ஒரு குட்டிக் கதை
(இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை)
ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில்
விளைவதில் பாதியைப் பிடுங்குவது, வணிகர்கள், தொழில் செய்வோருக்கு கடுமையான வரி, கோவில்களைக்
கொள்ளையடிப்பது, பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத
அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி, கை கால்
செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது.
அவன் மகனை அழைத்து, ‘என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை
என்கிறான்’ என்ன ஆசை என்று கேட்க, ’வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன்.
சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும்’
என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள்
கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான்.
அடுத்தநாள், வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும்
கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் அரசனுக்கே சொந்தம் என அறிவிக்கப்பட்டது.
கோவில்களையெல்லாம் இடித்து கொள்ளையடித்தனர். அரசு அதிகாரிகள் பிள்ளைகள் மட்டுமே
கல்வி கற்க அனுமதி. கன்னிப் பெண்கள் திருமணத்திற்கு முன் அந்தப்புரம் வர கட்டளையிட்டனர்.
எதிர்ப்பவர்களையெல்லாம் கொன்றனர்.
ஒரு வாரத்தில் மக்கள், "இவனுக்கு இவன் தந்தையே பரவாயில்லை, கொள்ளை மட்டும்தான்
அடிப்பான். மக்களைத் துன்புறுத்த மாட்டான், நல்லவன்" என்றனர். அவனும் நிம்மதியாகக்
கண்ணை மூடினான்.
ஆனால் மகனுக்கு இந்த ஆட்சி முறையே பிடித்தது. அரசு அதிகாரிகளும்
வீரர்களும் இந்த ஆட்சியே சிறந்தது என்றனர். காட்டாட்சியே தொடர்ந்தது.
கதை முடியவில்லை.
ஒருநாள் அரசனுக்கும் தன் தந்தையைப் போலவே மரண பயம் வந்தது. ஆனால்
நன்றாக இருக்கும்போதே. அவ்ன் தன் மகனை அழைத்து எல்லாம் கூறினான். அதற்கு
அவன்.”நீங்கள் கவலைப் படாதீர்கள் அப்பா! நாளையே எனக்கு முடிசூட்டுங்கள், பிறகு
பாருங்கள்; உங்களுக்கு நல்ல பெயர் ஈட்டித்தருகிறேன்” என்றான்.
அடுத்த நாளே முடிசூட்டப்பட்டது. அரசனான மகன் செய்த முதல் வேலை
தந்தையின் தலையைச் சீவினான். ‘செத்த பிறகு யார் என்ன பேசிக்கொண்டால் என்ன? இப்போது நீ திருந்தி
நல்ல ஆட்சி செய்கிறேன் என்று, எனது சந்தோஷத்தையும் கெடுத்துவிடுவாய்.அதற்குத்தான்’
என்றான். மக்களும் இவன் தந்தை நல்லவன்தான்; அவனது தந்தையைக் கொல்லவில்லையே என்றனர்.
வழக்கம்போல் அரசு அதிகாரிகளும், வீரர்களும்,மிகச்சிறந்த ஆட்சி
என்றனர்
கருத்துகள்
கருத்துரையிடுக