முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் காதல் காதல்

 காதல் - ஒரு பார்வை

"காதல் காதல் காதல்

காதல் போயின் 

சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார்.

கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை.

கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம். எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது.

2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பனைகள்: ஒருவருக்கொருவர் உடலால் கவரப்படுதல்; காம இன்பத்தில் கரைந்து போதல்.(Romantic fairy tale Love)

காதல் கடவுளர்கள்

ரோமானியர்களின் காதல் தேவதை வீனஸ் (Venus). அவள்தான் முதிர்ந்த காதலின் முகவரி; ஆசையின் தேவதை; காமத்தின் திருவுருவம்; வம்சவிருத்தியின் பேரருள்; வெற்றியின் அடையாளம்; செழிப்பின் சின்னம்; பேரழகின் கடவுள்! அவளது கணவர் போர்க் கடவுள் மார்ஸ் (Mars).. நேர் எதிர்க் குணம் கொண்டவர். ஆண்கள் மார்ஸிலிருந்தும், பெண்கள் வீனஸிலிருந்தும் வந்தவர்கள் (Men from Mars; Women from Venus) என்று கூறுவது அதனால்தான்.

அவர்களது அன்பு, அழகுக் குழந்தைதான் 'க்யூபிட்' (Cupid). குற்றமற்ற தூய்மையான
அன்புக்கும், கண்மூடித்தனமான காதலுக்கும் காரணம். காதல் அம்புகளைக் கொண்டு காதலர்களைச் சேர்ப்பதும், பிரிப்பதும் க்யூபிட்டின் வேலைதான். அவனுக்குக் கண்பார்வை இல்லை என்பது நம்பிக்கை. அதனால்தான் காதலுக்குக் கண்ணில்லை என்பதோ? 
க்யூபிட்டின் காதலி 'ப்சைக்' (Psyche). பேரழகி. இவளது அழகைக் கண்டு மாமியார் வீனஸுக்குப் பொறாமை. இருவரும் சேரவிடாமலிருக்க திட்டமிடுகிறாள். ஆனால் க்யூபிட் ப்சைக்கையே சேர்கிறான்.
(இன்றுவரை அப்படிதானே)

கிரேக்கர்களின் காதல் கடவுள் ஈராஸ் (Eros). ரோமானிய க்யூபிட்டின் கிரேக்க வடிவம். இவர்களும் ஈராஸின் காதலி  ப்சைக் என்கின்றனர். இவர்களது மகள் ஹெடோன் (Hedone). ஹெடோன் என்றால் பேரின்பம் (Bliss) என்று அர்த்தம்.

ஈராஸின் தாய் அப்ரோடைட் (Aphrodite).  அவளும் காதலுக்குப் பேர் பெற்றவள். அதனால் தான் இன்று பாலுணர்வைத் தூண்டும் உணவு மருந்துகளுக்கு அப்ரோடைசியாக்ஸ் (Aphrodisiacs) என்று பெயர்.

எகிப்தியர்களின் ஆதிக்கடவுள்கள், "ரே"(Re) - சூரியக்கடவுள், "ஓசிரிஸ்"(Osiris) - ஆழ்கடல் கடவுள். ரேவின் மனைவி "ஹத்தோர்" (Hathore)- இவள்தான் காதல், கருவுறுதல், தாய்மை, செல்வம் அனைத்திற்கும் தெய்வம். 

சீனாவின் காதல் கடவுள் "யூ லவ்" (Yue Lao)  பொருத்தமான பெயர்தான்! 

சரி, நம்ம ஊருக்கு வருவோம்.

மன்மதன் - ரதி தேவி
மன்மதன் - காமதேவன்: வில் அம்பு பொருந்திய அழகான இளைஞன். 
பிரம்மதேவனின் மகன். 
மன்மதனுடைய வில் கரும்பால் ஆனது. நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது. அம்பு - தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, நீலோத்பவம் ஆகிய ஐந்து மலர்களால் ஆனது. வாகனம் கிளி. பேரழகி ரதி தேவி மனைவி. வசந்த காலங்களில் மீன் கொடி ஏந்தி மன்மதராஜன் ரதியோடு ஊர்வலம் வருகின்றான்.

கைலாயத்தில் சிவன் தவத்தில் இருக்கிறான். அவன் பார்வதியை மணக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என தேவர்கள் பதறுகின்றனர்.பார்வதி மன்மதனை மலர் அம்பு தொடுத்து சிவனின் தவத்தைக் கலைக்கச் சொல்கிறாள். மன்மதனும் எய்கிறான். சிவனும் தவம் கலைந்து பார்வதியை மணக்கிறான். ஆனால் மன்மதன் மீது கடுமையான கோபம்; நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து விடுகிறான். பின் ரதியின் அழுகைக்கிணங்கி, ' மன்மதன் உடலற்றவனாகவே இருப்பான் (அனங்கன்). ஆனால் உன் கண்களுக்கு மட்டும் தெரிவான்.' என்று வரம் அளிக்கிறான். மன்மதன் மீண்டும் கண்ணன் - ருக்மிணிக்கு புதல்வனாக பிறக்கிறான்  பெயர் பிரத்யும்னன். இதுதான் கந்தபுராணத்தில் மன்மதன் வரலாறு.
சங்க இலக்கியங்களில் பரணர் அகநானூற்றிலே மன்மதனைப் பாடியிருக்கிறார். மேலும் பட்டினப்பாலை, கலித்தொகை, பரிபாடல் அனைத்திலும் மன்மதன் பாடப்பட்டுள்ளான்.

மன்மதன் உடல்ரீதியான காமத்தை எரித்து, உள்ளன்பையும் காதலையும் உயிர்ப்பிக்கிறான். கணவன் மனைவி ஒற்றுமைக்கு மன்மதன்- ரதியை வழிபடுகின்றனர். 
காதலைப் பற்றி எழுத வந்து கடவுள்களைப் பற்றி குறிப்பிட்டது - காதலின் புனிதத்தையும், முற்காலத்தில் காதல் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதைக் குறிப்பிடத்தான்.

காதலின் வகைகள்
கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கிறார்கள்.

1.பிலியா (Philia): நேசம் என்று சொல்லலாம்.காமம் இல்லாத நட்பு, நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கொள்ளும் அன்பு.

2.ப்ராக்மா (Pragma): உண்மைக் காதல் என்று சொல்லலாம். நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி, காதலாகி, வாழ்க்கை முழுவதும் இணைபிரியாக் காதல்.

3. ஸ்டார்ஜ் (Storge): பாசம் என்று சொல்லலாம். பெற்றோர் தம் குழந்தைகள் மீது வைக்கும் அன்பு.

4, ஈராஸ் (Eros): மோகம் என்று சொல்லலாம். உடற் கவர்ச்சியால் வருவது, காமமே முக்கிய நோக்கம் (Erotic). கண்டவுடன் காதல் உண்டாகி, உடல் இன்பத்தால் வருவது. காமமில்லையேல் காதல் இல்லை.

5, லூடூஸ் (Ludus): சரசம் என்று சொல்லலாம். முதல் நிலைக் காதல். உறுதி செய்யப்படாத காதல். பேசுவது, பழகுவது, ஊர்சுற்றுவது என தொடரும். அர்ப்பணிப்பு இல்லாத   மேலோட்டமான பொழுதுபோக்குக் காதல்.

6. மேனியா (Mania): வெறி என்று சொல்லலாம். காதல் உணர்வால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, துணையைத் தொல்லைப்படுத்துவது.(Obsession). அதனால் அதீத இன்பத்திலும் துன்பத்திலும் திளைப்பது

7. ப்ளாட்டியா (Philautia): சுய அன்பு என்று சொல்லலாம். ஒருவர் தன்மீது கொள்ளும் அன்பு. இன்றைக்கு இது மிக அவசியம் என்கிறார்கள். தானே தனக்கு தந்தையாக, தாயாக, நண்பனாக, ஆசானாக எண்ணுவது, தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் தரக் கூடியது. தன்னை மதிப்பது, பாராட்டுவது, முழுமனதாக செயல்களில் ஈடுபடவைத்து வெற்றி பெறவைக்கும்.

8.அகேப் (Agape): கருணை என்றும் பரிவு என்றும் சொல்லலாம். சக மனிதரிடத்து அனைவரும் காட்ட வேண்டிய அன்பு. உணர்வுரீதியான அன்பு. எதையும் எதிர்பாராது காட்டும் அன்பு.

காதலின் மொழிகள் (Love Languages)

கேரி சேப்மேன் என்ற அமெரிக்க எழுத்தாளர் 5 காதலின் மொழிகள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 45 வருடங்களாக ஒரே மனைவியுடன் வாழ்ந்தவர். அதில் அவர்  5 விஷயங்களைக் குறிப்பிடுகிறார். 

1. உறுதியான வார்த்தைகள் (Words of Affirmation): காதலுக்கு அடிப்படை நம்பிக்கை. உங்கள் காதலரிடம் நீங்கள் கூறும் வார்த்தைகள் நம்பிக்கையுள்ளதாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.

2. சேவை புரிதல் (Acts of Service): எனக்காக என் காதலர் எதை வேண்டுமானாலும் செய்வார் என்ற எண்ணம் இருவருக்குமே இருக்கவேண்டும்.

3. பரிசுகள் பெறுதல் (Receiving Gifts): உங்கள் காதலர் பிறந்த நாளுக்கோ, வேறு எதற்காகவோ, எந்தப் பரிசு தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைப் பாதுகாக்க வேண்டும். அதில் எந்தக் குறையும் கூறக் கூடாது. அதை அவர் அறிய பயன்படுத்த வேண்டும்..

4. நேரம் ஒதுக்குதல் (Quality Time): எவ்வளவு கடமைகள் இருந்தாலும் காதலருக்காக நேரம் ஒதுக்க வேண்டும். சந்திப்புகள் குறையும்போது சந்தேகங்களும், குழப்பங்களும் அதிகமாகி, காதல் குறைய ஆரம்பிக்கும்.

5.தொடும் உணர்வு அவசியம் (Physical Touch): தொட்டு விட தொட்டுவிட தொடரும்' என்பார்களே அதேதான். காதலர்கள் சாதாரணமாக உரையாடும்போது கூட தொட்டுக் கொண்டேதான் பேச வேண்டும். கை பிடித்தல், முத்தமிடல், கட்டிப் பிடித்தல் இல்லாத காதல் எதற்கு?

காதலின் மூன்று நிலைகள்
Sternberg Triangle theory of Love


ராபர்ட் ஸ்டென்பெர்க் என்பவர் கொடுத்த காதலின் முக்கோண விதி மிகவும் பிரபலம். காதல் உறவுகள் இந்த மூன்று நிலைகளுக்குள் அடங்கும். அவை உணர்ச்சி வேட்கை (Passion), நெருக்கம் (intimacy), அர்ப்பணிப்பு (Dedication). எளிதாகச் சொன்னால் கவர்ச்சி, காமம், இணைதல். இவற்றில் ஏதாவது கூடும் போது, குறையும்போது உறவு முறை மாறுபடுகிறது என்கிறார். விக்கிபீடியாவில் உள்ள இந்த படத்தைப் பாருங்கள் புரியும். 

லிமரன்ஸ் (Limerance)
ஒருவர் காதலில் விழும் முதல் நிலையை லிமரன்ஸ் என்கிறார்கள். இது காதலில் விழப்போகும் அந்த விநாடி மனநிலை. 'தேவதையைக் கண்டேன்: காதலில் விழுந்தேன்' என்கின்ற நொடி. உடலில் எத்தனை மாற்றங்கள் ஒரு வித உற்சாகம்
(Excitement), படபடப்பு, நடுக்கம், லேசான மயக்கம் , இத்யாதிகள். இந்த லிமரன்ஸ் நிலையை அனுபவித்திருக்கிறீர்களா?

இந்த துவக்கநிலையிலேயே ஒருவர் 3 மாதம் முதல் 3 வருடங்கள் வரை இருக்க முடியும் என்கிறார்கள். ' சொல்லாமலே, இதயம்' பட காதல் வகையறாக்கள் இவைதான்.

 சைக்காலஜிஸ்டுகள், ஒரு காதல் உருவாக குறைந்தது எட்டுவாரங்கள் ஆகும் என்கிறார்கள். ஒரு ஆய்வில் 94 நிமிடங்களில் இருவருக்கிடையே காதல் வர வைத்தனராம். முதல் 4 நிமிடங்கள் ஒருவருக்கொருவர் கண்களை உற்றுநோக்க வைத்தனர். பிறகு 90 நிமிடங்கள் தயாரிக்கப்பட்ட உரையாடல்களை நிகழ்த்த இருவருக்குள்ளும் காதல் உருவானதாம். 

காதல் ஹார்மோன்கள்

காதல் என்பது இரு பாலருக்கிடையே தோன்றும் பல்வேறு ரசாயனங்களின் கலவைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 
நமது மூளையில் சுரக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டரான 'டோபோமைன்' (Dopomine)தான் லிமரன்ஸ் நிலையில் மண்டைக்குள் பட்டாம்பூச்சி பறப்பது, உருவமில்லா உருண்டைகள் உருள்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவது. டோபோமைன்தான் மனிதனது கற்றல், ஞாபகத் திறன், பேச்சுத் திறமை அனைத்திற்கும் காரணம். காமத்தின் உச்சநிலையை உருவாக்குவதும் டோபோமைன்தான்.

டோபோமைன் சுரந்து காதல் வந்து, 'அட்ரினலின்'(Adrenaline) சுரக்கிறது. அது செய்யும் வேலைதான் படபடப்பு, மறதி, பசியின்மை, தூக்கமின்மை. அதே போல 'செரடோனின்' (Serotonin) சுரந்து கனவுகளை வரவழைப்பது, நமக்கு பிடித்தமானவர்களுடன் கனவில் இருப்பது பொன்ற வேலைகளைச் செய்கிறது.
அடுத்துதான் மூளையின் ஹைப்போதாலாமஸில் மிக முக்கியமான ஆக்சிடோசின் (Oxytocin) சுரக்கிறது. அது பிட்யூட்டரி சுரப்பி வழியாக ரத்தத்தில் கலக்கிறது. ஆக்சிடோசின் தான் இனப்பெருக்க வேலைகளைத் தூண்டுவது, தாய்க்கும் சேய்க்குமான உறவுக்குக் காரணம். குழந்தைக்குப் பாலூட்டும்வரை  இது சுரக்கும் என்கிறார்கள். அதேபோல காதலர்களுக்கிடையே உடல் மற்றும் உணர்வுரீதியான பிணைப்புக்கும்  ஆக்சிடோசின் தான் காரணம். 
எனவே காதல் கொள்ள ஆக்சிடோசின் நன்றாக சுரக்க வேண்டும். அதற்கு நல்ல உடற்பயிற்சி, உற்சாகம், காதலர்களுக்கிடையே தொடுதல் வேண்டும்.

இன்னும் தற்போதைய காதல், 90களுக்கு முந்தைய காதல், காதலர்களைப் பற்றியெல்லாம் எழுத ஆசை. வேறு கட்டுரையாக எழுதுகிறேன். காதல் என்றாலே உற்சாகம் பீறிட்டு எழுகிறதல்லவா?






















கருத்துகள்

  1. காதலுக்கு விளக்கம் அளிக்க கிரேக்கத்திலிருந்து நம் நாடு வரை பயணிக்க வைத்தீர்கள். அன்பான காதல் ஒரு மனிதனை உள்ளிருந்து எப்படியெல்லாம் மாற்றுகிறது. எளிய நடையில் அழகாக விளக்கிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....