சங்க நூல்கள் அறிமுகம் - 7
புறநானூறு
ஒரு சிறப்பு அறிமுகம் எனக் குறிப்பிட்டதின் காரணம்: நான் எழுதவில்லை. எனது
குருநாதர் சுஜாதா அவர்கள் எழுதியதை இங்கு கொடுத்துள்ளேன். அவர் எழுதிய 'புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்' வாங்கிப் பாடியுங்கள். அவ்வளவு எளிமையாக, சிறப்பாக விளக்கியிருக்கிறார். அதிலிருந்து சிறிய கட்டுரையாகவும் வெளிவந்தது. அதையே இங்கு வழங்குகிறேன்.இணைப்பில் உ.வே.சா மற்றும் புலியூர்க்கேசிகன் உரைகள் உள்ளன. அனைவரும் படித்து பயன் பெறவேண்டிய நூல்.
புறநானூறின் சிறப்புகள் - சுஜாதா
புறநானூறு உள்ளிட்ட பல சங்கப்பாடல்களில் யவனர்களைப் பற்றியும் அவர்களுடன் வாணிகம் பற்றியும், முசிறி போன்ற துறைமுகங்கள் பற்றியும்
வரிகள் உள்ளன. பெரிப்ளூஸ், டாலமி, ப்ளினி போன்றவர்களின் பூகோள பிரயாண நூல்களில், தென்னிந்திய துறைமுகங்களில் - குறிப்பாக, மிளகு பண்டமாற்றம் செய்ததைப் பற்றியும் செய்திகள் உள்ளன. 'மான்சூன்' என்னும் பருவக்காற்றின் சாதகத்தை, 'ஹிப்பாலஸ்' என்னும் மாலுமி கண்டுபிடித்த கி.பி. 45க்குப் பின்தான் கிரேக்க- தென்னிந்திய வர்த்தகம் தழைத்தோங்கியது.புறநானூறு 343 - முசிறி துறைமுகத்தில் வீடு தோறும் மிளகு குவித்து வைத்திருந்ததையும், பண்டமாற்றுத் தங்கத்தைக் கொண்டு வந்த சிறு படகுகளைப் பற்றியும் சொல்கிறது. சிலப்பதிகாரம் - சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டியதையும் இலங்கை மன்னன் கயவாகு வந்து வழிபட்டதையும் சொல்கிறது. கயவாகு, கி.பி 171லிருந்து 192 வரை ஆண்டதைக் கெய்கர் குறிப்பிட்டுள்ளார். செங்குட்டுவனின் காலத்தை - பதிற்றுப் பத்திலிருந்து கி.பி 170லிருந்து 226 வரை என அறிய முடிகிறது. செங்குட்டுவன் உதியன் சேரலாதனின் பேரன். எனவே, பெருஞ்சோற்று உதியன் என்று கூறப்படும் சேர மன்னனின் காலம், கி.பி 130 ஆகிறது; மகாபாரதக் காலமில்லை. அல்லது, இவன் வெறும் சோற்று உதியன் என்று சொல்லித் தப்பிக்கலாம்.
எப்படியும் சங்க காலத்துப் புலவர்களை, இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டுத் திறமையுள்ள ஆராய்ச்சியாளர்கள் சொல்வதில்லை. தமிழ் மொழியின் 'நான்' 'யான்' போன்ற பிரயோகங்களையும் அதில் சேர, சோழ, பாண்டிய, குறு நில மன்னர்களின் பெயர்களையும் வைத்து ஆராயும் கட்டுரைகள் நம்புதற்குரியவை. 'மைம்மீன் ஆயினும் தூமம் தோன்றினும்' போன்ற வானவியல் குறிப்புகளும் பல உள்ளன. சனி பகவான் - ரிஷபம், சிம்மம், மீனம் போன்ற ராசிகளோடு மாறுபடுவதும், இவற்றுள் சனி சிம்ம ராசியில் புகுந்தால், உலகத்திற்குக் கேடும் விளையுமாம். தூமம் என்பது வால் நட்சத்திரம். இந்த விவரத்திலிருந்து தேதி, நேரம், நிமிஷம் போன்றவைகளைச் சோதிட வல்லவர்கள் கண்டுபிடிக்கமுடியும்.
எந்த நூற்றண்டாக இருந்தாலும், புறநானூறின் பாடல்கள் உலக இலக்கியத் தரத்திற்கு உயர்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. பல பாடல்கள், பரிசில் விரும்பும் புலவர்கள் புரவலர்களையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடுபவை. இருப்பினும் சில பாடல்கள் பிரமிப்போட்டும் கருத்துகள் கொண்டவை.
'தூணைப் பிடித்துக் கொண்டு என்ன கேட்கிறாய்' என்று நேரடியாகச் சொல்லாமல், 'என் சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு என்ன கேட்கிறாய்' என்று இழுத்தடிப்பார்கள். 'வேல்' என்று நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். 'பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்' என்பார்கள். அதாவது, பூமியில் நிறைந்த பாதுகாப்பும், புதிதான புலால் நாற்றமும் உடைய நீண்ட வேல். 'மனைவி' என்று நேரடியாக இருக்காது. 'நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நுதல் மெல்லியக் குறுமகள்' என்று அவள் போட்டிருக்கும் நகை, அவள் நெற்றி, கண் போன்றவைகளை ஆகுபெயர்களாகச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமில்லாமல் வர்ணித்துவிட்டுதான் விஷயத்துக்கே வருவார்கள். இந்த நவீன யுகத்துக்கு அனாவசிய வர்ணனைகளை உதிர்த்துவிட்டுப் பார்க்கையில், பாடலில் ஒளிந்திருக்கும் ஆதாரக் கருத்து பலமுறை பிரமிப்பூட்டும். இதைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு மட்டும் எளிமைப்படுத்தியுள்ளேன்.
சில சமயம் மிக அழகான உவமைகள் வரும்போது அவைகளை அப்படியே கொடுத்திருக்கிறேன். உதாரணமாக, மேலே குறிப்பிட்டதில், பரிசு கேட்டு வந்த புலவருக்குப் பரிசு கிடைக்கவில்லை. அதை, 'நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நுதல்' நாணம் மட்டுமே நகையாக அணிந்த மனைவியை நோக்கித் திரும்புகிறேன் என்கிறார். அவளுடைய ஏழ்மையும், அழகும் ஏழ்மையும் அழகும் ஒரே சமயத்தில் வெளிப்படுகின்றன. இது நிச்சயம் குறிப்பிட வேண்டிய அழகான வர்ணனை. இவ்வாறு எத்தனையோ சிறப்புகள்.
- சுஜாதா 08 - 12- 2002
புறநானூறு - முக்கிய குறிப்புகள்
- 400 புறப்பாடல்களைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது.
- இதனை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.
- இதில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. இக் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த 18 சேர மன்னர்கள், 18 சோழ மன்னர்கள், 15 பாண்டிய மன்னர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், கடையேழு வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், சான்றோர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளும், அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரீகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலியனவும் இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
- ஔவையார், பாரி மகளிர், வெண்ணீக் குயத்தியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு உள்ளிட்ட 15 பெண்பாற்புலவர்கள் புறநானூற்றில் பாடியுள்ளனர். ஔவையாரே 33 பாடல்கள் பாடியுள்ளார்.
- இப்பாடல்கள், வெட்சி, கரந்தை, வங்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என வழங்கப் பெறும் புறத்திணைகளுக்குரிய துறைப் பொருள்கள் கொண்டு அமைந்தவையாகும். (திணை - ஒழுக்கம், நெறி, துறை - திணையின் உட்பிரிவு)
- இந்நூலில் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
சில பாடல்கள்
பாடியவர் : ஔவையார் பாடப்படோண் : அதியமான்
திணை : பாடாண் துறை- வாழ்த்தியல்
பாடல் பின்னணி: தன்னுடைய நாட்டில் ஒருமுறை அதியமான் உயர்ந்த மலைப்பிளவு ஒன்றில் உள்ள நெல்லி மரத்தின் இனிய கனி ஒன்றைப் பறித்துக்கொண்டு வந்தான். அதை உண்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என அறிந்தான். தான் அதை உண்ணாது, ஒளவையாருக்கு அதைக் கொடுத்தான். அவனைப் புகழ்ந்து ஒளவைப் பெருமாட்டி இயற்றிய பாடல் இது.
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
மன்னுக பெரும! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே"
பொருள்:
வெற்றி மிகுந்த குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி வென்ற, கழல விடப்பட்ட வீர வளையல்களை அணிந்த பெரிய கைகளையும், ஆரவாரத்தைச் செய்யும் கள்ளையுமுடைய அதியர் தலைவனே!
போரில் பகைவரைக் கொல்லும் மறச் செல்வத்தை உடையவனும், பொன்னால் செய்யப்பட்ட மாலையையும் அணிந்தவனுமான நெடுமான் அஞ்சியே!
பால் போன்ற பிறை நிலா நெற்றியில் பொலியும் தலையையும், நீலமணியைப் போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவனைப் போல நீ நிலைபெறுவாயாகப் பெருமானே!
பழைய நிலைமையுடைய பெரிய மலையின் பிளவில் உள்ள, ஏறுவதற்கு அரிய உச்சியில் உள்ள, சிறிய இலையையுடைய நெல்லி மரத்தின் இனிய கனியைப் பெறுவதற்கு அரிது என்று கருதாது, அதனால் வரும் பயனை அறிந்தும் அதை என்னிடம் கூறாது உனக்குள்ளேயே வைத்து, சாதல் நீங்க எனக்கு அதை அளித்தாயே!
_________________________
பாடியவர் : கபிலர் பாடப்படோண் : வேள்பாரி, மூவேந்தர்
திணை : நொச்சி துறை- மகண்மறுத்தல்
பாடல் பின்னணி:
மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் பறம்பு மலையைப் பெரும்படையுடன் சூழ்ந்து கொண்டனர். பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், பாரியின் போர் வல்லமையையும், கொடை வண்மையையும் புகழ்ந்து, அவர்களை அறிவுறுத்தும்படியாக இயற்றிய பாடல் இது.
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு,
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும் உளமே,
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.
பொருள்:
கடந்து சென்று அழிக்கும் படையோடு நீங்கள் மூவரும் கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை வெல்வதற்கு இயலாது. முந்நூறு ஊர்களைக் கொண்டது இந்தக் குளிர்ந்த, நல்ல பறம்பு நாடு. முந்நூறு ஊர்களையும் பரிசில் வேண்டி வந்தவர்கள் பெற்றுக் கொண்டு விட்டனர். இங்கே நானும் பாரியும் உள்ளோம். நீங்கள் பாடியபடி பாரியிடம் சென்றால், பறம்பு மலையும் உங்களுக்கு உண்டு.
புறநானூறு - பதிவிறக்க இணைப்புகள்
புறநானூறு - உ.வெ. சாமிநாதைய்யர் (Download)
புறநானூறு - புலியூர்க் கேசிகன் (Download)
புறநானூறு - செய்யுளும் செய்திகளும் (Download)
கருத்துகள்
கருத்துரையிடுக