முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கதை சொல்லட்டுமா?

 எனக்கு பிடித்த கதைகள் - படித்தவை, ரசித்தவை, நினைவில் நிற்பவை

(புதியவன் - சுஜாதா 1986 ல் எழுதியது)

என் உரை

பேசப் பழகிய மனிதனுக்கு முதல் பொழுது போக்கு கதை சொல்வதாகத்தான் இருந்திருக்கும். இன்று வரை கதைகளைப் படிப்பதோ, கேட்பதோ மனிதனது உணர்வுகளைத் தூண்டுகிறது. 

வாசிக்கத்துவங்கும் அனைவருமே கதைகளில் இருந்துதான் வாசிக்கத் துவங்கியிருப்பர்கள். புதிய வாசகர்களுக்கு நான் பரிந்துரைப்பதும் அது தான். இதுவரை படிக்கும் பழக்கமே இல்லையா? முதலில் ஏதாவது காமிக்ஸ் நாவல்களில் துவங்குங்கள். பிறகு, துப்பறியும் கதைகள், சஸ்பென்ஸ், திரில்லர், அட்வென்சர் என்று உங்கள் பழக்கம் விரிவடைந்து, சரித்திரம், கட்டுரைகள், இலக்கியம் என்று எல்லா எழுத்துக்களையும் வாசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!

நான் இப்போது கதைகள் அதிகம் வாசிப்பதில்லை. எனினும் நல்ல கதை என கேள்விப்பட்டால் உடனே படித்து விடுவேன். அதையே எனது இந்த ப்ளாக்கிலும் பதிவிட விரும்புகிறேன். இதன் மூலம் யாருக்காவது வாசிக்கும் பழக்கம் வந்தால் மகிழ்ச்சி.

எனக்கு கதையெழுதும் எண்ணம் ஏதுமில்லை. பயங்கொள்ள வேண்டாம். நான் படித்து, எனக்கு பிடித்த கதைகளையே பகிர விரும்புகிறேன்.

சிறுகதை

சமுதாயத்தின் ஏதாவது ஒரு நிகழ்வினையோ, ஒரு சிக்கலையோ, ஒரு உணர்வையோ விவரிக்கும் இலக்கியமே சிறுகதை. (கலித்தொகை, குறிஞ்சிக்கலியில் ஒரு கவிதை சிறுகதைபோல் உண்டு. எனது அந்த கட்டுரையில் வாசிக்கவும்)

எனது ஆசான் சுஜாதா அவர்கள் கதையின் முடிவில் ஒரு திருப்பம் அவசியம் என்பார். அவரது கதையையே முதலாவது கதை யாக வழங்குகிறேன்.

புதியவன் - சுஜாதா

(கணேஷ் - வஸந்த் தோன்றும் ஒரே விஞ்ஞானச் சிறுகதை - 1986)

திடுதிப்பென்று என் அறைக்கதவு திறக்க, எம் டி யை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அலறி அடித்துக்கொண்டு களேபரமாக ஒரு ஸ்ப்ரிங் இயக்கத்தில் எழுந்து நின்று " குட் மார்னிங் ஸார், ஸாரி, குட் ஆப்டர்நூன் ஸார்" என்றேன்.

" உட்கார், கவலைப்படாதே, சங்கர், மீட் நாராயண். புதுசா மேனேஜர் கேடர்ல சேர்ந்திருக்கிறார். திஸ் இஸ் சங்கர். நான் சொன்னேனே அந்த ஆசாமி"

புதியவன் என்னை பார்த்து வசீகரமாகப் புன்னகை செய்து என் கையைப் பற்றி இறுக்கமாக குலுக்கி, " உங்களைச் சந்திப்பதில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி" என்றான்.

அந்த நிமிடமே நான் அவனை வெறுக்க தொடங்கி விட்டேன்.

" சங்கர், இனிமே ப்ரொடக்ஷன் சம்பந்தமான விஷயங்களையெல்லாம் இவர் பார்த்துக்கட்டும். நீ பிளானிங் அண்ட் எஸ்டிமேடிங்..."

எனக்கு உள்ளுக்குள் தீ மூண்டது. என் பொறுப்பைப் பாதியாக்கி அதில் முக்கியமான பாதியை புதியவனிடம் கொடுக்கிறார். " ஸார் போர்ட்ஃபோலியோ வேணும்னா டிஸ்கஸ் பண்ணலாமே"

" அதெல்லாம் வேண்டாம். நான் தீர்மானிச்சாச்சு. ஐ வாண்ட் ஸம் ஃ பிரஷ் மைண்ட். உன் டிபார்ட்மென்ட் ஒட்டடை கூட படிஞ்சு போச்சு. நான் வரட்டுமா? நாராயணன் நீ புதுசா என்ன வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஐ வில் சப்போர்ட் யூ. சங்கர், இவருக்கு மேனேஜருக்கு உண்டான. தனி ரூம், ஃ பர்னிச்சர் எல்லாம் ஏற்பாடு பண்ண வேண்டியது உங்க பொறுப்பு"

" அது எஷ்டபிளிஷ்மெண்ட் செக்ஷன்லே..." என்று இழுத்தேன்.

" பார்த்தியா, உடனே பக்-பாஸிங் (buck-passing). சரியான சர்க்கார் மடிசஞ்சி ஆபீஸா ஆக்கி வச்சிருக்காங்க. நாராயண், நீ இதையெல்லாம் மாற்றியே ஆகணும்."

அவன் சிரித்து, "நான் பார்த்துக்கறேன் சார், நீங்க கவலைப்படாதீங்க. ஃ பர்னிச்சர், ஆபீஸ் அறை இதெல்லாம் முக்கியமில்ல" என்றான்.

"கேட்டுக்கையா"

எம்.டி. புறப்பட்டதும் நான் அவனைத் தீர்க்கமாகப் பார்த்தேன் மொழுமொழுவென்றிருந்தான். பிசின் போட்டு ஒட்ட வைத்தது போல் தலை வாரியிருந்தான். மிக ஒழுங்கான புருவங்கள், ஏறக்குறைய லிப்ஸ்டிக் போட்டது போல் ரோஜா நிற உதடுகள், அழகான உடலமைப்பு, உயரம். ஏதோ சினிமா ஹீரோ போல இருந்தான். இத்தனை இளைஞனை எனக்கு, இந்த ஆபிஸில் பதினைந்து வருடமாக கொட்டை போட்டுக்கொண்டிருக்கும் எனக்கு இணையாக... என்ன ஒரு கேட்பாரற்ற அநியாயம்?

அவனை வெறுப்புப் பார்வையால் போர்த்தினேன். அவன் அதைச் சற்றும் கவனிக்காமல்

"உங்க சினேகிதம் எனக்கு மிக முக்கியம் மிஸ்டர் சங்கர். சங்கர் - நாராயண், நல்ல ஜோடிப் பொருத்தம், இப்ப என்ன செய்துகிட்டிருக்கீங்க?"

"நன் ஆஃப் யுவர் பிசினஸ்"

"எவ்ரிதிங் இஸ் கோயிங் டு பி மை பிஸினஸ் மிஸ்டர் சங்கர். இந்தக் கூட்டல் தப்பு இருக்கும் போலிருக்கே"

நான் காகிதத்தை சரக் என்று பிடுங்கிக் கிழித்தேன்.

"ச்.... ச்... ச் வேஸ்ட் ஆஃப் ஆபீஸ் ஸ்டேஷனரி"

அவன் புன்னகை மாறவேயில்லை. பாழாய்ப் போன எரிச்சலூட்டும் புன்னகை "அப்புறம் சந்திக்கலாம்" என்று ஸ்டைலாக நடந்து வெளியே சென்றான் இது முதல் சந்திப்பு.

அவன் சேர்ந்த ஒரு வாரத்தில் மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். டைப்பிஸ்ட் கலா சரியாக ஒன்பதரைக்கு வர ஆரம்பித்தாள்.

"நாராயண் ஸார் ஏன் லேட்டுன்னு கேக்கறார் ஸார்"

'ஏன் நான் கேட்டதில்லை?"

"நீங்க கேப்பீங்க ஸார். ஆனா நீங்களே சில சமயம் லேட்டா வருவீங்க. நாராயண் ஸார் எட்டரைக்கே தினம் வந்துர்றார். ஆபிளைத் திறக்கறதே அவர்தான்"

"சரி சரி, உன் வேலையைப் பாரு".

"இனிமே நான் உங்க ரெண்டு பேருக்குமே டைப்பிஸ்ட்"

"நான்சென்ஸ்! யார் சொன்னா?"

"நாராயண் ஸார்தான்...."

உடனே நாராயனைக் கூப்பிட்டனுப்பினேன்,

"கொஞ்சம் பிஸியா இருக்காரு. என்ன விஷயம்? கேட்டுட்டு வரச் சொன்னாங்க" கலா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"தப்பா நினைச்சுக்காதீங்க ஸார். நீங்களும் மானேஜர், அவரும் மானேஜர். ரெண்டு பேரும் ஒரே ராங்கில இருக்கிறதுனால தான் ...."

"யார் சொன்னா ரெண்டு பேரும் ஒரே 'ராங்க்'னுட்டு. நான் அவனை விடப் பதினைஞ்சு வருஷம் சீனியர் தெரியுமா! இதை உன்கிட்ட சொல்லிப் பிரயோசனமில்லை, இரு. இதை எம். டி மூலமாவே தீர்த்து வைக்கிறேன்".-

எம். டி. அறையில் நாராயண் அவர் நாற்காலிக்கு மிக அருகில் நின்று கொண்டு தீவிரமாக எதையோ விளக்கிக் கொண்டிருந்தான் இருவரும் என் பிரவேசத்தில் நிமிர்ந்தார்கள்

" ஸார்....ஒரு முக்கியமான விஷயம்...."

" என்னய்யா?"

"டைப்பிஸ்ட் தானே" என்றான் நாராயண்.

"என்னது? டைப்பிஸ்ட்டா ! இப்ப அதா முக்கியம் !"

"மன்னிக்கணும் ஸார், இது ஆபீஸ் சூழ்நிலையைப் பத்தின ஒரு பிரச்சினை. டைப்பிஸ்ட்டு ஓர் உதாரணம் !"

"என்ன நாராயண், புரியலையே..."

நாராயணனைத்தான் கேட்கிறார், என்னை அல்ல....

"விஷயம் ரொம்ப ஸிம்பிள் ஸார்! இவர்கிட்ட கலான்னு ஒரு டைப்பிஸ்ட் இருக்கா, ஒரு வாரமா அவ மொத்தம் எத்தனை மணி நேரம் பிஸியா இருக்கான்னு பார்த்தேன். ஒன்பது மணிநேரம், மூணு ஆபிஸருக்கு உண்டான டைப்பிங்கை அவ ஒருத்தியால செய்துட்டு, ரெஸ்ட் எடுத்துக்கவும், நாவல் படிக்கவும்கூட முடியும்.."

"மிஸ்டர் நாராயண் ஒரு வாரத்து வொர்க் வச்சுக்கிட்டு..."

"மிஸ்டர் சங்கர், நான் இந்த எதிர்ப்பை எதிர்பார்த்தேன். நீங்க சொல்ற மாதிரி ஒரு வாரக் கணக்கில்லை இது. போன வருஷம் முழுக்க அந்தம்மா முன்னூத்தி நாப்பது பேஜ்தான் டைப் அடிச்சிருக்காங்க, ஸ்டாடிஸ்டிக்ஸ் இருக்கிறது."

"இப்ப என்னய்யா? உங்கள் டிபார்ட்மெண்டே ஓவர் ஸ்டாஃப்ட் !"

"ஸார் அதைத் தீர்மானிக்க வேண்டியது நான் இல்லையா?"

எம்.டி.. இதற்குப் பதிலளிக்காமல் "சங்கர் இதைப் பாருங்க எஸ்டிமேட் நீங்க தானே தயார் செஞ்சது" என்று மேஜை மேலிருந்த ஃபைலை என்னிடம் வீசினார்,

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சொல்லாமல் என் செயலை இருவரும் அலசிக் கொண்டிருக்கிறார்கள், "ஏன் ஸார் இதில் ஏதாவது தப்பா?"

"டோட்டல் சரியா இல்லை. டிப்ரிஸியேஷன் ரேட்டு தப்பு. எஸ்கலேஷன் க்ளாஸ் தப்பு" என்றான் நாராயண்.

"சார் இது அநியாயம். ரஃப் டிராஃப்ட் வச்சுக்கிட்டு கேள்வி கேக்குறது நல்லதில்ல. மேலும் உங்களுக்கு என் ஒர்க்ல ஏதாவது சந்தேகம் கேக்கணும்னா தனியா கூப்பிட்டுக் கேட்கிறதுதான் ஒரு சீனியர் மேனேஜருக்கு நீங்க குடுக்கிற மதிப்பு..."

"மதிப்பென்னய்யா மதிப்பு? இதுவரைக்கும் உங்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை. இப்ப ஆள் வந்தாச்சு"

"நான் உங்களோட அப்புறம் பேசறேன் ஸார்" என்று ஆத்திரத்துடன் பதிலுக்குக் காத்திராமல் வெளியே வந்துவிட்டேன்.

அந்தச் சம்பவத்திலிருந்து நாராயணுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். இவ்வளவு வருஷம் விசுவாசமாக உழைத்து வந்த என்னை, ஒரே வாரத்தில் மூலைக்குத் தள்ளிவிட்ட நாராயணை அப்படியே கழுத்தை நெறித்துக் கொலை செய்ய வேண்டும் போல் வந்தது. அவ்வளவு தூரத்துக்கு எனக்குத் தைரியம் இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நாராயண் ஆக்கிரமிப்பு அடுத்த நாள்களில் அதிகரித்தது. .

ஒரு மிக முக்கியமான டெண்டர் தயார் வேண்டிய பொறுப்பு. அப்போது என்னிடம் வந்தது.

சுவாரஸ்யமில்லாமல் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்துவிட்டு கடைசி நாள் லீவில் சென்றுவிட்டேன்.

நாளை டெண்டர் கடைசி தினம் கம்பெனிக்கு இதனால் பத்து லட்ச ரூபாய் காண்ட்ராக்ட் போய்விடும். போகட்டும். எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை. என் அனுபவத்துக்கு வேறு வேலை கிடைக்கிறது சுலபம். போகிறபோது நஷ்டப்படுத்திவிட்டுச் செல்லலாம்.

லீவில் சென்றுவிட்டேன். திரும்பி வந்ததும் எம். டி. என்னை கூப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். கூப்பிடவில்லை. எதுவுமே நிகழவில்லை.

பிற்பகல் நாராயண் என் அறைக்கு வந்தான். "சங்கர் லீவில் போறப்ப ஏதாவது பெண்டிங் ஒர்க் இருந்தா என்கிட்ட விட்டுட்டுப் போகலாம். ஒரு பெரிய காண்ட்ராக்ட்டை லூஸ் பண்றதுக்கு இருந்தோம் . நல்ல வேளை, உங்க டேபிள் மேல அதைப் பார்த்து, நானே அவசரமா ஒரு டெண்டர் தயார் பண்ணி அனுப்பிச்சிட்டேன்"

"அதெப்படி சாத்தியம் ஒரு நாளில்?"

'அனுப்பியிருக்கேன். காப்பி இருக்கு பாருங்களேன்..." என்று புன்னகை பூத்தான்.

"பை தி வே, நான் இதை எம். டி கிட்ட சொல்லலை" என்றான் மறுபடி புன்னகை செய்துவிட்டு...

நான் அவன் அனுப்பியிருந்த டாக்குமெண்ட்களின் பிரதிகளைப் பார்த்தேன். அயர்ந்துபோனேன்.

இது எப்படி சாத்தியம்? மொத்தம் நூற்றைம்பது பக்கங்கள் ....ஒரே இரவில் ஒழுங்காக டைப் அடித்திருக்கிறான்.... அல்லது அடிக்கவைத்திருக்கிறான்.

உள் தொடர்பு தொலைபேசியில் அவனிடம் கேட்டேன்.

"நாராயன், டெண்டர் டாக்குமெண்ட்ஸை யார் அடிச்சாங்க?"

'ஏன் நான்தான்..."

"தயாரிச்சது?'

"அதுவும் நான்தான்.. "

"இம்பாஸிபிள் !!"

"என்னால் முடியும் சங்கர்"

எம் டி போன் செய்து "கங்கிராஜுலேஷன்ஸ் ! நீ அனுப்பிச்ச டெண்டர் அக்ஸப்ட் ஆயிடுச்சு' என்றார்.

எப்படி சாத்தியம்? இவன் மனுஷனா இல்லை ராட்சஷனா!

அந்த சந்தேகம் எனக்கு இன்னும் அடுத்த வாரம் வலுப்பெற்றது. இவன் அறைக்கு சென்றேன் "இந்த ஆபிஸில் இருக்கிற வேலை பாதிக்கு மேல என்னால செய்ய முடியும்' என்று கலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்

"நீங்க செய்வீங்க"

"வாங்க சங்கர். ஒரு நிமிஷம் அப்ப கலா இன்னிக்கு ராத்திரி எப்ப வரே..."

'என்ன சார் என்ன என்னவோ கேட்டுண்டு..." என்று கலா என்னைக் கலவரமாகப் பார்த்துக் கொண்டு விலகினாள்.

ஓஹோ, இப்படி ஒரு திருப்பமா?

"சங்கர், என்ன விஷயம் என் மேல கோபமெல்லாம் தீர்ந்து போச்சா?"

'"இந்த ரிப்போர்ட்டை எம்.டி பார்க்கச் சொன்னார்"

"பார்த்துட்டாப் போறது"

அந்த எட்டுப் பக்க ரிப்போர்ட்டை சரசரவென்று எட்டு முறை புரட்டினான்,

"பார்த்தாச்சு"

"என்ன அதுக்குள்ளேயா?"

"ஆமா ஸ்பீட் ரீடிங். நாலாவது பக்கத்தில் எட்டாவது வரியில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. அட்வைஸுக்கு வர்பில எஸ் போடணும். மத்தபடி ஏழாவது பக்கத்தில் ஒரு பாரா ரிப்பீட் ஆறது"

சோதித்துப் பார்த்ததில் அவன் சொன்னது சரியாக இருந்தது.

இவன் என்ன மாதிரி மனிதன் ? ராத்திரி எதற்குக் கலாவைக் கூப்பிட்டான்?

எனக்கு அந்த வினோத விரோதியின் மேல் விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. அவன் என்ன படித்திருக்கிறான், எங்கே படித்தான் ?

ஒரு முறை அவன் கலாவுடன் காரில் சென்றபோது, அவர்கள் காரை என் காரில் பின்தொடர்ந்தேன். எதற்காக என்று சரியாகத் தெரியவில்லை, சற்று வெட்கமாகக் கூட இருந்தது

இருந்தும் இந்த விவகாரம் எம். டிக்கு தெரிந்தால்? அவனுக்கு நிச்சயம் வேலை போய்விடும். ஆபீஸ் ஒழுக்கத்தைப் பற்றிக் கண்டிப்பான கொள்கைகள் கொண்டவர் அவர். இந்தச் சரசம் அவருக்கு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால்? ஆதாரம் தேடித்தானே பின்தொடர்ந்தேன்?

கடற்கரைப் பக்கம் தனியாக இருந்த ஒரு வீட்டில் அலன் கார் நின்றது. நான் சற்று தூரத்திலேயே நின்றுவிட்டேன் கொஞ்ச நேரம் விட்டு அருகே சென்றேன். கதவு சாத்தி இருந்தது ஜன்னல் கதவு திறந்திருந்தது. பேச்சுக் குரல் எதுவும் கேட்கவில்லை

க்ளிச் 'க்ளிக்' என்ற வினோத சத்தம் மட்டும் கேட்டது. மெல்ல ஜன்னல் அருகே சென்று சற்று வெட்கத்துடன் தயக்கத்துடனும் எட்டிப் பார்த்தேன்.

திடுக்கிட்டேன்,

அந்த அறை காலியாக இருந்தது. அதன் நடு மையத்தில் கலா உடம்பில் உடை எதுவுமின்றி படுத்திருந்தாள் நாராயண் அவளைப் பல கோணங்களில் போட்டோ பிடித்துக் கொண்டிருந்தான்.

கலா படுத்திருந்த நிலையில் ஒருவித இயந்திரத் தனம் இருந்ததா என்ன?

ஏன் அறை காலியாக இருக்கிறது?. எங்கே பர்னிச்சர் எங்கே அலமாரிகள் ஒரு மனிதன் வாழ்க்கைக்கு உரிய தேவைகள் எதுவுமே இல்லாத நிர்வாணமான அறை, கலாவைப் போல.....

சற்று நேரம் யோசித்தேன். மௌனமான 'க்ளிக்' 'க்ளிக்'குகள் கேட்டுக்கொண்டிருந்தன.

"கலா கொஞ்சம் பக்கவாட்டமா படுத்துக்க"

படுத்துக்கொண்டாள். க்ளிக்

"அப்படியே நிமிர்"

நிமிர்த்தாள்,

க்ளிக்

"கையைத் தூக்கு" எல்லா நிலைகளுக்கும் ஒவ்வொரு க்ளிக் இவன் என்ன மாதிரி மனிதன் என்பதைவிட என்ன மாதிரி வக்கிர புத்தி மனிதன் என்கிற கேள்வி என் மனத்தில் மிதந்தது. எம்.டிக்கு தெரிந்தால்: ....?

"உள்ளே வாங்களேன் மிஸ்டர் சங்கர்"

திடுக்கிட்டேன்

"ஏன் ஜன்னலில் இருந்தே எட்டிப் பாக்குறீங்க? கதவு திறந்துதான் இருக்கு, உள்ளே வரலாம்..."

என்ன இவனுக்குப் பிடரியில் கண்ணா ? நான் எட்டிப் பார்ப்பது எப்படித் தெரிந்தது திரும்பினான். கீழே படுத்திருந்த கலாவைக் காட்டினான்

"மனிதஉடல், அதுவும் ஒரு பெண்ணின் உடல்! என்ன ஒரு கலையம்சமான படைப்பு! அவள் மார்பை பாருங்க, ஷாம்பேன் கோப்பை போல்..... அந்த தொப்புள் என்ன பர்ஃபெக்ட் பாருங்க, அப்புறம் அடிவயிற்றின் சரிவு. பின்னால் பெறப்போகும் பிள்ளைக்காக இப்போதே இடம் தந்த பெல்லிக் வளைவு.. அப்புறம்...."

"ஷட் அப் நாராயண், உனக்கு வெக்கமாக இல்லை?"

"வெட்கமா? கலையை ரசிக்கிறதில எதுக்கு வெட்கம் எத்தனை பெயிண்டர்ஸ் பார்த்து ரசித்து வடித்த வடிவம்! டெகாஸ், ரென்வார் , ரெம்ப்ராண்ட்........"

"ஏய் கலா எழுந்திரு!"

அவன் எழுந்திருக்காமல் என் குரலையே மதிக்காமல் "நாராயண ஸார், இன்னும் என்ன பண்ணனும்?"

"சங்கருக்கு நீ உடையில்லாம இருக்கறது பிடிக்கலை உடை அணிந்துகொள் கலா"

அவள் எழுந்து தன் உள்ளுடைகளை என் முன் முழுக் காட்சியாக அணிந்து கொண்டு சட்டை அணிந்து பாண்ட் அணிந்து ஜிப்பை இயக்கிவிட்டுத் தலைமயிரைச் சேர்த்துக்கொண்டு ரப்பர் வளையத்தில் கட்டுப்படுத்தி விட்டு நின்றாள்.

'டிக்' என்று கையைச் சொடக்கினான்.

"அட சங்கர் சார், நீங்க வந்திருக்கீங்களா?"

"நாராயண், நான் இதை எம். டி.கிட்ட சொல்லப்போறேன்"..

"எதை?"

"சற்று முன்னாடி நடந்ததை.... மை காட் !. யூ ஆர் எ பர்வர்ட் ஐ ஸே...."

"இந்த அறையில் நடந்ததுக்கும் ஆபிஸுக்கும் எப்படி சம்பந்தம்?"

"ஒழுக்கம் ஒண்ணு இருக்குல்ல...?"

"அது திருக்குறள்ல இருக்குது...... இது வந்து எனக்கும் கலாவுக்கு உள்ள சொந்தப் பிரச்சனை. இன்டிவிஜுவல் வாலிஷன். ஆபிஸைப் போட்டுக் குழப்பாதிங்க, நீங்க எம். டி கிட்ட இதைச் சொன்னா அவர் கேக்கற கேள்விகளுக்கு நான் பதில் சொல்லத் தயார்..."

"இப்ப என்ன சண்டை?" என்றாள் கலா.

'கலா! ஐ'ம் அஷேம்ட் ஆஃப் யூ"

"என்ன நடந்தது?"

" நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா? எத்தனை பணம் தரான்?"

கலா, "கெட் அவுட்" என்று சீறினாள்.

"உனக்கும் வேலை போக போறது"

" ஐ டோன்ட் கேர்! என்ன நாராயண், நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கத்தானே போறோம்?'.

"ஒய் நாட் அதையும் பார்த்து விடலாம் என அவள் தோள்பட்டையில் கைகோத்துக் கண்ணடித்தான்.

'டார்லிங், யூ ஆர் பியூட்டிஃபுல்! "

கலா அவனை மூக்கால் நிரடி 'டார்லிங், உங்கிட்ட ஸ்பெஷலா ஒரு வாசனை இருக்கு. அதுவே தூக்குது..."

வெறுப்பில் விலகினேன்.

ஒரு வாரம் கழித்து அந்தத் திடுக்கிடும் தகவல் எனக்குக் கிடைத்து பர்ஸானல் மேனேஜர் சுந்தரேசன் வியர்வை வடியும் முகத்துடன் என் அறைக்கு வந்து, 'டெர்ரிபிள் மிஸ்டேக் ஆயிடுச்சு சங்கர் ஸார்.."

"என்ன?'

"மிஸ்டர் நாராயண் கொடுத்திருக்கும் அத்தனை சர்டிஃபிகேட்களும் பொய் ! எல்லாம் போகஸ் !! அந்த ஆள் பொய் சர்டிஃபிகேட் கொடுத்து கம்பெனியை ஏமாற்றியுள்ளான். இதை எப்படி நான் எம்.டி யிடம் சொல்லுவது? இதைச் சொன்னால் என்னை துவையல் அரைத்து சாப்பிட்டு விடுவாரே..."

"நான் சொல்றேன் சுந்தரேசன்".

"உடனே சொல்லிடுங்க சங்கர் ஸார்....நான் ருட்டினா வெரிஃபை பண்ணி இருக்கனும், அந்தாளு செய்த அசாத்தியமான வேலையையும் அவர் திறமையையும் பார்த்தா அவர் சர்டிஃபிகேட்டை உடனே சோதிச்சுப் பார்க்கணும்னு எவனுக்கும் தோன்றியிருக்காது, என் பேர்ல தப்புதான். எம். டி கிட்ட சொல்லி என் வேலை பறி போய்டாம...."..

"முயற்சி பண்றேன் சுந்தரேசன்".

எம். டி. என்னைப் பார்த்து "வாய்யா சங்கர், ஏதாவது சந்தேகம் கிளாரிஃபிகேஷன் நாராயண் கிட்ட கேளு. என்னைத் தொந்தரவு செய்யாதீங்க"

"இல்லை சார் வேறு விஷயம் "

"நீங்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும் டி. ஜி. எம் போஸ்ட் ஒண்ணு அடுத்த மாதம் காலியாறது. அதுக்கு நாராயணைப் போடறதில் உங்களுக்கு ஏதும் அப்ஜெக்ஷன் இருக்கக்கூடாது.."

"இல்ல யார்.. இந்த ரிப்போர்ட்டை மட்டும் பார்த்துருங்க..."

"என்ன ரிப்போர்ட்?"

"பர்ஸானல் டிபார்ட்மெண்ட்ல..."

'நாராயணன் கிட்ட காட்டுய்யா! இதை ஏன் என்கிட்ட....."

"இது நாராயணைப் பற்றின ரிப்போர்ட் ஸார்"..

'குடு பார்க்கலாம்."

மேலாகப் படிக்க ஆரம்பித்தார். மூன்றாவது வரியிலேயே உன்னிப்பாகப் படிக்கத் தொடங்கினார். அவர் விழிகள் பெரிதாக வரிகளை விழுங்கின. முடித்தார். நிமிர்ந்தார்.

'நம்ப முடியல!"

'என்னாலயும் முதல்ல நம்ப முடியலை ஸார்".

இன்டர்காமைத் தட்டி, "நாராயணை உடனே கூப்பிடும்மா" என்றார்

'மை காட் மை காட்"

"அப்புறம் அந்தப் பெண் கலா இல்லே, அவளை என் கன் முன்னாலேயே நிர்வாணமாக போட்டோ எடுத்தான் ஸார்..."

"சரிதான், இது வேறயா? எங்கம்மா நாராயண்?"

"ஸீட்ல இல்லை சார் பதில் இல்லை"

"எங்க போயிட்டான்...?'

"வீட்டுக்குப் போய் விட்டதா...."

"விலாசம் தெரியுமில்ல வண்டி அனுப்பிச்சுக் கூப்பிட்டு வரச் சொல்லு. ஒரு நிமிஷம். சங்கர் உனக்கு அவன் வீடு தெரியுமா?".

"தெரியும் ஸார்"

" நீயே வண்டி எடுத்துக்கிட்டுப் போய் உடனே அவனைக் கையோட அழைச்சுட்டு வா. இன்னைக்கே மேட்டரைத் தீர்த்துடலாம். அவன் என்ன மாதிரி கில்லாடியா இருந்தாலும் பொய் உதவாது. ஏமாத்து.....நம்மை எல்லாம் என்ன இளிச்சவாயன்களா நினைச்சுகிட்டானா?"

நான் சந்தோஷத்துடன் ஆபிஸ் காரில் நாராயணன் வீட்டுக்குப் பறந்தேன்,

வீட்டு வாசலில் நாராயன் கதவைச் சார்த்திக் கொண்ருக்கும்போது அவனைச் சந்தித்தேன்.

"நாராயண் வாய்யா"

'எம் டி கூப்பிட்டனுப்பிசாரா?"

"ஆமாம், உன் சர்டிஃபிகேட் அழகெல்லாம் பார்த்துட்டார்".

"தெரியும் -

"உடனே வா...."

"நான் வரலே சங்கர் எம்.டி கிட்ட சொல்லுங்க எல்லாத்துக்கும் தாங்க்ஸ் சொல்லிடுங்க. இந்தக் கடுதாசியை போஸ்ட் பண்ணலாமுன்னு இருந்தேன். நீங்களே வந்துட்டிங்க நீங்களே கொடுத்துருங்க கலா கிட்ட எல்லாத்துக்கும் தாங்க்ஸ்ன்னு சொல்லிடுங்க மத்த பேர்கிட்டயும் சொல்லிடுங்க. அவசரமாப் புறப்பட்டுப் போறதுக்கு மன்னிக்கச் சொல்லுங்க".

"புறப்பட்டுப் போறியா? எங்க?

"எங்க போகணுமோ அங்க....இந்தாங்க கடுதாசி பிரிச்சுப் பாருங்க....."

பிரித்துப் பார்த்தேன். ஒரே ஒரு வரி " நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன். வந்தனம் நாராயண்".

நான் நிமிர்ந்தேன்.

'ஊருக்கு போறியா லக்கேஜ் எங்க?"

"லக்கேஜ் இல்லாம வந்தேன். லக்கேஜ் இல்லாமப் போறேன்"

"கால்ல செருப்பு கூட இல்லையே ?"

"வேண்டாம்".

அவன் புறப்படும் முன் அவன் கால் விரல்களில் தப்பு இருப்பது தெரிந்தது.....

அவனுக்கு இரண்டு வலக் கால்கள் இருந்தன.

"நாராயண்"

விறுவிறு என்று நடந்து சென்று சடுதியில் தெருமுனையில் மறைந்தான்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் நாராயணிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவனுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு பைசா பாக்கியில்லாமல் கூட்டப்பட்டு ஒரு செக் அவன் மேஜையில் எழுதி வைத்திருந்தான்.

அந்த வினோத நாராயண் வந்தான், போனான்.

====================

"அவன் யார் கணேஷ்?'.

ஒரு மாதத்துக்குப் பிறகு நான் கணேஷ் அறையில் உட்கார்ந்திருந்தேன், உடன் வஸந்தும் உட்கார்ந்திருந்தான்.

கணேஷ் எல்லாவற்றையும் கேட்கும்போது குறுக்கே பேசவே இல்லை. வஸந்த் தான் அவ்வப்போது "அப்படியா! கில்லாடி ஸார், அந்த ஆளு " என்றெல்லாம் கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தான்.

குறிப்பாக அந்த போட்டோ பிடிக்கும் பகுதி வந்தபோது வஸந்த் சுறுசுறுப்பாக அந்தப் பெண்ணின் அட்ரஸ் கேட்டான்.

எல்லாம் முடிந்ததும் "வஸந்த் , அந்த ஆள் யாரு சொல்லு...பார்க்கலாம்!" என்றான் கணேஷ்.

"என்ன பாஸ் ரொம்ப சுலபம். அவன் ஒரு ஃ ப்ராடு சர்ட்டிஃபிக்கேட் எல்லாம் பொய், ஆள் கண்டுபிடிக்கப்பட்டதும் காணாமப் போயிட்டான்"

"அவனால் எப்படி அவ்வளவு அமானுஷ்யமான காரியங்கள் எல்லாம் செய்ய முடிஞ்சது?"

"அமானுஷ்யமா! என்ன இதில் இருக்கு! பத்துப் பக்கம் படிச்சுப் பார்த்து ஒரு நிமிடத்தில் இந்த இடத்தில் தப்பு இருக்கிறது சொல்றது ஸ்பீட் ரீடிங்-ல் சாத்தியம் பாஸ்"

"நான் அதைச் சொல்லை ஒரு ராத்தியில் ஃபைல் பார்த்தது. .டெண்டர் தயார் செய்தது..."

"எனக்கென்னமோ அது கொஞ்சம் ப்ளஃபா இருக்கும்னு தோணுது. முன்னாலேயே பத்து, பதினஞ்சு நாளா அதுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள திருட்டுத்தனமா ஃபைலைப் பார்க்கலைன்னு என்ன காரண்டி ? இதெல்லாம் அமானுஷ்யமா எனக்குப் படலை."

'அந்தப் பொண்ணை ஃபோட்டோ எடுத்தது ?"

"அது ஒரு பர்வர்ஷன்தான். இதைவிட எவ்வளவோ பர்வர்ஷனை நாம பார்த்ததில்லையா? மைகாட் !"

"ஓகே ஓகே அவர் கால் கட்டை விரல்?"

'அது வந்து....ஸார் அவருடைய ஆறாவது விரலை பாத்துட்டு வந்து ஒரு மாதிரி கற்பனை பண்ணிட்டு இருப்பார். எனக்கென்னவோ எதுவும் அமானுஷ்யமா படல. பாஸ், நீங்க என்ன சொல்றீங்க?"

"நான் வேறுவிதமான நினைக்கிறேன். அந்தாள் மனுஷனே இல்லை. "

"பின்னே?'

"வேறு உலகத்தில் இருந்து நம்ம உலகப் பழக்க வழக்கங்களைக் கவனிக்க அல்லது குறிப்பெடுத்துக்கொள்ள வந்த ஒரு பிரஜை. அந்த கிரகத்தில் பெண்களே இல்லாமல் இருக்கலாம். அல்லது வேறு வடிவத்தில் இருக்கலாம். அவங்களுக்கு மனித ஆண் வடிவத்தைப் பத்தி தெரிஞ்ச அளவு பெண் வடிவத்தைப் பத்தி அதிகம் தெரியாம, அந்த அறிவு இன்கம்ப்ளீட்டா இருக்கலாம். அதுக்காகத்தான் இங்க, அந்தப் பெண் கலாவை போட்டோ எடுத்திருக்கான்".

"அவங்க எல்லோரும் ஸூப்பர் ப்ரெயின்களா இருக்கலாம். அசுர வேகத்தில் சாதனை செய்யக்கூடியவங்களா இருக்கலாம். இங்க பூமிக்கு வரதுக்கு முன்னாடி அவசர அவசரமாக மனித வடிவம் பூண்டதில் ஒரு சின்னத் தப்பு நேர்ந்து இரண்டு காலும் ஒரே மாதிரி ஆயிடுச்சுன்னு வெச்சுக்கலாம்".

"அவன் வேலை முடிஞ்சது. போய்ட்டான். ஏன் 'அவன்' ன்னு சொல்றதே தப்பு. அது போய்டுச்சு. அவங்க உலகத்துக்கு. என்ன சொல்ற, வஸந்த் ?"

"என்னத்தைச் சொல்றது? சமீபத்துல ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரோட சயன்ஸ் ஃபிக் ஷன் நிறைய படிக்கறீங்கன்னு தெரியுது.

சயன்ஸாவது ஃபிக் ஷனாவது ? எல்லாம் ரீல். இதப்பாருங்க. இந்தப் பென்சில் இருக்கு. இதை "ஓ பென்சிலே ! தானாவே கூர்ச்சை மேல நின்னு டான்ஸ் ஆடு" ன்னு சொன்னா ஆடுமா? ஆடாது. சயன்ஸ் ஃபிக் ஷன்ல ஆடுமாம் ! என்னவொரு......பாஸ், அதைப் பாருங்க..."

அந்தப் பென்சில் அவன் குறிப்பிட்டது போல ஆடிக்கொண்டிருந்தது வேறு கதை......


(நன்றி: FB அறிவுஜீவி சுஜாதா வாசகர் குழு)






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....