ணால் பார்த்தான். கொல்பவன் போலப் பார்த்தான். அவனும் நானும் சிரித்துக்கொண்டோம்.
அவன் திருடன் மகன். (காதல் திருடன்).
முல்லைக்கலி - பாடல் - 105
"அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி,
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும்,
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்,
கால முன்பின் பிறவும், சால
மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும்,
தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ
அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க,
நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து
மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும்,
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி,
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக்
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா
வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப்
போதரும் பால் மதியும் போன்ம்!
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ (தோழி தன் நெஞ்சோடு தலைவி விரும்பக் கூறியது
வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில்
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,
பாடு இல, ஆய மகள் கண்
நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர, (தலைவியை நோக்கித் தோழி கூறுதல்)
சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,
ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட
கொல் ஏறு போலும் கதம்?
நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்:
கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
தம் கண் பொடிவது எவன்?
ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
அலர் செய்து விட்டது இவ் ஊர்?
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்!
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன்
மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு?
தோழி என
பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியாற் பரவுதும் 'நாடு கொண்டு,
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பரும் விளங்குக!' எனவே
(ஏறு தழுவியவிதத்தைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி, அவள் ஏறு தழுவிய தலைவனை விருப்பொடு நோக்கியவாற்றைத் தன்னுள்ளே கூறி, முன்னர்க் களவின்கண் தமர் கோபித்ததனையும் அயலார் பொறாதிருந்த தன்மையினையும் தலைவிக்குக் கூற, அவளும், 'அவர் அலர் கூறியது நன்று' என்று கூறி,'அன்றே என் நெஞ்சு கலந்து விட்டது; இனி அவர் கொடுப்பதாகக் கூறிய நாளில் செய்வது என்?' என மகிழ்ந்துகூற, அது கேட்ட தோழி, 'யாம் அங்ஙனம் கூடி இனிது இருக்குமாறு காக்கின்ற பாண்டியன் நீடு வாழுமாறு தெய்வத்தைப் பரவுகம் வா' எனக் கூறியது)
பொருள்
பாண்டியர் குடி வழியில் தோன்றியவர் ஆயர். பாண்டியர் அரசு அரசர்கள் அழியும்படிச் செய்து ஆண்டவர்கள். முரசு முழங்கும் முதுகுடி அரசர்கள். முரண் மிகு செல்வர் எனப் போற்றப்படுபவர். அவர்களின் தொல்குடிக்கு உரியது கடலில் தோன்றி கடல் நிலத்தில் வளரும் முத்து. "பாண்டியர் தீது இல்லாமல் சிறப்புடன் வாழவேண்டும் என்று உவகைப் பெருக்கில் ஒன்று கூடி வாழ்த்துபவர் ஆயர். அழிவின்றி வாழும் குடி ஆயர் குடி.
ஆயர் குற்றமற்ற உள்ளத்தோடு ஒன்று திரண்டனர். கூர்மையான முள்-சக்கரம் ஒரு கையிலும், சங்கு ஒரு கையிலும் கொண்டவன் திருமால். அவன் சங்கு போல் நிறம் கொண்டது ஒரு காளை.
ஒரு பக்கக் காதில் மட்டும் குழை அணிந்தவன் அம்மையப்பன். அவனது எரி நிறம் போலச் சிவந்த மறுவினைக் கொண்டது ஒரு வெள்ளைக் காளை.
கணிச்சிப் படை கொண்ட சிவபெருமானின் கழுத்தில் தேங்கிய நஞ்சு போல் தன் திமிலில் மட்டும் குரால் (நீலம்) நிறம் கொண்டது ஒரு காளை.
வச்சிரப் படை கொண்ட இந்திரன் உடம்பில் ஆயிரம் கண்கள் இருப்பது போல உடம்பில் புள்ளிகளைக் கொண்டது ஒரு காளை
வேல் வீசுவதில் வல்ல முருகன் அணிந்திருக்கும் வெண்ணிற ஆடை போல் காலில் வெண்ணிறம் கொண்டது ஒரு காளை.
எமனைப் போல வலிமை கொண்டவை பிற காளைகள். சிங்கமும், கணிச்சிப் படையும், காலத் தெய்வமும், கூற்றுவனும் தொடர்வது போன்ற காளைகளுடன் போரிட ஆயர் தொழுவத்துக்குள் புகுந்தனர்.
அப்போது இடி முழக்கம் போலப் பறைகள் ஒலித்தன. மேனியிலிருந்து கமழும் மணப்புகையுடன் வெண்மேகம் போல மகளிர் அணி நின்றது. பொதுவர் தொழுவத்துக்குள்ளே பாய்ந்தனர்.
சிலர் காளைகளின் கொம்பைப் பிடித்தனர். சிலர் காளையைத் தன் மார்பில் தழுவிக்கொண்டனர். சிலர் கழுத்தில் தாவினர். சிலர் அதன் கொட்டேறியைப் பிடித்து அடக்க முயன்றனர். சிலர் காளையின் தோளில் தொங்கினர். இப்படியெல்லாம் அடக்க முயன்றவர்களைக் காளை தன் கொம்புகளால் குத்தித் தடுத்து நிறுத்தியது.
பிடிக்க முயல்பவர்களைத் தன் கொம்புகளால் குத்தி அவர்கள் தன்னைப் பிடிக்க முடியாதபடிக் காளை தடுக்கும் காளையைப் பார். குறைநாள் இருக்கும்போதே உயிரை கொண்டு செல்ல வந்திருக்கும் எமன் போல அவை பாய்ந்தன.
பெருமிதம் காட்டியவர் சாயும்படி சிவலைக்காரிக் காளை குத்திக்கொண்டு ஆடுவதைப் பார். பூ மலரும் பதம் பார்த்து தும்பி வண்டு அதனை மொய்ப்பது போல் அந்தச் செங்காரிக் காளையின் செயல்பாடு இருக்கிறது.
பிடரியில் ஏறிப் பிடிக்க முயல்பவனைப் பாயும் வெள்ளைக் காளையைப் பார். வெளிச்சம் மிக்க வானத்தில் முழுநிலாவை விழுங்கும்ஃ பாம்பின்ஃ வாயிலிருந்து தப்பி வெளிவரும் நிலாப் போல அது காணப்படுகிறது
காளைகளும் பொதுவரும் தொழுவத்துக்குள் மோதிக்கொண்டனர். அது இரு பெரு வேந்தர்கள் நோதிக்கொள்ளும் போர்க்களம் போலக் காணப்பட்டது.
தன் காளையை அதன் கொட்டேறியைப் பிடித்து அடக்கிய பொதுவனை ஆயர் குலப் பெண் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
நல்லவளே! உன் விரிந்த கூந்தலில் முல்லைப் பூ மணப்பதைப் பார்த்து உன் பெற்றோர் உன்னைச் சினத்துடன் பார்க்கின்றனர். பொதுவனைச் சினந்து பாயும் கொல்லேறு போல் ஏன் பார்க்கின்றனர்.
நீண்ட கூந்தலை உடையவளே! கொம்புகளை உடைய மாடுகளை மேய்க்கும் ஆயர் மகனை நாம் தெரிந்தெடுத்தால் நம்மவர்கள் பொறுப்பார்களா? பொறுக்காதவர்கள் தம் கண்களிலிருந்து தீயைக் கக்குகின்றனர்.
அழகிய முகம் கொண்டவளே! என் தாய் என்னை அடித்தாள் என்று ஊரார் என்னைப் பொதுவனோடு சேர்த்துக் கதை கட்டிவிட்டனர்.
ஒள்ளிழை பூண்டவளே! புகர்க்காளை ஆயனுக்கு இன்று என்னைப் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். நானோஅவன் செங்காளையை அடக்கியபோதே என் நெஞ்சை அவனிடம் பறிகொடுத்துவிட்டேன்.
இப்படிக் காளைப்போரைச் சொல்லிக்கொண்டு பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கும் சக்கரத்தானைப் போற்றுவோம். நாடுகள் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்டு தென்னாட்டை ஆளும் பொதியமலைத் தலைவன் அருவிகள் பாயும் இமயமலை வரையில் வென்று புகழுடன் விளங்க உதவ வேண்டும் என்று திருமாலைப் போற்றிப் பரவுவோம்.
முழு நூலும் உரையுடன் இணைப்பில் காண்க
கருத்துகள்
கருத்துரையிடுக