முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறுந்தொகை - ஒரு எளிய பார்வை (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் -2 

குறுந்தொகை - பண்டைத் தமிழனின் மேன்மை

எட்டுத் தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படும் நூல். இது அகப்பொருள் பற்றியது. குறுந்தொகைப்பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழ்

மக்களின் ஒழுக்கம், காதல் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், நாகரீகம், மகளிர் மாண்புகள், அற உணர்வுகள் போன்றவற்றை அறியலாம்.

குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களால் ஆனதால் குறுந்தொகை என்று கூறப்படுகிறது. பாடல்களின் நீளம் நான்கு அடி முதல் எட்டு அடி வரை ஆகும். இதில் மொத்தம் 402 பாடல்கள் உள்ளன். 205 புலவர்கள் பாடிய இந்நூலைத் தொகுத்தவர் 'பூரிக்கோ' என்பவர். முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. ஆராய்ச்சி பதிப்பு உ.வே.சாமிநாத ஐயர். இதில் 10 பாடல்கள் யார் பாடியதென்று தெரியவில்லை.

உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டி எடுத்தாளப்பட்ட நூல். மேலும், சங்க நூல்களுள் முதலாவதாகத் தொகுக்கப்பட்ட நூலும்  இதுவே. இதில் வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து பாடியவர் 'பாரதம் தந்த பெருந்தேவனார்'. இக்கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது.

"தாமரை புரையும் காமர் சேவடிப்

பவளத் தன்ன மேனித் திகழொளிக்

குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்

நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்

சேவலங் கொடியோன் காப்ப

ஏமம் வைக லெய்தின்ற லுலகே"      -

பொருள்

சிவந்த தாமரை போன்ற அழகான திருவடிகள்; சிவந்த பவளம் போன்ற மேனி; சிவந்த குன்றிமணிபோன்ற ஆடை; சிவந்த ரத்தம் தோய்ந்த சுடர்நெடுவேல் அசுரனின் நெஞ்சைப்பிளந்ததால்!; சிவந்த நிறமுடைய சேவலை எழுதிய கொடியை உடையவன். அவன் காப்பதால் இந்த உலகம் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பைப் பெறுகிறது.

குறுந்தொகை குறிப்பிடும் இடங்கள்

ஆறுகள் : காவிரி, சோணை

ஊர்கள் : அஞ்சில், அரிசில், அள்ளூர், ஆற்காடு, ஆலங்குடி, ஆலத்தூர், இடைக்காடு, இருந்தை, உகாய்க்குடி, உரோடகம், உறையூர், ஐயூர், ஒக்கூர், கச்சிப்பேடு, கடம்பனூர், கடியலூர், கயத்தூர், கரவீரம், கருவூர், கழார், கள்ளில், காவிரிப்பூம்பட்டினம், கிடங்கில், கிள்ளிமங்கலம், குடவாயில், குறும்பூர், குன்றூர், கூடலூர், கோவூர், கோழி, சிறைக்குடி, செல்லூர், தண்கால், தொண்டி, பெருங்குன்றூர், பொன்மணி, மதுரை, மரந்தை, மாங்குடி, மாடலூர், முள்ளூர், மோசி, வாகைப்பறந்தலை, வெள்ளூர், வேம்பத்தூர்

காடுகள் : முள்ளூர்க்கானம், வல்விலோரிக்குரிய கானம்

மலைகள் : அரலை, இமயம், எழில், கொல்லி, பறம்பு, பொதியில்

(மேலும் முக்கிய குறிப்புகள் உ.வே.சா வின் உரையில் உள்ளது. இணைப்பில் காண்க)

சில பாடல்களும் பொருளும்

குறிஞ்சித்திணை

கூந்தல் மணம்

இந்தப் பாடல் இறையனார் பாடி, பாண்டிய மன்ன னை, தருமி என்ற புலவருக்குப் "பொற்கிழி" வழங்கச் செய்தது. ('திருவிளையாடல்' படத்தில் பார்த்தோமே)

பாடல் பின்னணி: 
 தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இணைந்த பின்னர், தலைவியின் கூந்தலில் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினவுவதின் மூலம் புலப்படுத்தி, அவளுடைய அழகைப் புகழ்கின்றான்.

"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

பொருள்

பூக்களிலே இருக்கின்ற பூந்தாதினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய வண்டே!  நான் விரும்பியதைக் கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக.  என்னோடு பழகிய நட்பினைக் கொண்டவள் என் தலைவி.  மயில் போன்ற மென்மையும் நெருக்கமான பற்களையும் கொண்ட அவளுடைய கூந்தலிலே வீசுகின்ற நறுமணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே நறுமணமுடைய மலர்களும் உள்ளனவா?

அன்பான நெஞ்சங்கள் கலந்தனவே

பாடியவர்: செம்புலப் பெய்நீரார்
பாடல் பின்னணி: இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் கூறியது.

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!"

பொருள்
 என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எந்த விதத்தில் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர்?  என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்?  நானும் நீயும் எவ்வாறு ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திருந்தோம்?  மழை நீர் செம்மண் நிலத்தில் விழுந்து கலந்தது போல் நம்முடைய அன்பான நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டுள்ளன.

முல்லைத்திணை
பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்
பாடல் பின்னணி:  பருவங் கண்டு தோழியிடம் தலைவி கூறியது.

"ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த, முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்,
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே."

பொருள்
ஆரவாரத்தையுடைய இடியுடன் மேகம் மழைபெய்து கலந்த முல்லை நிலத்தில் உள்ள மென்மையான முல்லைக் கொடிகள் பற்களைப் போன்று அரும்பும் நாடனுக்காக, என் கண்கள் உறக்கத்தைக் கைவிட்டன.

மருத்திணை
பாடியவர் : மதுரைக் கண்ணனார்
பாடல் பின்னணி:  பொருள் முற்றி வந்த தலைவனுடன் இருந்த தலைவி தனது காம மிகுதியை சேவலிடம் கூறியது.

"குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணங் கொள் சேவல்!
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே - நெடு நீர் 
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே"

பொருள்
குவிந்த, கொத்தான காந்தள் மலரைப் போன்ற சிவப்பு கொண்டையை உடைய, கூட்டத்தோடு வாழும் சேவலே! ஆழமான நீரை உடைய பணம் மிகுந்த ஊரினனோடு நான் மிக இனிய துயிலில் இருந்தப் பொழுது, நீ என்னை எழுப்பி விட்டாய்.  இருண்ட இரவில், எலியைத் தேடும் இளம் காட்டுப் பூனை, கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் உணவாக ஆகி, நீ மிகுந்த துன்பத்தை அடைவாயாக!

நெய்தற் திணை

நெஞ்சு வருந்துகிறது

பாடியவர் : காமஞ்சேர்குளத்தார்
பாடல் பின்னணி-  பிரிவைத் தாங்க முடியாமல் தலைவி வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு, ‘தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைத்து ஆற்றினேன்’ என்பது புலப்படத் தலைவி சொன்னது

"நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்,
அமைவிலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே".

பொருள்
 வருந்துகின்றது  என் நெஞ்சு.  வருந்துகின்றது  என் நெஞ்சு.   இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து  எனக்குப் பொருத்தமாக இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார்.  வருந்துகின்றது  என் நெஞ்சு.

காதல் நோயே

பாடியவர் : நரிவெரூ உத்தலையார்
பாடல் பின்னணி-   பிரிவு ஆற்றாமையால் தலைவி வருந்துதலை அறிந்து கவலையுற்ற தோழிக்கு, தலைவி தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும் வாயிலாகக் காமநோயின் கொடுமையைக் கூறியது.


"அது கொல் தோழி காம நோயே,
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்,
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே?"

பொருள்
தோழி! தன்னிடத்தில் தங்கும் குருகுகள் உறங்குவதற்குக் காரணமான இனிய நிழலை உடைய புன்னை மரம் உடையும் கடல் அலைகளின் நீர்த் திவலையால் அரும்பும் மெல்லிய கடற்கரைத் தலைவன் என்னை விட்டுப்  பிரிந்ததால், பல இதழுடைய தாமரை மலரைப்போன்ற தோற்றத்தையுடைய, கண்மை இட்ட எனது கண்கள் தூங்க முடியாதவையாக ஆகி விட்டன.  இது தான் காதல் நோயின் தன்மையோ?

பாலைத் திணை

பாலை சென்றான்

பாடியவர் : ஔவையார்
பாடல் பின்னணி-  பிரிவிடை ஆற்றல் வேண்டும் என்ற தோழியிடம் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைவி கூறியது.

"வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப, நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே"

பொருள்
 வெப்பமுடைய வலிமையான காற்று பொங்கி வந்ததால் நெற்றாக விளைந்த வாகை மரத்தின் முற்றிய வற்றல் ஒலிக்கும் இடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய பாலை நிலம் என்பார்கள், என் முலைஇடத்து துயிலுதலை வெறுத்துப் பொருள் ஈட்டச் சென்ற தலைவர் போன வழி.

சொல் காதலனே

பாடியவர் : பூங்கணுத் திரையார்
பாடல் பின்னணிதலைவன் பகற்பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதால் துயருற்ற தலைவியின் மேனியில் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானதைக் கண்டு வருந்தித் தோழி கூறியது.

"தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும், கையாறு ஓம்பு’ என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பினினை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்கவன்ன,  
நசையாகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே?"

பொருள்
  "பூந்தாதினால் செய்த மிக்க குளிர்ந்த விளையாட்டுப் பாவை காலை வெயிலில் வருந்தும்.  அதனைக் காப்பாயாக” என்று விளையாட்டு மகளிர் சொல்லக்கேட்டும், இத்தகைய பண்புடன் பெரிதும் துன்புறும், நல்ல நெற்றியையுடைய இத்தலைவியின் பசலை நீங்கும்படி அவளுக்கு விருப்பத்தை உண்டாக்கும் ஒரு சொல்லைக் கூற, இந்நோய் தந்த காதலருக்கு இயலாதா?


முழுமையான நூல் உரையுடன் பதிவிறக்க:






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி  இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல .. அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா .. அவ என்ன சொன்னாலும் பிடிக்கும் , எது பேசினாலும் பிடிக்கும் , பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும் , கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான் .   ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து , நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு , நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா ..   சாப்பிட்டியா என்ன பண்றே   பைக் பார்த்து கவனமா ஓட்டு உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா .. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா .. கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா .. சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா .. பல காயங்களுக்கு மருந்து போடுவா , சில காயங்களுக்கு அவளே காரணமாவா .. இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா .. அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா .. ஒரு பெ...