முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழின் முதல் இசைப்பாடல் - பரிபாடல் ஒரு அறிமுகம் (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் - 6 

பரிபாடல்  பாடுவோமே!

முதலில் பரிபாடலின் சிறப்புகளைப் பார்ப்போமா?

  • அகமும் புறமும் கலந்து எழுதப்பட்ட எட்டுத்தொகை நூல் பரிபாடல்
  • தமிழின் முதல் பக்தி இசைப்பாடல் நூல்
  • பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல்
  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களுக்கும்; பலவகை அடிகளுக்கும் பரிந்து, பரிந்து செல்லும் ஓசையை உடைய பரிபாட்டுகளின் தொகுப்பாதலால், 'பரிபாடல்' ஆனது.
  • இதில் 20 அடி முதல் 400 அடி வரை உள்ள பாடல்கள் உள்ளன.
  • பரிபாடல் மொத்தம் 70 பாடல்களைக் கொண்டது. ஆனால் நமக்குக் கிடைத்துள்ளவை 22 பாடல்கள் மட்டுமே
  • பரிபாடல்கள் மதுரையையும், மதுரைக்கு அழகும், வளமும், காப்பும் தந்த வைகையையும், மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளையும் (முருகன்), திருமாலிருங்குன்றத்து மாயோனையும் (திருமால்), கொற்றவையையும் பாடுகின்றன.
  •  13 புலவர்கள் பாடியுள்ளனர். 7 சான்றோர் பண் வகுத்துள்ளனர்
  • திருமாலைப்பற்றிய 8 பாடல்களில் 7 கிடைத்துள்ளன. செவ்வேளைப் பற்றிய 31 பாடல்களில் 8 கிடைத்துள்ளன. வைகையைப் பற்றிய 26ல் கிடைத்தவை 9 பாடல்கள்
  • பரிபாடலுக்கு பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார்
  • இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதைய்யர்
  • பரிபாடலில் வடமொழிப் புராணக் கதைகள், வடபுலத்து வழிபாட்டு மரபுகள் மிகுதியாக உள்ளன.
  • தமிழர் வடமொழியாளர் தொடர்பு பலவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை பறைசாற்றுகிறது இந்நூல்.
சில பாடல்கள்

திருமாலை வாழ்த்தும் பாடல்

பாடல் விளக்கம்:  இந்தப் பாடல் திருமாலைப் பலராமனோடு இணைத்து இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் காட்டிப் புகழ்கிறது. நானும் உன்மீது காம வேட்கை கொண்டுள்ள என் சுற்றமும் உன்னோடு ஒன்றி உன் காலடியில் நாளெல்லாம் கிடக்கவேண்டும் என ஏங்கி உன்னைப் போற்றுகின்றேன். வாய்மொழிப் புலவனே! அருள் புரிய வேண்டும் – என்று வேண்டிப் பாடல் முடிகிறது.

"ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை -

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 

றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை

சொல்லில் அடங்காப் பெரும் புகழ்

‘பொருவேம்’ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 

அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்

விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்


திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 

நிலனும், நீடிய இமயமும், நீ.
அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 

மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே


பொருள்

நாஞ்சில் ஒருகுழை ஒருவன் (பலராமன்)
அச்சம் தரும் ஆயிரம் தலையை உடைய பாம்பு தீயை உமிழும் திறமையோடு உன் தலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. மாமைநிறம் கொண்ட மலர்மகள் உன் மார்பில் வாழ்கிறாள். நீயோ வெண்சங்கு போன்ற வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறாய். வானளாவிய பனைமரம், அழகு மிக்க யானை இரண்டையும் கொடியாகப் பிடித்துக்கொண்டுள்ளாய். வாய் வளைந்திருக்கும் நாஞ்சில் என்னும் கலப்பையை ஒரு காதில் மட்டும் குழையாக மாட்டிக்கொண்டுள்ளாய்.

அருமறைப் பொருளே! நீ 
எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன்; பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன்; அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன்; அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணி, கௌவுத்துவ-மணி) உடையவன்; 
பெரிய மலை பற்றி எரிவது போன்ற பொன்னிழையாலான உடுக்கை-ஆடை உடையவன்; கருடச்சேவல் அழகு தரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவன்; உன் ஏவலின்படி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமறையின் பொருளாக விளங்குபவன்

சொல்லச் சொல்ல அடங்காத பெரும்புகழை உடையவன் நீ; ‘போரிவேன்’ என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களின் கொட்டத்தை அடக்கிப் போரில் வென்றி கண்ட அண்ணல் (பெருந்தலைவன்) நீ; காமன், பிரமன் என்னும் இருவர்க்கும் தந்தை நீ; ஒளிரும் அணிகலன்களை பூண்டிருக்கும் திருமால் நீ; மயக்கம் இல்லாமல் எல்லாவற்றையும் உணரவல்ல முனிவர்க்கும் நீ எதற்கு வந்திருக்கிறாய் என்பது தெளிவாகத் தெரியாது. அப்படிப்பட்ட மரபினை (கால்வழியை) உடையவன் நீ.
அப்படிப்பட்ட உன்னை இன்ன தன்மை உடையவன் என்று சொல்லுதல் எனக்கு எளிதாகுமா?

சொல்லமுடியாத உன் அருமை எனக்கு நன்றாகத் தெரியும்; என்றாலும் உன்னைப்பற்றி ஏதாவது சொல்லவேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு எழுகிறது.
உன் பெருமையைச் சொல்ல வல்லமை இல்லாத நான் இங்குச் சொல்வதை ஏதோ காற்றில் பறக்கும் மெல்லிய சொற்கள் என வெறுக்காமல் எனக்கு அருள் 
புரிதல் வேண்டும். திருமகளை மார்பிலே மறுவாக வைத்திருப்பவனே! 
அருள் புரிதல் வேண்டும்.

அந்தணர் வெற்றியும் சிறப்பும் மிக்க ஒழுக்கநெறி கொண்டவர். அவர்கள் காப்பாற்றும் அறநெறியும் நீ; ஆர்வமுடன் தேடுபவர்களுக்கு அளி தரும் வள்ளலும் நீ; திறனில்லாதவர் திருத்தும் தீதற்ற சிறப்பினை உடைய மறச்செயலும் நீ; மறம் கொண்ட பகைவரை வருத்துபவனும் நீ; வானத்துக்கு அழகு செய்யும் நிலவொளியைத் தரும் நிலாவும் நீ; சுட்டெரிக்கும் வெயில் தரும் கதிரவனும் நீ.
ஐந்து தலைகள் கொண்டவனாக விளங்குபவனும் நீ; சிங்கமாகத் திகழ்பவனும் நீ; எல்லா நலமும் பொருந்தியதாகக் குற்றமற்று விளங்கும் விளைநிலமும் நீ; விளையாத பூமியும் நீ; இவற்றில் வரும் மணமும் நீ; வலிமை மிக்க மேகம் நீ. 
மேகம் தவழும் விசும்பு நீ; விசும்பு தொட்டுக்கொண்டிருக்கும் நிலமும் நீ; 
நிலத்தில் உயர்ந்திருக்கும் இமயமலையும் நீ.

அதனால் நீ இன்னவரைப் போன்றவன், இந்தத் தன்மையன், அந்தத் தன்மையன் என்றெல்லாம் காணாமையால், பொன்னணிச் சக்கரத்தை வலப்புறம் கொண்டுள்ள மன்னுயிர் முதல்வன் எனக் கண்டேன். 
ஆதலின் நினக்கே உரித்தான இத் தன்மையும் அதன் புகழுமாகப் பொலிவுற்று வாழ்வாயாக!

உன்னைப் போன்றது உன் புகழ்; பொன்னைப்  போன்றது உன் உடை; உன்னிடம் இருப்பது கருடப்புள்; புரிசங்கு, பழிப்போரை அழிக்கும் சக்கரம், மணி பதித்த மார்பணி, எண்ண முடியாத புகழ், எழில் திகழும் மார்பு.

இவ்வாறெல்லாம் இருக்கும் உனக்கு உன் அடியுறையாக (செருப்பாக) நான் இருப்பேன்; என்னோடு சேர்ந்து உன்மேல் காமம் கொண்டுள்ள என் சுற்றமும் ஒன்று சேர்ந்து இருக்கும்; அவ்வாறு நாங்கள் நாளெல்லாம் உன்னொடு ஒன்றிக் கிடக்கவேண்டும் என்று நெஞ்சில் கிடக்கும் ஏக்கத்தோடு பரவுகின்றேன். 
திருவடி நிழலைத் தொழுது வாழ்த்துகின்றேன். 
வாக்குத் தவறாத வாய்மொழிப் புலவனே! வழங்குவாயாக!


முருகப்பெருமானை (செவ்வேள்) வாழ்த்தும் பாடல்

பாடல் விளக்கம்முருகன் குன்றத்தில் கார் காலத்தில் மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. மக்கள் முருகனை வாழ்த்தி மகிழ்ந்து பூக்கின்றனர். எப்போதும் வாழ்த்திக்கொண்டே இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இப் பருவத்தே தலைமகன் வரும்' என்பது படத் தோழி வற்புறுத்தியது

கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே,          5
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன;   
                        
மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்    15
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று.

போர் மலிந்து,
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன 20
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!  25
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,         30
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!

பொருள்

முருகன் குடிகொண்டுள்ள குன்றத்தில் ( திருப்பரங்குன்றம்) கார் காலம் தோன்றிற்று. மேகங்கள் கூடி முழங்கி மழை பொழிந்தது. அதனால் நீர் நிறைந்த சுனைகளில் பூக்கள் மலர்ந்தன. மணக்கும் கடப்பம் பூவில் அமர்ந்து தேன் உண்ணும் வண்டுகளின் ஒலி இசைப்பண்ணைப் போன்று இருந்தது. முருகேறி ஆடும் மகளிரின் தோள்கள் மலையடுக்கங்களில் இருக்கும் மூங்கிலைப் போன்று விளங்கின. வாகைப் பூப் போன்ற கொண்டையுடன் ஆடும் மயில் அகவும் ஓசை மணந்து பிரிந்து நிற்பவர்களை, “பிரிந்து நிற்காமல் கூடுங்கள்” என்று குரல் கொடுப்பது போல் இருந்தது. கொன்றைப் பூக்கள் பொன்மாலைகள் போல் இருந்தன. வேங்கைப் பூக்கள் அகன்ற பாறைகளில் கொட்டின. அழுதுகொண்டிருந்த மகளிர் உவகை (உழுவை) கொண்டனர். நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் வளைந்த காந்தள், கொடி விட்டுப் படர்ந்திருக்கும் தோன்றி, பவளம் போல் சிவந்த பூக்கள் முதலானவை மலர்ந்தன. இப்படிக் குன்றம் கார்காலத்தில் பொலிவுடன் திகழ்ந்தது.

மக்கள் முருகனை வாழ்த்தினர். போர்க்கோலம் பூண்டு சூரபன்மனைக் கொன்ற வேல்-படை கொண்டவனே! கறை படாத கார்மேகம் பொங்குவது போலப் புகையும் நறும்புகைகளுக்கு இடையே அமர்ந்திருப்பவனே! ஆறு முகமும் 12 தோளும் காட்டி வள்ளி மகள் மலரை மணந்தவனே! உறவினர் சூழ்ந்து எழுச்சியுடன் உன்னைப் பாடக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பவனே! நீ பிறந்தபோதே, சிறப்பு மிக்க இந்திரன் போன்றோர் அஞ்சி நடுங்கிய சீர்மை கொண்டவனே! இரண்டு பிறப்பும், இரண்டு பெயரும், ஈர நெஞ்சமும் கொண்ட அந்தணர் செய்யும் அறத்தில் அமர்ந்திருப்பவனே!

இப்படிப்பட்டவனாக நீ விளங்குவதால், உன்னை விரும்பி, நெருங்கி நெருங்கி வழிபடுகின்றோம். அப்படி வழிபடுவதன் பயன் பின்னும் பின்னும் வழிபடுவதாக அமையவேண்டும். பழங்காலம் தொட்டே மண்டிக் கிடக்கும் முருகனின் புகழ்போல் நாங்கள் வழிபடும் நாள்கள் பெருக வேண்டும் என்றெல்லாம் வேண்டுகின்றனர்



முழு நூல் உரையுடன் இணைப்பில்














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....