மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுகதை - சுஜாதா
மோபியஸ் ஸ்ட்ரிப் (Mobius strip) என்று ஒரு சமாச்சாரம் உண்டு ஒரு காகித
ரிப்பனில் எளிதாகச் செய்யலாம். நீண்ட ரிப்பனை ஒரு முறை திருகி ஒட்ட வைத்து விட்டால் டோப்பாலஜி (Topology) என்னும் கணித இயலின் படி இது ஒரு மிக சுவாரஸ்யமான பொருளாகிறது.இந்த வளையத்தைப் பற்றி நிறைய சமாச்சாரங்கள் எழுதியுள்ளனர். இந்த வளையத்தை நடுவில் குறுக்கே (முதுகில்) வெட்டிக் கொண்டே போனால், இரண்டாகவே ஆகாது. சட்டென்று ஒரு முழு வளையம் விடும். (விடும் போது பிளேடு உபயோகித்தால் ரத்தக் காயத்துக்கு நான் பொறுப்பல்ல).
மோபியஸ் வளையத்தில் பல வித்தைகளைச் செய்துள்ளனர். முடிவில்லாத ஆனந்தம் என்று ஒரு மோபியஸ் வளையத்தில் எழுதி கிறிஸ்துமஸ் அட்டை செய்திருக்கிறார்கள்.
எஷர் (Maurits Cornelis Escher - alias M C Escher ) என்ற சித்திரக்காரர் மோபியஸ் வளையத்தை வைத்து வரைந்த சித்திரம் ஒன்று உண்டு.
மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு அடியேன் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் .
கதையின் பெயர்: மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல....
"டிட்டோ" என்றேன்.
காப்பி வந்தது. அதில் சர்க்கரை என்னால் போட முடியவில்லை. கை நடுக்கம்.
"இயல்பாக இருங்கள், நீங்கள் அமெச்சூர் நாடகங்களில் நடிப்பீர்கள் இல்லையா ?" என்றாள்.
‘குற்றவாளி!” என்று கையைத் தூக்கினேன்.
"நான் பார்த்திருக்கிறேன்"
‘நன்றி உன் பெயர் என்ன?
‘பெயர் முக்கியமா? நான் ஒரு பெண் உங்களை நான் அழைத்ததற்கு ஒரு சுயநலமான காரணம் இருக்கிறது என்னை நீங்கள் விரும்புகிறீர்கள் இல்லையா"
"ரொம்ப அப்பட்டமான கேள்வி*
"அன்பரே! நீங்கள் என் கடிதத்தைப் படித்துவிட்டு என்னை நாடித் தியேட்டருக்கு வந்தது. தெற்கு வியட்நாம் பற்றிப் பேசவோ அல்லது என்னுடன் சேர்த்து அல்ஜீபரா படிக்கவோ இல்லையென்றுநினைக்கிறேன். என்ன??"
நான் பதில் சொல்லவில்லை.
“உங்கள் எதிரே நான் உட்கார்த்திருக்கிறேன் உங்களுக்கும் எனக்கும் இரண்டரை அடி தூரம் இருக்கிறது. இந்தத் தூரம் குறைய உங்களுக்கு ஆசையாக இல்லையா?" என்றாள்.
"......................."
*பதில் சொல்லுங்களேன்"
'ஆம்"
நான் இப்போது 15-ஏ. ஹனுமான் ரோடிற்குச் செல்லப்போகிறேன். அங்கே வந்து என்னைச் சந்திக்கிறீர்களா!"
"எனக்குப் புரியவில்லை. நான் உன்னுடனேயே வரலாமே"
"அது முடியாது. அதற்கு முன் ஒரு நிபந்தனை. உங்களைப் போல் எனக்கு நாடகப் பித்து உண்டு நீங்கள் நடிப்பதைப் பார்க்கும் போதெல்லாம். என் வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்கக்கூடியவர். நீங்கள்தான் எனத் தோன்றும்.
"சிக்கலா! எனக்கு அது விளக்கெண்ணெய்,”
"இது ரொம்ப வினோதமான, சுவாரஸ்யமான, சோகமான சிக்கல்." சில தாள்களை அவள் எடுத்துத் தந்தாள். ஃபர்ப்யூம் மணம் வீசும் நீலத்தாள்கள்.
"என்ன இது?" என்றேன்.
"நம் வாழ்க்கையில் சில சமயம் ஒரே மாதிரி சம்பவம் திரும்பத் திரும்ப நிகழ்கிற மாதிரி தோன்றுவதுண்டு இல்லையா? என் அண்ணனுக்கு அந்த அனுபவம் அடிக்கடி வருகிறதாம். எது நடந்தாலும் முன்பே ஒரு தரம் நடந்துதான் மறுபடி நடக்கிறது என்ற எண்ணம் உண்டாகிறதாம் அவனுக்கு."
"அண்ணனா? எங்கே அவன் ?"
"மூன்று மாதமாகிறது காணாமல் போய்."
“ஏன்?”
“இந்தக் காகிதங்களில்தான் அதற்கு விடை இருக்கிறது. இதெல்லாம் அவன் எழுதியவை. அவன் வாழ்கையில் நடந்ததாம். 'முடிவில்லாமல் திரும்பத் திரும்ப இது வருகிறது. இதை முடித்து வைத்துவிட்டு, தினசரிப் பத்திரிகையில் ஒரு அறிவிப்புக் கொடு. நான் வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்."
“நான் என்ன செய்ய வேண்டும்?"
“நீங்கள் நடிகர். கற்பனையுள்ளவர். இதற்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள். என் பிரிய சகோதரனை நான் திரும்ப அடையத் தயவு பண்ணி உதவுங்கள்"
.
"அழாதே. இப்போதே படிக்கிறேன்."
படியுங்கள். நான் போகிறேன். நான் அங்கே காத்திருக்கிறேன்... 15-ஏ ஹனுமான் ரோடில். உங்களுக்காக அங்கே காத்திருக்கிறேன். நிதானமாக இங்கேயே படியுங்கள். படித்துவிட்டு யோசியுங்கள். யோசித்துவிட்டு என்னிடம் வாருங்கள். சரியா?"
"சரி"
"ஞாபகமிருக்கட்டும், நான் உங்களையே நம்பியிருக்கிறேன். என் அண்ணனை நான் பிரிந்திருக்க முடியாது. சரியாகப் படியுங்கள். நான் நிறைய கேள்விகள் கேட்பேன்."
அந்தக் காகிதங்களை நான் அடுக்கினேன். துவக்கத்தைத் கவனித்தேன். புது விதமாக இருந்தது. 'ஆரம்பமே அலாதியாக இருக்கிறது" என்று சொல்லி நிமிர்ந்தேன். அவளைக் காணவில்லை, அந்த விநோதமான துவக்கம் என்னை ஈர்த்தது.
அன்புள்ள வாசகரே, நீங்கள் இதைப் படிப்பதற்கு முன்ன ஒரு விஷயம் இதைப் படிக்காதீர்கள். இது ஒரு மாயச் சுழல். இதில் அகப்பட்டுக்கொண்டு நான் இதுவரை தப்பவில்லை. முதலிலேயே எச்சரிக்கையாகச் சொல்லிவிட்டேன், விலகுங்கள்.
இன்னும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே? ஒரு தடவை சொன்னால் உங்களுக்குத் தெரியாது? ஏன் இந்தப் பிடிவாத படிக்காதீர்கள். ஐந்து எண்ணப் போகிறேன் பார்க்கலாம்- 5 4 3 2 1.......
ஹலோ! இன்னமும் என்னுடனேயே இருக்கிறீர்களே! சரி, உங்கள் விதி. இது. எப்பொழுதோ நிர்ணயித்த அமைப்பின்படி நடக்கும். உங்களுக்கும் எனக்கும் - நடக்கிறது. அதனால்தான் நாம் இருவரும் இங்கே அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம்......
நாம் இருவரும்........
என்னைத் தெரியாது உங்களுக்கு. சொல்கிறேன். நான் டில்லி வாசி இளைஞன். எப்படிப்பட்ட இளைஞன்? அந்த வியாழக்கிழமை காலை எனக்கு வந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு அளவில்லாத ஆனந்தம் அடைந்தவன். .
அப்படி என்ன கடிதம்? 'ரொம்ப அந்தரங்கம்' என்று விலாசத்துக மேல் எழுதி, சிவப்பில் அடிக்கோடிட்ட கடிதம். ஒரு பெண்ணின் வட்டவட்டமான கையெழுத்து. எனக்கு அதற்கு முன் பரிச்சயமில்லாத … அழகான, மிக அழகான மேற்படி - கிழித்துப் பிரித்துப் படித்தேன்
சிவமயம் கிடையாது. தேதி கிடையாது. விலாசம் கிடையாது.
'டியர்' கிடையாது. அன்பரே கிடையாது. நேராக அம்பு போன்ற வாசகங்கள்,
“ உங்களைத் தினம் காலையில் ஜன்னல் வழியாக பார்க்கிறேன். எந்த ஜன்னல், எந்த வீடு என்பது உங்களுக்குத் தெரியாது உங்களுடன் பேச எனக்கு விருப்பம். உங்கள் முகத்தின் கவர்ச்சியும் கலைந்த தலையின் கவர்ச்சியும் கண்களில் தெரியும் குறும்பும் எனக்கு இதை எழுதும் தைரியத்தைத் தருகின்றன. சத்தியமாக நான் உங்களைக் -
நான் இதுவரை எழுதியதில் 'சம்மதமிருந்தால்' என்னைச் சந்திக்க உங்களுக்கு ஆவலிருந்தால், த. செய்து 26ஆம் தேதி 'மாலை 5-30'க்குப் பாரகம்பா ரோடும், கனாட் வெளிவட்டமும் சந்திக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காத்திருங்கள். நான் உங்களைச் சந்திக்கக் கட்டாயம் வருகிறேன். உங்களுக்கு என் அன்பு xxx
பி.கு. நான் சற்று உயரமான பெண். ராத்திரி நீலத்தில் ஸாரியும் அதே நீலத்தில் சோளியும் அணிந்திருப்பேன் ராத்திரி தலையில் ஒரு ரோஜா வைத்திருப்பேன்.
கடிதத்தைப் படித்ததும் நான் குதித்தேன் என்பது மிகையாளது படித்ததும் எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள் வார்த்தைகளாகமாட்டாது.
நான் ஒன்றும் பெரிய பால் நியூமன் இல்லை. சுமாரான முகம் தான்.. இந்தச் சுமாரில் மோகம்கொண்டு அவ்வளவு தைரியமாகக் கடிதம் எழுதுகிறாள் என்றால் அவளுக்கு மிகவும் தனிப்பட்ட ரசனை இருக்க வேண்டும். அதுவும் எப்படிப்பட்ட கடிதம்! 'நாள் உங்களைக் என்று கோடிட்டிருப்பதற்கு என்ன அர்த்தம்? கடிக்கப் போகிறேன். என்றா? இலவை அப்புறம் அந்த X.X.x? அது என் மனத்தில் தோற்றுவித்த அது என்ன வார்த்தை?
தேதி என்ன? 25. நாளை அவளைச் சந்திக்க வேண்டும். டெரிலின்களைத் துவைத்தேன் பாண்டை ட்ரைக்ளீன் செய்தேன். அந்த நவீன சலூனுக்கு (007 லைசன்ஸ்ட் டு கட்) சென்று தலை வெட்டிக்கொண்டேன். நடை பழகினேன் பூட்ஸுக்கு முகம் தெரிய பாலீஷ் கொடுத்தேன்.
நீங்கள் எப்பொழுதாவது ஒரு பஸ் நிலையத்தில் மாலை வேளையில் கருநீல ஸாரியும் தலையில் ஒற்றை ரோஜாவும் அணிந்த முன்பின் தெரியாத பெண்ணுக்காகக் காத்திருந்திருக்கிறீர்களா? கஷ்டமான வேலை ஏன் சொல்கிறேன். பஸ் ஸ்டாண்ட் ஜனங்கள் வரும் இடம் பஸ்கள் சிவப்பு வெள்ளமாக வந்து வந்து போகும் இடம். பிச்சைக்காரர்கள், பட்டன் விற்பவர்கள். ஆண்கள் பெண்கள் எவ்வளவு பேர்! இதில் அந்தக் கருநீலத்தைத் தேடுவது எனக்குக் கடினமாக இருந்தது. அன்றைக்கென்னவோ ரொம்பப் பேர் பிடிவாதமாகக் கருநீலத்தில் புடவை கட்டிக்கொண்டு எனக்கு முன் மிதந்தார்கள். மேலும் ராத்திரி நீலம் என்பது என்ன வர்ணம்? நாகப்பழ வர்ணமா? அதுவே எனக்குச் சரிவரத் தெரியவில்லை. முன் சொன்னபடி நிறையப் பெண்கள் பிடிவாதமாகக் கருநீலம் அணிந்திருந்தார்கள். ஒற்றை ரோஜா இல்லாததால் அவர்களை விலக்கினேன். ஒற்றை ரோஜா அணிந்திருந்தவர்களிடம் புடவை நிறமில்லை. இரண்டும் இருந்த ஒருத்தி வந்தாள். வயது 50க்கு மேலிருக்கும்.
35 நிமிடத்தில் டில்லிப் பெண்கள் உடையணியும் பாணியைப் பற்றி 5 பக்க வியாசம் எழுதும் அளவுக்கு என் அனுபவம் பெருகியிருந்தது. அவளைக் காணோம்.
என் அருகில் மற்றோர் இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவனும் தலை வாரிக் கொண்டிருந்தான். அவனும் டெரிலின் அணிந்து கொண்டு போகிற வருகிற பெண்களை எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
என் அருகே வந்து வாயில் சிகரெட் பொருத்திக் கொண்டு தீ கேட்டான்.
நான் பைக்குள்ளிருந்த 'லைட்'டரை எடுத்து அவன் முன் க்ளிக்கினேன்.
அந்த இளைஞன் என்னையே பார்த்தான். பார்த்துச் சிரித்தான். "எத்தனை நேரம் காத்திருக்கிறீர்கள் ?"
அரை மணியாக"
‘பஸ்ஸுக்காக?"
"இல்லை, வரப்போகிற ஒரு நண்பருக்காக"
"நான் சற்று முன்தான் வந்தேன் இங்கே ஒரு பெண் வந்தாளா பார்த்தீர்களார் கருநீலத்தில் ஸாரியும் தலையில் ரோஜாவும் அணிந்து உயரமான பெண்
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"இல்லை. இதுவரை வரவில்லை.....நீங்கள் ?"
என்று சொல்லி முடிப்பதற்குள் எதிரே அவள் வருவதைப் யார்த்தேன். ஒரு 75 அடி தூரத்தில், சத்தியமாக அழகான பெண் கருங்கச் சொன்னால் தேவதை. இன்னும் சுருங்கச் சொன்னால் வாவ்! இரட்டைச் சுற்றாகச் சற்று உடம்போடு ஒட்டி அந்தக் கருநீலத்தைக் கட்டியிருந்தாள். உடல் நிறம் ஸாரிக்கு நேர் எதிர எப்படிப்பட்ட அழகு! எதிரே போகும் இளைஞர்களை, 'டிஸ்ஆர்மமெண்ட்' பற்றித் தீவிரமாகப் பேசிக்கொண்டு செல்லும் இளைஞர்களை, தடுத்து நிறுத்தி ஏற இறங்க விசிலடிக்க வைக்கும் அழகு.
சிகரெட் இளைஞன் கடந்து சென்று எதிரில் வந்தவளைச் சந்தித்தான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். பேசினாள். அவன் ஆள்காட்டி விரலைக் கவிழ்ந்த வடிவத்தில் வாய் வைத்து, சீழ்க்கையடித்து டாக்ஸி வரவழைத்து அதில் ஏறிக கொண்டார்கள். சென்றார்கள்.
நான் எப்படி உணர்ந்தேன்? 'நித்த நித்தம் பொய்யடா பேசும் மாதர் சகவாசம் விட்டு உய்யடா உய்யடா உய்!' என்று ரோஷமாக பாடிய பட்டினத்தார் போல்.
என்னை இப்படி ஏமாற்றுவதில் அவளுக்கு என்ன சந்தோஷம்! தான் ஓர் அப்பாவி! சாதாரண ஆசாமி. ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வரவழைத்து இப்படிப் புத்தியைக் காட்ட வேண்டும்?
ஏன் என்பதற்குப் பதில் மறு நாளைக்கு மறுநாள் கிடைத்தது
ஒரு கடிதம் வந்தது,
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஸாரி! அன்று உங்களுக்கு என் மேல் அளவில்லாத கோபம் வந்திருக்கும்.
1. நான் லேட்டாக வந்தேன்.
2. உங்களை நான் சந்திக்க ஆவலாக வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக என் தம்பி வந்து விட்டான்.
நான் உங்களைச் சந்திக்கப்போவது என் தம்பிக்குத் தெரியக்கூடாது. அவன் ஒரு மாதிரி
இந்தத் தடவை நிச்சயம் உங்களை ஏமாற்றமாட்டேன் தயவுசெய்து திங்கள்கிழமை இரவுக் காட்சிக்கு ஓடியன் தியேட்டர் வாருங்கள். உடன் டிக்கெட் வைத்திருக்கிறேன். ஸீட் நம்பர் ஜி-18. ஜி-17-இல் நான் காத்திருப்பேன்.
பி.கு பழைய படம். கூட்டமிருக்காது.
பி.பி.கு. : சமர்த்தாயிருங்கள்"
நான் இதைப் படித்ததும் புதிதாகப் பிறந்தேன். எவ்வளவு சுலபமாக அவளைச் சந்தேகித்துவிட்டேன்! கண்ணே, ஆஃப்லேட் என் கனவுகளில் வரும் கன்னி நீ. என்னை மன்னி. உன்னைப் பார்க்க ஓடியனுக்கு என்ன, கம்போடியாவுக்கு கூட வருகிறேன்.
தியேட்டரில் கூட்டமில்லை. 9:30க்குக் காட்சி, துப்பாக்கி-குதிரை சிவப்பு இந்தியர்கள் படம். முடி வெட்டுத் தேவையுள்ள சில இளைஞர்கள் சிகரெட் பிடிக்கப் பழகிக்கொண்டிருந்தார்கள். கட்டம் கட்டமாகச் சட்டையணிந்த ஓர் இளைஞனின் முதுகு தெரிந்தது. ஐஸ் க்ரீம் சப்பிக்கொண்டே திரும்பினான். மன்னிக்கவும். அது ஒரு பெண் பார்க்குமிடமெல்லாம் ஒளிபரப்பும் 'மார்க்கி'. சதிஷ் குஜ்ராலின் நவீன ஓவியங்களை, ஏதோ நாய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போல் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.
அந்தக் கூட்டத்தில் அவள் இல்லை. மாடியில் நான் ஜி-18ல் போய் உட்கார்ந்தேன். ஜி-17 காலியாக இருந்தது. ஏன், ஜி-16, 15, 14, 13 - அந்த வரிசையே காலி, மேலும் ஏ, பி, ஸி, டி, ஈ, எஃப் எல்லா வரிசைகளும் காலி ஓரத்தில் சாஸ்திரத்துக்கு ஒரு சர்தார்ஜி உட்கார்ந்திருந்தான். அவன் என்னைப் பார்த்தது எனக்குப் பிடிக்கவில்லை.
ஸாடின் திரையைத் தூக்கினார்கள். அவள் வரவில்லை. அசௌகரியமான நாட்களில் ஏதோ சாப்பிடுங்கள் என்று ஒரு பெண் சிரித்தாள். அவள் வரவில்லை. பன்னிரண்டு பையன்கள் ஸ்நானம் செய்துவிட்டுக் கார்பாலிக் சோப் உபயோகிக்கச் சொன்னார்கள். அவள் வரவில்லை. டினு மினு மின் என்று சிதார் வாசித்துவிட்டு 3 சிங்கம் காட்டிவிட்டு, குடும்பக் கட்டுப்பாடு பற்றி டாகுமெண்டரி காட்டினார்கள். அவள் வரவில்லை. டாம் அண் ஜெர்ரி கார்ட்டூன். ம்ஹும், ட்ரெய்லர்கள்... இடைவேளை திரை விழுந்தது. அவள் வரவில்லை.
நான் என் பெயரைச் சொல்லிக்கொண்டு "உன்னைப் போல் ஒரு முட்டாள் இருக்க முடியாது. ஒரு தடவை ஏமாந்தாய். இன்று மறுபடி ஏமாறப்போகிறாய். உன் பக்கத்தில் வந்து உட்காரப்போவது அந்தப் பெண் அல்ல. வயசான ஆசாமி ஒருத்தர் வரப்போகிறார். யாரோ தெரிந்தவர்கள் இப்படி விளையாடுகிறார்கள் உன்னிடம். நீயும் பாவ்லாவின் நாய் போல விதிப்படி நடக்கிறாய்!" என நினைத்தேன்.
விளக்கு அணைந்து 'மெயின்' படம் துவங்கியது. துவங்கி ஒரு நிமிஷம்தான் இருக்கும். என் பக்கத்து ஸீட்டில் டார்ச் ஒளி வட்டம் விழுந்தது. என் நரம்புகளை ரவிசங்கர் வாசிப்பதுபோல் உணர்ந்தேன். காரணம்:திரையின் மெல்லிய வெளிச்சத்தில் அவள் என்னை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்தாள். படிப்படியாக வரிசை வரிசையாக மேலேறி என்னை அணுகிக்கொண்டிருந்தாள். ஏ-பி-சி-டி இ எஃப்-ஜி !-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15- யூடிகோடை வாசனை-16-புடவையின் சரசரப்பு-17-என் அருகில் அவள்.
"ஸோ ஸாரி, ரொம்ப லேட் இல்லையா நான்?"
"பழவாயிழ்ழை." எனக்குத் தன்னிலைக்கு வரக் கொஞ் தாமதமாயிற்று. அத்தனை அழகு. அத்தனை நெருக்கத்தில் இருப்பதற்கு நான் தயாராயில்லை. (உண்ணாவிரதம் இருந்தவனுக்கு முதலில் ஆரஞ்சு ஜூஸ் கொடுக்க வேண்டும். பாம்பே ஸ்பெஷல் மீல்ஸ் கூடாது).
*முதலிலே உங்களிடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். நான் வலிய உங்களுக்குக் கடிதம் எழுதி உங்களை வரவழைத்து அறிமுகமில்லாமல் நேராக உங்களிடத்தில் பேச ஆரம்பிப்பதை வித்தியாசமாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது"... என்றாள்
மேலும் சொன்னாள்:
“நான் திரிபவள் இல்லை. உயர்தரக் குடும்பம்தான். உங்களை இப்படி அழைத்ததற்குக் காரணம் இருக்கிறது. என்னைப் பற்றி நீங்கள் மேலே தெரிந்து கொள்வதற்குள் நான் சில கேள்வி உங்களைக் கேட்கப்போகிறேன். பை த வே. உங்களுக்குச் சினிமா பார்க்க வேண்டுமா?"
"சே, அதை யார் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள்தான மகத்தான காட்சியாக இருக்கிறீர்களே ! கேளுங்கள்."
“என்னை நீ என்று கூப்பிடலாம்."
"நீ"
“தட்ஸ் பெட்டர். சரி, கேள்வி ஒன்று: உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா?"
"சத்தியமாக இல்லை."
வார்த்தைகளை விரயம் செய்யாதீர்கள். இல்லை என்று சொன்னால் போதும். உங்களுக்குப் பிடித்தமான ஆங்கில எழுத்தாளர் யார்?"
ஹென்றி ஸ்லேஸர்."
*கேள்விப்பட்டதில்லை. ஸாலிஞ்சர் படித்திருக்கிறீர்களா?"
"திருவடிகளே சரணம்! பெரிய ஆள் !!"
"செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?"
"எல்லாம் புத்தக அறிவு" .
'தெற்கு வியட்நாம் பற்றி?"
வடக்கு வியட்நாமிற்குத் தெற்கே இருக்கிறது என்று நினைக்கிறேன் "
"கம்யூனிஸம் பற்றி?"
“கேட்டுக்கொண்டே போகிறீர்களே? நான் உங்களை ஒன்று......."
"உன்னை.."
"எஸ், உன்னை ஒன்று கேட்க வேண்டும். நீ யார்? ஏதாவது திகிலழகியா? உனக்குக் கால்கள் தரையில் பாவுமா?"
என்னைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். அவசரப்படாதீர்கள் குடும்பக் கட்டுப்பாடு பற்றி என்ன கருத்து?”
"டாக்டர் லூப்வதியே சரணம்."
"உங்களை எனக்குப் பிடிக்கிறது."
"உன்னை எனக்கு டிட்டோ. பிடிக்கிறது என்பதில் மேலும் நாலு க் சேர்த்துக்கொள். உன் பெயர்?"
"கிளம்பிவிடலாமா? ஏதாவது ரெஸ்டாரண்டில் போய் ஏதா லைட்டாக சாப்பிடலாமே. படம் போர் அடிக்கிறதே!"
கதாநாயகன் குதிரை மீதிலிருந்து விழுந்துகொண்டிருக்கும் போது தியேட்டரை விட்டு வெளியே வந்து நடந்தோம். என்னைப் பொறுத்த வரை மிதந்தேன். அந்த ராத்திரியை என்னால் நம்ப முடியவில்லை. ஃப்ளாரஸெண்ட் வெளிச்சத்தில் அவள் இந்த உலகத்துப் பெண் போல் தெரியவில்லை.
எதிர் எதிர் எதிரே உட்கார்ந்தோம். "ஒரு பைன் ஆப்பிள் கேக். எஸ்பிரஸ்ஸோ காப்பி எனக்கு.” என்றாள்.
“உங்களுக்கு?"
(இனி இந்தக் கதையை முதல் வரிக்குத் திரும்பச் சென்று படிக்கவும்).....
===================
(முழுக்க முழுக்க சுஜாதாவின் எழுத்து
நன்றி - முகநூல் /அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு)
கருத்துகள்
கருத்துரையிடுக