மாறா
இந்தத் திரைப்படம் வருமுன்பே, ' மலையாள "சார்லி" ரீமேக் என்றதனால், எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சார்லியை 2 முறை பார்த்திருக்கிறேன். என் எதிர்பார்ப்புக்கு ஈடாக இருந்ததா? கடைசியில் சொல்கிறேன். அடிக்கடி சார்லியும் மனதில் நிழலாடுவதால் அதோடு ஒப்பீட்டையும் கலந்தே சொல்கிறேன்.
தமிழில் வந்துள்ள அடுத்த பயணக்கதை (முன்னர் அன்பே சிவம், பையா).
கதாநாயகிக்கு (ஸ்ரதா ஸ்ரீநாத்) பயணத்தில் ஆர்வம். தனக்கு திருமணம் நிச்சயிப்பது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பயணப்படுகிறாள். அப்போது தான் சிறுவயதில் வேறு ஒருவரிடம் கேட்ட கதையை யாரோ வீடுகளின் வெளிச்சுவர்களில் பெரிய பெரிய சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பதை காண்கிறாள். யார் வரைந்தது என்றால் மாறா என்கிறார்கள். அவள் வாடகைக்கு பிடிக்கும் வீடும் மாறா இருந்த வீடு. அந்த வீட்டில் பல கலைநயமிக்க பொருட்களை காண்கிறாள். கூட ஒரு நோட்டில் ஒரு சம்பவத்தை படங்களாக வரைந்து வைத்திருக்கிறான். அதுவும் முடிவில்லாமல் இருக்கிறது.
அதன் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், மாறாவின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், அவனைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிக்கிறாள். அவனைப்பற்றி மேலும் சில நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறாள். கடைசியில் அந்த நோட்டில் இருந்த படங்களில் சம்பந்தபட்ட பெண்ணையே(ஷிவதா) சந்திக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மாறா அடைக்களம் கொடுத்த இடத்தில், மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பெரியவருக்கு(மௌலி) ப்ளாஸ்பேக்கில் காதல் தோல்வி இருக்கிறது. அவர் மனசமாதானம் அடைந்தாரா, இவள் மாறாவை சந்தித்தாளா என்பதுதான் கிளைமாக்ஸ்.
வாழ்க்கையில் பயணப்படுவதும், சுற்றி உள்ளவர்களிடம் அன்பு காட்டுவதும்தான் மகிழ்ச்சி தரும் என்பதை வலியுறுத்தும் கதை. சார்லியில் பயணத்திற்கு காரணம் எல்லாம் தேவை இல்லை என்று இருக்கும். முடிவில் நாயகனும் நாயகியும் இணைந்து பயணத்தை தொடர்வார்கள். மாறாவில் அதற்கு காரணத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர். (தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இயக்குநரின் முடிவே சரி என்பது என் கருத்து. இதுவே கொஞ்சம் போரடிக்கிறது ) கண்டிப்பாக கவனிக்கதக்க இயக்கம். மேலும் மிகச்சிறந்த பாத்திர படைப்பு (casting). வாழ்த்துக்கள் திலீப்குமார்!
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு (தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துகுமார்) இசை (ஜிப்ரான்) மற்றும் லொகெஷன். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் அஜயனுக்கு சபாஷ். பெரிய திரையில் இன்னும் சிறப்பாகவும் இருக்கும்.
மாதவனுக்கு டைடில் ரோல் என்றாலும் சில காட்சிகளே வருகிறார். ஸ்ரதா நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் சார்லி - பார்வதி போல ஒரு இன்னொசன்ட் முகமாக இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் ( கீர்த்தி சுரேஷ் எனது சாய்ஸ்). மௌலி வசனங்களும், நடிப்பும் சிறப்பு. கிளைமாக்ஸும் அவரது கதையை வைத்தே முடிகிறது.ஷிவதா நன்றாக நடித்துள்ளார். சீமா, அபிராமி, எம்..எஸ். பாஸ்கர், அலெக்ஸ் பாபு, குரு சோமசுந்தரம். கிஷோர், அனைவரும் சில காட்சிகள் என்றாலும் நன்றாக செய்துள்ளனர்.
படத்தில் முதல் முக்கால் மணி நேரம் கதை மெதுவாக செல்வதால் போரடிக்கிர உணர்வை தருகிறது. அதை முன்னமே கூறியது போல ஒளிப்பதிவும், இசையும் ஈடுகட்டுகின்றன. அடுத்து, நாயகிக்கு சிறு வயதில் சொல்லப்படும் கதை அவ்வளவு சுவராசியமில்லை. இன்னும் நல்ல கதையை தேடியிருக்கலாம். சார்லியில் கிளைமாக்ஸ் பூரம் திருவிழாவில் நாயகன் நாயகி சந்திப்பு மிக சிறப்பாக இருக்கும். அது இதில் மிஸ்ஸிங்.\
கமர்சியல் படம் அல்லாத பீல்குட் டிராமா பார்க்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக பார்க்கலாம். எனக்கு திருப்தியை தந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக