முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜோதிடம் உண்மையா, பொய்யா? நம்பலாமா. கூடாதா?

 ஜோதிடம் - ஒரு அலசல்

ஒவ்வொரு மனிதனுக்குமே நாளை என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் தீராத ஆர்வம். அதுவும் வாழ்க்கையில் மோசமான கட்டத்தில் இருந்தால் சொல்லவே வேண்டாம். ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். அவர் 'நாளை நன்றாக இருக்கும்; எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்று சொன்னால் போதும்'. ஒரு மன நிம்மதி; உண்மையா என்றெல்லாம் தேவையில்லை. இன்றைக்கு ஒரு ஆறுதல்.. உண்மையிலேயே ஜோதிடம் சரியா? இல்லை ஏமாற்றுவேலையா? பார்ப்போம்.. முதலில் ஒரு கதை ( இல்லை, சரித்திரம்).

ஐந்தாம் நூற்றாண்டில், மகதப் பேரரசில் விக்ரமாதித்ய மகாராஜாவின் அமைச்சரவையில் ஒருவர் 'மிகிரர்' . சிறந்த கணிதமேதை, வானியல் நிபுணர், ஜோதிட வல்லுநர். அவர் அரசரின் புதல்வரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு 18 வயது வரைதான் வாழ்வார். அதோடு ஆயுள் முடிந்தது' என்கிறார். அதே போல நடக்கிறது. (இதைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. பன்றியால் சாவார் என்றார். கடும் பாதுகாப்பிலும் பன்றி கொடி கம்பால் இறந்தார் என்பது போல). மிகிரரின் திறமையைப் பாராட்டி அரசர் 'வராஹ' என்ற பட்டத்தைக் கொடுக்க 'வராஹமிகிரர்' ஆகிறார்.

அவர் எழுதிய "பிருகத் ஜாதகம்" என்ற நூல் முழுக்க ஒவ்வொரு மனிதரின் எதிர்காலத்தை எப்படி கணிப்பது போன்ற அனைத்து ஜோதிடங்களையும் உள்ளடக்கியது. இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

வானியலில் சிறந்த இந்தியா

வராஹமிகிரர் உஜ்ஜையினியில் கணித ஆராய்ச்சி மையத்தைத் துவக்கியவர். முதலாம் ஆர்யபட்டரின் நூல்களை ஆராய்ந்து புதிய நூல்களை எழுதினார். அவையே நவீன வானியலுக்கு மூலமாக அமைந்தது. 

வானியலில் பழங்காலத்திலிருந்தே இந்தியர்கள் சிறந்து விளங்கினார்கள். டெலஸ்கோப் போன்ற எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் சூரியன், புதன், செவ்வாய், சனி, வியாழன், சுக்கிரன், சந்திரன் (அறிவியல்படி துணைக்கோள்) ஆகிய கோள்களையும் அவற்றின் நகர்வையும் துல்லியமாக உலகிற்குக் கூறியவர்கள். அமாவாசை, பௌர்ணமி, கிரகணங்கள் அனைத்தையும் நாள், நேரம் வாரியாக இன்றைக்கும் துல்லியமாகக் கணிதத்தின் மூலம் முன் கூட்டியே சொல்கிறார்கள். 

சமீபத்தில் 3000 ஆண்டு வரையான சனி, குரு நகர்வைக் குறிக்கும் நூலைக் கண்டு வியந்து போனேன். இன்றைக்கு கம்ப்யூட்டர் துணையுடன் ஜோதிட மென்பொருட்கள் வந்துவிட்டன. அன்றைக்கு மனதில் கணக்கிட்டதை கம்ப்யூட்டர் நொடியில் சொல்லிவிடுகிறது. ஜோதிட மென்பொருட்கள் மூலம் யார் வேண்டுமானாலும் அமாவாசை, பௌர்ணமி, கிரகணங்கள் அனைத்தையும் கூறமுடியும். ஜோதிட கணிப்புகளையும் கூறமுடியும். ஆனால் ஜோதிட கணிப்புகளைக் கூற படிப்பும், திறமையும் வேண்டும், வராஹமிகிரரைப் போல.

ஜோதிடம் என்றால் என்ன?

'ஜியோடிஷ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. வானியலும் கணிதமும் இணைந்த கலை ஜோதிடம். வானில் கோள்களின் நகர்வுகள் பூமியிலும், அனைத்து உயிர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள். (அறிவியல் இதை ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் பிறகு பார்ப்போம்).

குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது, எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்க கணிதம் தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகும். 

கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம். ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

ஜோதிடம் எப்படிக் கணிக்கிறார்கள்?

குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கினமும் குறிக்கப் பெறுகின்றன. ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். . ஒவ்வொரு வீட்டையும் (கட்டம்) ராசி என்கின்றனர். அவையே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள். எனவே அதை ராசிச்சக்கரம் என்கின்றனர்.

சூரியன் மாதம் ஒரு வீட்டில் (கட்டத்தில்) இருந்து, 1 வருடத்தில் ஒரு சுற்று வரும். சந்திரன் ஒரு மாதத்தில் ஒரு சுற்று வரும். இது போல் அனைத்து கிரகங்களின் நிலையையும் இந்தச் சக்கரத்தில் குறிப்பிடுவார்கள்.

ராசியின் உட்பிரிவு நட்சத்திரங்கள். அசுவனி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள். குழந்தை பிறந்த நேரத்தையும், இடத்தையும் கொண்டு இலக்கினம் கணிக்கப்படுகிறது. அது இருக்கும் வீட்டின் பெயரால் (மேஷம் முதல் மீனம் வரை) அழைக்கப்படுகிறது. எந்தக் காலகட்டத்தில் எந்தக் கிரகத்தின் தாக்கம் அந்த ஜாதகதாரரின் மேல் இருக்கும் என்பதை 'தசாபுத்தி' என்கின்றனர். அது இலக்கினத்தைக் கொண்டு கணிக்கப்படுகிறது.

ஜாதகத்தில் குழந்தை பிறந்த நேரத்தில் சூரியன், புதன், செவ்வாய், சனி, வியாழன், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்களும், ராகு, கேது என்ற நிழல் கிரகங்களுடன் 9 கிரகங்களின் நிலை குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம் (கிழமை), திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும். பஞ்சாங்கம் ஒவ்வொரு நாளின், நிமிடத்தின், விநாடியில், கிரகங்களின் நிலையைக் குறிக்கிறது. அன்றன்று ராசிச் சக்கரத்தில்  கிரக நிலைகளை குறிப்பிடுவது   கோச்சாரம் என அழைக்கப்படுகிறது.

ஜாதகத்தில் பிறக்கும்போது கிரகங்களின் நிலை, தசாபுத்தி, கோச்சார கிரகநிலை ஆகிய மூன்றையும் வைத்துதான் ஒருவரின் தோற்றம், குணநலன், அறிவு, படிப்பு, வாழ்க்கைவசதி, நல்லவை கெட்டவை அனைத்தும் கணிக்கப்படுகின்றன. இது புரிந்தால் போதும். இந்திய ஜோதிடத்தின் அடிப்படை புரிந்தவராவீர்கள்.
(முடிந்தவரை சுருக்கி எளிமையாக சொல்லியுள்ளேன். புரியவில்லையென்றால் திரும்ப படிக்கவும்)

ஜோதிடமும் அறிவியலும்

அறிவியல்படி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் ஜோதிடத்தில் குறிப்பிடப்படவில்லை. யுரேனஸ், சூரியனைச் சுற்ற 84 ஆண்டுகளும், நெப்டியூன் 160 ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றன. அவ்வளவு தொலைவில் இருப்பதால் ந்ம்மை பாதிக்கும் சக்தி இல்லை என்று கணக்கிடப்பட்டிருக்கலாம். 

ராகு, கேது என்ற கற்பனைக் கோள்கள் எதற்கு? சூரிய, சந்திர கிரகணங்கள் பூமியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன அல்லவா? அதே போல மனித வாழ்வில் ஏற்படும் இன்னல்களைக் குறிப்பிட இந்த கற்பனைக் கோள்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அவை இல்லாது கிரகணங்களையும் கணிக்க முடியாது. வாழ்வின் இன்னல்களையும் கணிக்க முடியாது.

அறிவியல்படி, ஒரு விதி நிறுவப்பட்டால் அது எப்போதும் அப்படித்தான் செயல்பட வேண்டும். மாறி நடந்தால், அந்த விதி ஏற்கப்படாது. இது அறிவில்லாத இயந்திரங்களுக்கு சரியாக இருக்கும். அலைபாயும் மனித மனத்துக்கும், மாறிவரும் கால நிலைகளுக்கும் எப்படி ஏற்புடையதாக இருக்கும். ஜோதிடத்தில் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்குகள் உண்டு. உலகின் 790 கோடி மக்களுக்கும் மனங்களும் , குணநலன்களும், வாழ்விடங்களும், வாழ்க்கைமுறையும் வேறு வேறு அல்லவா? அத்தனையையும் கணிக்க யாரால் முடியும்?

ஜோதிட நூல்கள் மற்றும் நவீன ஜோதிடத்தின் மூலம்

ஜோதிடம், வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாக கருதப்படுகிறது. இது வேதங்களின் கண்களாக கருதப்படுகிறது. இந்திய வானியல் மரபின் தொன்மையான பாடநூல் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. "இலகத மகரிஷி"யினால் இது இயற்றப்பட்டது என்பர். கி.மு 1200 - 1000 வரையான காலத்தைச் சேர்ந்த நூலாகக் கொள்ளப்படுகின்றது.

மேலே கூறிய வராஹமிகிரரின் ' பிருகத் ஜாதகம் ' முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. 28 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் எப்படி மனிதர்களின் குணங்களையும், எதிர்காலத்தையும் கணிப்பது என்பதை விரிவாக விளக்குகிறது.

இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவர். இவரது ஜோதிட வழிகாட்டலும் சுவடிகளில் உள்ளது என்கின்றனர்.

சித்த வைத்தியத்தை உலகிற்கு தந்த அகத்திய மாமுனிவரும் ஜோதிட நூலும் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. நிறைய புத்தகங்கள் கவிதைகளாக இவர்கள் பெயரில் உலாவருகின்றன.

சரசோதி மாலை என்பது ஒரு சோதிட நூல். இதனை இயற்றியவர் இலங்கையில் வாழ்ந்த போசராசர். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அந்தணர். இந்த நூலை இவர் சக ஆண்டு 1232 க்கு இணையான கி.பி. 1310-ல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த பராக்கிரமபாகு என்னும் அரசனின் அவையில் அரங்கேற்றினார் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

இந்த நூலில் 12 படலங்கள் உள்ளன. இதில் விவாக கால நியதி, அக்கினி, ஆதானம், நெல் விதைத்தல், மகுடன் புனைதற்குரிய திறந்த, யுத்த யாத்திரை, ஆயுர் யோகம், அபிசித்து முகூர்த்தம் போன்ற பல்வேறு விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நூலில் பராக்கிரமபாகு மன்னனைப் போற்றிய பல செய்யுள்களும் உள்ளன.

சந்தான தீபிகை என்னும் சோதிட நூலை இயற்றிய யாழ்ப்பாணத்து இராமலிங்கையர் என்னும் சோதிடர் இதனைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

தஞ்சை சரசுவதி மாகால் நூலகம் பழைய ஜோதிட ஒலைச்சுவடிகளை தொகுத்து    'சாதக நூல்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

இது போல புலிப்பாணி ஜோதிடம், மச்சமுனி ஜோதிடம், சுகர்நாடி ஜோதிடம் போன்ற நூல்களும் உண்டு. 

இப்போது ஆயிரக்கணக்கில் ஜோதிட புத்தகங்கள் வருகின்றன. அனைத்திற்கும் மூலம் மேலே கூறப்பட்ட நூல்களே. ஆனால் எவ்வளவு நம்பத் தகுந்தது என்பது கேள்விக்குறியே!

ஆற்காட்டைச் சேர்ந்த கா. வெ. சீதாராமய்யர் என்ற சோதிடர் அக்காலத்தில் தமிழகத்து அரச குடும்பங்களான ஆற்காடு நவாபு, சரபோஜி மன்னர் போன்ற குடும்பத்தினருக்கு சோதிடராக இருந்தவர். இவர் ஆண்டுதோறும் அரசர்களுக்கு சோதிடக் குறிப்புகளை கொடுத்துவந்தார். இவர் தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை பஞ்சாங்கக் குறிப்பை வெளியிட்டார். அவரது வழியில் அவரது சந்ததியினர் 4-வது தலைமுறையாக தொடர்ந்து 116 ஆண்டுகளாக இந்த பஞ்சாங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.
பாம்பு பஞ்சாங்கம் போல பல பஞ்சாங்கங்களும் உண்டு.

ஜோதிடத்தை நம்பலாமா?

தொன்று தொட்டு மனிதர்களைக் கவரும் இந்த ஜோதிடக் கலை, எப்போது பணத்திற்காக சொல்லப்பட ஆரம்பிக்கப்பட்டதோ, அப்போதே போலிகளும் உருவாகியிருக்கும். மேலும் அந்தக் கால ஜாம்பவான்கள் கலைகளை அடுத்தவர்களுக்குக் கற்றுத் தருவதில்லை..

அதுவும் பிரிட்டிஷ் கல்வி முறை வந்த பிறகு, கலைகள் அழிந்தே விட்டன. இப்போது இருப்பது பழைய பெயரில் பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகள்தான். எனவே அரைகுறையாகப் படித்துவிட்டு ஆளுக்கு தகுந்தவாறு பேசி பணம் பறிப்பதே இன்றைய ஜோதிடர்கள் வேலை. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக 10 விஷயம் சொன்னால் 2 ஆவது கண்டிப்பாக நடக்கத்தானே போகிறது. அல்லது நம்மைப் பற்றி நம்மிடமே கேட்டு அதற்கேற்றவாறு கூறுவார்கள்.

அடுத்து, ஜோதிடத்தில் முக்கிய தேவை, சரியான பிறந்த நேரமும், அதை வைத்து எழுதப்பட்ட ஜாதகமும். நிறைய பேர்களுக்கு இதுவே தவறாவதால், சரியாக யாராலும் கணிக்க முடியாது. 

ஜோதிடத்தின் முக்கிய அம்சமே நமது எதிர்காலம் என்பது நிர்ணயி க்கப்பட்ட ஒன்று என்பதாகும். தலைவிதியை மாற்ற யாரால் முடியும் என்று கூறுவார்களே, அதேதான். ஆனால் வரப் போகும் காலம் கடினமாக இருக்கும் என்றால் மனதை திடப்படுத்துவதற்கும், சிறப்பானதென்றால் திட்டமிடலுக்கும் உதவியாக இருக்கும். உலகில் யாருடைய வாழ்வும் முழுமையாக சந்தோஷமாகவோ, துக்கமாகவோ இருக்கப்போவதில்லை. மாறி மாறியே வரும். எனவே சந்தோஷமாகிலும் துக்கமாகிலும், " இதுவும் கடந்து போகும்" என்ற மனப்பாங்கு தேவை.

வாழ்க்கை கடினமானதாக இருந்தால், ஜோதிடரைப் போய்ப் பார்த்து எதுவும் ஆகப் போவதில்லை என்பதை உணரவேண்டும். எதுவானாலும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். நாம் செய்வதை, உழைப்பதை செய்து கொண்டே இருக்கவேண்டும். 

"தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்" என்பதுதான் நிதர்சனம். நம் உழைப்பு என்றும் வீண் போகாது. அதற்குரிய பலன் கிடைத்தே தீரும்.

எனவே ஜோதிடத்தை கலையாகக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. சிறந்தது என்றே கூறுவேன். ஆனால் ஜோதிடர் நல்ல வழி காட்டுவார் என்றோ, அதனால் வாழ்க்கை வளமாகும் என்றோ நம்புவது அறிவீனம். ஜோதிடத்தை நம்பலாம். ஜோதிடரை நம்பலாமா என்பதை அவருக்கு இருக்கும் பணத் தேவையைப் பொறுத்தது. 

 நான் ஜோதிடத்தில் படித்து தெரிந்தது 10 சதம் இருக்கலாம். பல ஜோதிடர்களை சந்திப்பதை பொழுது போக்காகவே செய்வேன். அவர்களுடன் பேசும் 2 வது நிமிடத்திலேயே அவர்களுக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். நான் ஒரு பிரபல ஜோதிடரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவர், "போய் வேலையில் கவனம் செலுத்துங்கள். முன்னர் நான் பணம் சம்பாதிக்கும் தொழிலாக செய்தேன். இப்போது செய்வதில்லை. உங்கள் ஜாதகத்தை மெயிலில் அனுப்புங்கள்; பதில் அனுப்புகிறேன். பணம் எல்லாம் வேண்டாம் " என்றார். அதே போல பதிலும் அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்த பதில்தான். நல்ல மனிதர்.

இன்னும் ஜோதிடத்தில் பலவகை உண்டு. குறி கூறுதல், எண் சோதிடம், பெயர் சோதிடம், கிளி சோதிடம், ராஜநாடி சோதிடம், நாடி சோதிடம், கைரேகை சோதிடம். இவையெல்லாம் தோன்றிய காலத்தில் சிலர் சிறந்து விளங்கியிருக்கலாம். இப்போது நீர்த்துப் போய்விட்டன. தொழில் ஏதும் இல்லதோர் செய்யும் ஏமாற்று வேலைகளாகி விட்டன. எதுவுமே கலையாக இருக்கும்வரையே மதிப்பு.

இன்னும் எதிர்காலத்தைத் துல்லியமாக  சொல்லக் கூடிய நபர் பிறக்கவில்லை. (நாஸ்ட்ராடமஸைச் சொல்லாதீர்கள். அவர் ஏதோ எழுத அதை நாம் இட்டு கட்டி சரியாகச் சொல்லியிருக்கிறார் என்கிறோம். அதைப் பற்றியும் எழுதும் எண்ணம் இருக்கிறது). எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில், சுஜாதா சொன்னது போல, 'எதிர்காலம் தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும்" ஆபத்தும் இருக்கிறது. நமக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதுதானே நம் விருப்பம். அப்படியே நடக்கும் என்று நம்புவோம்.

 வாழ்க்கை என்பதே எதிர்பாராததை எதிர்பார்த்து வாழ்வதுதானே!
அப்படியே வாழ்வதுதான் அறிவு. EXPECT THE UNEXPECTED!
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....