முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நற்றிணை - ஒரு எளிய பார்வை (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் -1

 நற்றிணை - நல்வாழ்வின் பதிவு..

அறிமுகம்

எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகக் குறிப்பிடப்படும் நூல். நன்மை+திணை = நற்றிணை - சிறந்த ஒழுக்கம் என்ற பொருள் கொண்ட நூல். இது அகத்திணை நூல். ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி வரையில் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது. அதனால் ' நற்றிணை நானூறு' என்ற பெயரும் உண்டு.

இதில் 187 புலவர்களின் பாடல்கள் உள்ளன.  இவற்றைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. தொகுக்க ஆதரவு நல்கியவர் "பாண்டிய மன்னன் பன்னாடு தந்த மாறன் வழுதி"

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதிய உரையே முதல் உரையாக கருதப்படுகிறது (கீழே இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கி படித்து பயன் பெறுக)

அகத்திணை அறிமுகம்

"எல்லாவுயிர்க்குமின்பமென்பது தானமர்ந்து வரூஉ மேவற்றாகும்
என்றார் தொல்காப்பியனார். இன்பம் என்பது எல்லாவுயிர்க்கும் உள்ளத்தோடு
பொருந்தி வரும் உணர்வாகும். ஆணும் பெண்ணும் பொருந்தி வாழ்வதே இன்பம், அதுவே முக்கியமானது. இது எல்லா உயிர்களித்திலும் உள்ளது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஒழுக்கம் தவறாமல், நெறிமுறைகளுடன் வாழும் வழி காட்டுவதே அகத்திணை.

அகத்திணை நிலம் சார்ந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையும் தலைவன்- தலைவி இருவரின் மனம் ஒத்த அன்பை உயர்வாகச் சொல்லும். இவை 'அறம், பொருள், இன்பம், வீடு, பேறு என்ற பயன்களை அளிக்கும். இவை தவிர கைக்கிளை (ஒரு பக்க காதல்), பெருந்திணை (பொருந்தாக்காதல்) இரண்டும் சேர்த்து அகத் திணை ஏழு வகைப்படும்.  
குறிஞ்சித் திணை –  புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தற்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

நற்றிணையில், குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130, பாலைப் பாடல்கள் 107, நெய்தல் படல்கள் 101, மருதப் பாடல்கள் 33, முல்லைப் பாடல்கள் 28 உள்ளன. ஒரு பாடல் (234ம் பாடல்) கிடைக்கவில்லை. 400 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர். 59 பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் கிடைக்கவில்லை.

கடவுள் வாழ்த்து

இந்நூலுக்குப் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' கடவுள் வாழ்த்து பாடியுள்ளார். 
இதில் திருமாலின் 'விஸ்வரூபத்தை போற்றுகிறார்.

"மாநிலஞ் சேவடி யாக தூநீர்

வளைநரல் பெளவம் உடுக்கை யாக

விசும்புமெய் யாக திசைகை யாக

பசுங்கதிர் மதியோடு சுடர்கண் ணாக

இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே."    - பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருள்:

பெரிய நிலப்பரப்பையே தன் சிவந்த அடிகளாகவும், தூவுகின்ற அலைநீரையுடைய சங்குகள் ஒலிக்கின்ற கடலையே ஆடையாகவும், நீல வண்ணமான ஆகாயமே தனது உடலாகவும், நான்கு  திசைகளை கைகளாகவும், பசுமையான கதிர்களையுடைய சந்திரனோடு, சூரியனையும் இரு கண்களாகவும் கொண்டு, இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களையும் தன்னுறுப்பாக அடக்கி, காத்து வருபவன்:  வேத முதல்வன் என்று போற்றப்படுபவன்; இவ்வுலகிலே தீமைகள் அகல செயல்படும்  சக்கரப் படையை உடையவனே! (இந்நூலினையும் என்றைக்கும் காத்தருள்வானாக!)

சில பாடல்கள்
நற்றிணைப் பாடல்கள் காதலைப் பற்றிப்பாடும் அகப்பாடல்களாக இருந்தாலும், காமச்சுவை சேர்க்கும் குறிப்புகள் அதிகமில்லை. மாறாக நல்ல காதலை, காதலர்களின் உள்ளத்து உணர்வுகளை நயம்படச் சொல்லும் பாடல்களே மிகுதியாக உள்ளன.

குறிஞ்சித் திணை பாடல்

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வரை (mountain),  மலை, குன்று, சாரல் (mountain slope), அடுக்கம் (mountain range), கிளி,   ஏனல் (தினை), அவணை (millet field),  தினை,  இறடி (millet),  இருவி (millet stubble), தாள் (stubble), குரல் (millet spikes),  தட்டை (stubble) – and also bamboo rattle to chase parrots – வெதிர் புனை தட்டை, குளிர், தழல் (gadgets used to chase parrots), கவண், தினை, புனவன் (mountain farmer),  குறவன்,  கானவன், கொடிச்சி, கழுது, இதண், மிடை  (Platform in the millet field), ஓப்புதல் (chase parrots and other birds that come to eat the grain),  கொடிச்சி, யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), புலி,  பாம்பு, பன்றி (wild boar), வரை ஆடு,  அருவி, சுனை, பலாமரம், பலாப்பழம், சந்தன மரம், மா மரம், பணை (bamboo), வேங்கை மரம், அகில் மரம், மாமரம்,   குறிஞ்சி, குவளை, காந்தள், தேன், வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி (honeybee), மஞ்சு,  மழை (word is used for both cloud and rain),  பெயல் (rain), ஐவனம் (wild rice)
                                                                                       
கலாவத்தன்ன ஒலிமென் கூந்தல்
 பாடல் பாடியவர் - பரணர்  
பாடலின் பின்னணி -  தலைவியை அடைய விரும்பும் தலைவன் ஏக்க மிகுதியில், தனக்கு தானே கூறிக் கொள்வது.

"இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
அள்ள லாடிய புள்ளி வரிக்கலை
வீளை யம்பின் வில்லோர் பெருமகன் 
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத் தன்ன வார மார்பின் 
சிறுகோற் சென்னி ஆரேற் றன்ன
மாரி வண்மகிழ் ஓரி கொல்லிக்
கலிமயிற் கலாவத் தன்ன விவள்
ஒலிமென் கூந்தல் நம்வயினானே "

பொருள்
காய்ந்து போன புல்லை மேய்ந்த, உதிர்ந்த கொம்பினை உடையதும், புள்ளிகளையும், வரிகளையும் உடைய கலைமான், சேற்றிலே கிடந்து புரண்டு தன் வெம்மையைத் தீர்த்துக் கொள்ளும். அத்தகைய ஒலியோடு செலுத்தப்படும் அம்பினைக் கொண்டவரான வில் வீரர்களின் தலைவனும், பொலிவு பொருந்திய தன் தோளிலே கவசம் பூட்டியிருப்போனுமாகிய  மிஞிலி என்பவன், பேணிக் காத்து வரும் பாரம் என்னும் மலைநாட்டைப் போன்றதும்,
தன் கையில் சிறிதான செங்கோலைக் கொண்ட சோழன், சிற்றரசரை வரவேற்கும் 'ஆரேற்று' என்னும் அருளைப் போன்றதும்,
மாரி போல கொடை வழங்கும் ஓரி என்பானின் கொல்லி மலையிடத்துள்ள செருக்கிய மயிலைப் போன்றதுமான அழகினையுடைய இவளது தழைத்த மென்கூந்தலானது நமக்கே உரியதல்லவா?
( மிஞிலி என்பவன் கொண்கான நாட்டு படைத் தலைவன்; சென்னி - கரிகால் சோழனின் தந்தை இளஞ்சேட் சென்னி: ஓரி - கொல்லி மலைக்குத் தலைவன்)

நறநுதல் பசத்தல் அஞ்சி
பாடியவர் - கபிலர் 
பாடலின் பின்னணி - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது:

"நின்ற சொல்லர், நீடு தோறு இனியர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற, புரையோர் கேண்மை,  
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே".

பொருள்:
அவர் சொல்லிய சொல்லிலிருந்து  மாறுபடாதவர்.  பெரிதும் இனிமையாகப் பழகும் தன்மையுடையர்.  என் தோள்களை என்றும் பிரிதல் அறியாதவர்.   (வண்டு) தாமரைப்பூவின் குளிர்ச்சியான மகரந்தத் தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு போய் சேர்த்து வைத்த இனிய தேனைப் போல (தாமரைத்தாது – தலைவனின் உள்ளம், சந்தன மரம்-தலைவியின் உள்ளம், தேன் – இருவரின் அன்பு) உறுதியாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு.   நீர் இன்றி இவ்வுலகமானது சிறக்கவியலாது.  அதுபோல, அவர் இன்றி நாம் சிறத்தலில்லை.   அவரும் நம்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக கருணையோடு நடப்பவர்.  பிரிவதால் நம் மணம் வீசும் நெற்றியில் ஏற்படும் பசலை படர்வதற்கு அஞ்சுதலையுடைய அவர், பிரிதல் என்ற சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய்தற்குக்கூட அறியாதவர் அவர்!

முல்லைத் திணை பாடல்

முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, மழை, முல்லை, காயா, கொன்றை, தோன்றல், தேர், பாகன், மாரி, பித்திகம், கோவலர், ஆயர் (cattle herders), ஆடு, குழல், மஞ்ஞை (peacock),  குருந்தம், மழை,  மான், முயல்

முன்னியது முடித்தனம் ஆயின்
பாடியவர் - யார் என்று தெரியவில்லை
பாடலின் பின்னணி -  பணி முடித்து திரும்பும் தலைவன் தனக்கு தானே பேசிக்கொள்வது

‘முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்,
வருவம்’ என்னும் பருவரல் தீர,
படும் கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி,
பரல்தலை போகிய சிரல் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை  
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண்போழ் தைஇய அலங்கல் அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே? " 

பொருள்  
என் நெஞ்சே! நீடு வாழ்வாயாக!  மேற்கொண்ட பணியை முடித்தோம் ஆயின், நல்ல நெற்றியையுடைய என் தலைவிக்கு, நாம் திரும்பி வருவோம் அவளுடைய துயரம் நீங்குமாறு என்று, நெடிய சுவரில் இருக்கும் பல்லி ஒலித்துத் தெரிவிக்குமா, பரல் கற்கள் நிறைந்த பாலை நிலத்தில் உள்ள சிரல் பறவையைப் போன்ற மேல் பகுதியைக் கொண்ட கள்ளிச் செடியின் மேலே படர்ந்துத் தழைத்த முல்லையின் நறுமணமான மலர்களை, அசைகின்ற தலைகளையுடைய ஆடுகளின் கூட்டத்தை மேய விடுகின்ற இடையன் இரவிலே கொய்து, வெள்ளை நாரால் தொடுத்து அணிந்த அசைகின்ற மாலையின் நறுமணம் தெருவில் கமழும் இந்த மாலைப் பொழுதில், சிறிய குடியில் உள்ள எம்முடைய பெரிய இல்லத்தில்?

விரைந்து செல்க பாக
பாடியவர் - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
பாடலின் பின்னணி -  தலைவன் தேர்ப்பாகனிடம் கூறுவது

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப்,
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞலக்,
கார் தொடங்கின்றே; காலை வல் விரைந்து  
செல்க பாக நின் தேரே! உவக்காண்!
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓடக்,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.  

பொருள்
மழைக்காலம் தொடங்கிய இந்த வேளையில் இலைகள் இல்லாத பிடவம் மென்மையான மலர்களைத் தரும் அரும்புகளை ஈன்றுள்ளது. புதர்களின் மேல் படர்ந்திருக்கும் தளவத்தின் கொடிகளில் மலர்கள் பூத்துள்ளன.  பொன்னைப் போன்ற கொன்றை மலர்கள் மலர்ந்துள்ளன.  நீலமணியைப் போன்று நிறையக் காயா மலர்கள் குறுகிய மரக் கிளைகளில் பூத்துள்ளன.  மிகவும் விரைவாக உன் தேரை ஓட்டுவாயாக, பாகனே!  அங்கே பார்!
கழி நீர் பெயர்ந்த களர் நிலத்தில் விழித்த கண்களையுடைய தன் குட்டியுடன் ஒரு பெண் மான் தன் கூட்டத்திலிருந்து பிரிந்து ஓட, அதனுடைய ஆண் மான் காதல் நெஞ்சுடன் அதைத் தேடுகின்றது.

மருதத் திணை பாடல்

மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் –  வயல், பழனம் (pond), கழனி,  குளம், வாளை மீன், வாகை மீன், கெண்டை மீன் , ஆமை, உழவர், அரிநர், நெல், மாமரம், ஞாழல் மரம், நொச்சி மரம், கரும்பு, நீர்நாய்  (otter), ஆம்பல் (white waterlily), தாமரை, பொய்கை, கயம் (pond), குருவி, கோழி, சேவல்,  கழனி, கொக்கு, காரான் (buffalo), காஞ்சி மரம்,  மருத மரம், அத்தி மரம்,  கரும்பு, குளம்,  தாமரை மலர், எருமை,  பொய்கை, ஆம்பல், முதலை, களவன் (நண்டு)

செல்வமும் செய்வினைப் பயனும்

பாடியவர் - மிளைகிழான் நல்வேட்டனார்
பாடலின் பின்னணி -  தலைவனிடம் தோழி சொல்வது

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுநாள் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று, தன் செய்வினைப் பயனே!
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புண்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வம்என் பதுவே!

பொருள்
தலைவனே! நெல் அறுத்து நீங்கப் பெற்றதான அழகிய இடமகன்ற வயலில், திரும்ப உழுத ஈரத்தையுடைய சேற்றிலே, விதைக்கப் போன உழவர் வட்டமான கடகப் பெட்டியில் பற்பல வகையான மீன்களோடும் திரும்பிக் கொண்டிருக்கிற புது வருவாயினைக் கொண்ட ஊர்க்காரரே! எதனையும் பெரிதாக நெடு நேரம் பேசும் பேச்சு வன்மையும், தேர் யானை குதிரை முதலியவற்றை விரைவாகச் செலுத்தும் உடல் வலிமையும் 'செல்வம்' என்று ஏற்றூக் கொள்ளப்படுவதன்று. அவை வாய்த்தல், முன் செய்த நல்வினைப்பயனாலேயாகும். சான்றோர் 'செல்வம்' என்று சொல்வது, தன்னைச் சேர்ந்தோரது துயரத்தை நினைத்து அச்சம் கொள்ளும் பண்போடும், அவ்ர்க்கு இனிதான செயல்கள் செய்வத

நெய்தல் திணை பாடல்

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்

நெய்தல் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் –  கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், தாழை, கைதல், கைதை (screwpine),   உப்பு, உமணர் (salt merchant), உப்பங்கழி (salty land), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் ஆம்பல் (white waterlily), கோடு, வளை (conch shell), வலை, குருகு, நாரை, அன்றில்

கழிந்தன்றே தோழி!

பாடியவர்: நக்கண்ணையார்
பாடலின் பின்னணி - தலைவி தோழியிடம் கூறுவது

"உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப்  
பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே".

பொருள்
தோழி!  தலைவரது நாட்டில் உள்ள பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து அவற்றின் தாது கடலின் துறையில் மேய்கின்ற சிப்பியின் ஈரமான முதுகின் புறத்தே (ஓட்டின் புறத்தே) விழும் சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெரிய குளிர்ந்தக் கரையில் உள்ள சோலையையும் நான் நினைத்த அப்பகல் பொழுதில், ஊரில் உள்ள மாமரத்தில் இருக்கின்ற முள்ளைப் போன்ற பற்களையுடைய வௌவால் உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடித் தூங்கும் பொழுதிலே, போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல், தலைவரோடு இருந்ததாக நான் கனவு கண்டேன். ஆனால் அவ்வின்பம் நான் விழித்தவுடன் ஒழிந்தது.

பாலைத்திணை பாடல்

பாலை - குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  –  அத்தம் (harsh path), சுரம் (wasteland), எயினர் (tribes living in the wasteland), பல்லி, ஓதி, ஓந்தி (big garden lizard), பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), யா மரம், ஓமை மரம், குரவம், கள்ளிச்செடி, கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, யாமரம், உகாய், கழுகு, கடுஞ்சுரம், அருஞ்சுரம் (harsh wasteland), செந்நாய் (red fox), யானை, புலி, மூங்கில், பதுக்கை (leaf heap, usually a shallow grave), நெல்லி, நெறி (path), ஆறு (path), வேனிற்காலம்,  பரல் கற்கள், இறத்தல் (கடப்பது)

பாடியவர் : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
பாடல் பின்னணி - தலைவன் தலைவியிடம் சொன்னது

"பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு     
வான் தளி பொழிந்த காண்பின் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர  5
ஏகுதி மடந்தை, எல்லின்று பொழுதே,
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
உதுக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே".

பொருள்
 மடந்தையே!  ஞாயிறு மேற்கு திசையில் சென்று மறைந்து ஒளி மழுங்கியது.  அங்கே பார்!  மூங்கில் நிறைந்த சிறிய மலையில், கோவலர் தங்கள் பசுக்களின் கழுத்தில் கட்டிய தெளிந்த ஓசையையுடைய மணிகள் ஒலிக்கும் எம்முடைய சிறிய நல்ல ஊர் தோன்றுகின்றது.  பாம்பு புற்றில் அடங்கி இருக்குமாறு முழங்கி, வலமாக எழுந்து முகில்கள் மழையைப் பொழியும் காண்பதற்கு இனிமையான இந்தப் பொழுதிலே, அழகு விளங்கும் தோகையை மெல்ல விரித்து நீலமணி போன்ற கழுத்தினையுடைய ஆடும் மயில் போல், மலர் அணிந்த உன்னுடைய கூந்தலில் வீசும் காற்று உளரி விரித்து விடச் சிறிது விரைந்து செல்வாயாக.




முழு நூல் உரையுடன் பதிவிறக்க:
























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி  இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல .. அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா .. அவ என்ன சொன்னாலும் பிடிக்கும் , எது பேசினாலும் பிடிக்கும் , பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும் , கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான் .   ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து , நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு , நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா ..   சாப்பிட்டியா என்ன பண்றே   பைக் பார்த்து கவனமா ஓட்டு உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா .. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா .. கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா .. சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா .. பல காயங்களுக்கு மருந்து போடுவா , சில காயங்களுக்கு அவளே காரணமாவா .. இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா .. அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா .. ஒரு பெ...