முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் காதல் காதல்

 காதல் - ஒரு பார்வை

"காதல் காதல் காதல்

காதல் போயின் 

சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார்.

கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை.

கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம். எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது.

2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பனைகள்: ஒருவருக்கொருவர் உடலால் கவரப்படுதல்; காம இன்பத்தில் கரைந்து போதல்.(Romantic fairy tale Love)

காதல் கடவுளர்கள்

ரோமானியர்களின் காதல் தேவதை வீனஸ் (Venus). அவள்தான் முதிர்ந்த காதலின் முகவரி; ஆசையின் தேவதை; காமத்தின் திருவுருவம்; வம்சவிருத்தியின் பேரருள்; வெற்றியின் அடையாளம்; செழிப்பின் சின்னம்; பேரழகின் கடவுள்! அவளது கணவர் போர்க் கடவுள் மார்ஸ் (Mars).. நேர் எதிர்க் குணம் கொண்டவர். ஆண்கள் மார்ஸிலிருந்தும், பெண்கள் வீனஸிலிருந்தும் வந்தவர்கள் (Men from Mars; Women from Venus) என்று கூறுவது அதனால்தான்.

அவர்களது அன்பு, அழகுக் குழந்தைதான் 'க்யூபிட்' (Cupid). குற்றமற்ற தூய்மையான
அன்புக்கும், கண்மூடித்தனமான காதலுக்கும் காரணம். காதல் அம்புகளைக் கொண்டு காதலர்களைச் சேர்ப்பதும், பிரிப்பதும் க்யூபிட்டின் வேலைதான். அவனுக்குக் கண்பார்வை இல்லை என்பது நம்பிக்கை. அதனால்தான் காதலுக்குக் கண்ணில்லை என்பதோ? 
க்யூபிட்டின் காதலி 'ப்சைக்' (Psyche). பேரழகி. இவளது அழகைக் கண்டு மாமியார் வீனஸுக்குப் பொறாமை. இருவரும் சேரவிடாமலிருக்க திட்டமிடுகிறாள். ஆனால் க்யூபிட் ப்சைக்கையே சேர்கிறான்.
(இன்றுவரை அப்படிதானே)

கிரேக்கர்களின் காதல் கடவுள் ஈராஸ் (Eros). ரோமானிய க்யூபிட்டின் கிரேக்க வடிவம். இவர்களும் ஈராஸின் காதலி  ப்சைக் என்கின்றனர். இவர்களது மகள் ஹெடோன் (Hedone). ஹெடோன் என்றால் பேரின்பம் (Bliss) என்று அர்த்தம்.

ஈராஸின் தாய் அப்ரோடைட் (Aphrodite).  அவளும் காதலுக்குப் பேர் பெற்றவள். அதனால் தான் இன்று பாலுணர்வைத் தூண்டும் உணவு மருந்துகளுக்கு அப்ரோடைசியாக்ஸ் (Aphrodisiacs) என்று பெயர்.

எகிப்தியர்களின் ஆதிக்கடவுள்கள், "ரே"(Re) - சூரியக்கடவுள், "ஓசிரிஸ்"(Osiris) - ஆழ்கடல் கடவுள். ரேவின் மனைவி "ஹத்தோர்" (Hathore)- இவள்தான் காதல், கருவுறுதல், தாய்மை, செல்வம் அனைத்திற்கும் தெய்வம். 

சீனாவின் காதல் கடவுள் "யூ லவ்" (Yue Lao)  பொருத்தமான பெயர்தான்! 

சரி, நம்ம ஊருக்கு வருவோம்.

மன்மதன் - ரதி தேவி
மன்மதன் - காமதேவன்: வில் அம்பு பொருந்திய அழகான இளைஞன். 
பிரம்மதேவனின் மகன். 
மன்மதனுடைய வில் கரும்பால் ஆனது. நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது. அம்பு - தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, நீலோத்பவம் ஆகிய ஐந்து மலர்களால் ஆனது. வாகனம் கிளி. பேரழகி ரதி தேவி மனைவி. வசந்த காலங்களில் மீன் கொடி ஏந்தி மன்மதராஜன் ரதியோடு ஊர்வலம் வருகின்றான்.

கைலாயத்தில் சிவன் தவத்தில் இருக்கிறான். அவன் பார்வதியை மணக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என தேவர்கள் பதறுகின்றனர்.பார்வதி மன்மதனை மலர் அம்பு தொடுத்து சிவனின் தவத்தைக் கலைக்கச் சொல்கிறாள். மன்மதனும் எய்கிறான். சிவனும் தவம் கலைந்து பார்வதியை மணக்கிறான். ஆனால் மன்மதன் மீது கடுமையான கோபம்; நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து விடுகிறான். பின் ரதியின் அழுகைக்கிணங்கி, ' மன்மதன் உடலற்றவனாகவே இருப்பான் (அனங்கன்). ஆனால் உன் கண்களுக்கு மட்டும் தெரிவான்.' என்று வரம் அளிக்கிறான். மன்மதன் மீண்டும் கண்ணன் - ருக்மிணிக்கு புதல்வனாக பிறக்கிறான்  பெயர் பிரத்யும்னன். இதுதான் கந்தபுராணத்தில் மன்மதன் வரலாறு.
சங்க இலக்கியங்களில் பரணர் அகநானூற்றிலே மன்மதனைப் பாடியிருக்கிறார். மேலும் பட்டினப்பாலை, கலித்தொகை, பரிபாடல் அனைத்திலும் மன்மதன் பாடப்பட்டுள்ளான்.

மன்மதன் உடல்ரீதியான காமத்தை எரித்து, உள்ளன்பையும் காதலையும் உயிர்ப்பிக்கிறான். கணவன் மனைவி ஒற்றுமைக்கு மன்மதன்- ரதியை வழிபடுகின்றனர். 
காதலைப் பற்றி எழுத வந்து கடவுள்களைப் பற்றி குறிப்பிட்டது - காதலின் புனிதத்தையும், முற்காலத்தில் காதல் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதைக் குறிப்பிடத்தான்.

காதலின் வகைகள்
கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கிறார்கள்.

1.பிலியா (Philia): நேசம் என்று சொல்லலாம்.காமம் இல்லாத நட்பு, நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கொள்ளும் அன்பு.

2.ப்ராக்மா (Pragma): உண்மைக் காதல் என்று சொல்லலாம். நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி, காதலாகி, வாழ்க்கை முழுவதும் இணைபிரியாக் காதல்.

3. ஸ்டார்ஜ் (Storge): பாசம் என்று சொல்லலாம். பெற்றோர் தம் குழந்தைகள் மீது வைக்கும் அன்பு.

4, ஈராஸ் (Eros): மோகம் என்று சொல்லலாம். உடற் கவர்ச்சியால் வருவது, காமமே முக்கிய நோக்கம் (Erotic). கண்டவுடன் காதல் உண்டாகி, உடல் இன்பத்தால் வருவது. காமமில்லையேல் காதல் இல்லை.

5, லூடூஸ் (Ludus): சரசம் என்று சொல்லலாம். முதல் நிலைக் காதல். உறுதி செய்யப்படாத காதல். பேசுவது, பழகுவது, ஊர்சுற்றுவது என தொடரும். அர்ப்பணிப்பு இல்லாத   மேலோட்டமான பொழுதுபோக்குக் காதல்.

6. மேனியா (Mania): வெறி என்று சொல்லலாம். காதல் உணர்வால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, துணையைத் தொல்லைப்படுத்துவது.(Obsession). அதனால் அதீத இன்பத்திலும் துன்பத்திலும் திளைப்பது

7. ப்ளாட்டியா (Philautia): சுய அன்பு என்று சொல்லலாம். ஒருவர் தன்மீது கொள்ளும் அன்பு. இன்றைக்கு இது மிக அவசியம் என்கிறார்கள். தானே தனக்கு தந்தையாக, தாயாக, நண்பனாக, ஆசானாக எண்ணுவது, தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் தரக் கூடியது. தன்னை மதிப்பது, பாராட்டுவது, முழுமனதாக செயல்களில் ஈடுபடவைத்து வெற்றி பெறவைக்கும்.

8.அகேப் (Agape): கருணை என்றும் பரிவு என்றும் சொல்லலாம். சக மனிதரிடத்து அனைவரும் காட்ட வேண்டிய அன்பு. உணர்வுரீதியான அன்பு. எதையும் எதிர்பாராது காட்டும் அன்பு.

காதலின் மொழிகள் (Love Languages)

கேரி சேப்மேன் என்ற அமெரிக்க எழுத்தாளர் 5 காதலின் மொழிகள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 45 வருடங்களாக ஒரே மனைவியுடன் வாழ்ந்தவர். அதில் அவர்  5 விஷயங்களைக் குறிப்பிடுகிறார். 

1. உறுதியான வார்த்தைகள் (Words of Affirmation): காதலுக்கு அடிப்படை நம்பிக்கை. உங்கள் காதலரிடம் நீங்கள் கூறும் வார்த்தைகள் நம்பிக்கையுள்ளதாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.

2. சேவை புரிதல் (Acts of Service): எனக்காக என் காதலர் எதை வேண்டுமானாலும் செய்வார் என்ற எண்ணம் இருவருக்குமே இருக்கவேண்டும்.

3. பரிசுகள் பெறுதல் (Receiving Gifts): உங்கள் காதலர் பிறந்த நாளுக்கோ, வேறு எதற்காகவோ, எந்தப் பரிசு தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைப் பாதுகாக்க வேண்டும். அதில் எந்தக் குறையும் கூறக் கூடாது. அதை அவர் அறிய பயன்படுத்த வேண்டும்..

4. நேரம் ஒதுக்குதல் (Quality Time): எவ்வளவு கடமைகள் இருந்தாலும் காதலருக்காக நேரம் ஒதுக்க வேண்டும். சந்திப்புகள் குறையும்போது சந்தேகங்களும், குழப்பங்களும் அதிகமாகி, காதல் குறைய ஆரம்பிக்கும்.

5.தொடும் உணர்வு அவசியம் (Physical Touch): தொட்டு விட தொட்டுவிட தொடரும்' என்பார்களே அதேதான். காதலர்கள் சாதாரணமாக உரையாடும்போது கூட தொட்டுக் கொண்டேதான் பேச வேண்டும். கை பிடித்தல், முத்தமிடல், கட்டிப் பிடித்தல் இல்லாத காதல் எதற்கு?

காதலின் மூன்று நிலைகள்
Sternberg Triangle theory of Love


ராபர்ட் ஸ்டென்பெர்க் என்பவர் கொடுத்த காதலின் முக்கோண விதி மிகவும் பிரபலம். காதல் உறவுகள் இந்த மூன்று நிலைகளுக்குள் அடங்கும். அவை உணர்ச்சி வேட்கை (Passion), நெருக்கம் (intimacy), அர்ப்பணிப்பு (Dedication). எளிதாகச் சொன்னால் கவர்ச்சி, காமம், இணைதல். இவற்றில் ஏதாவது கூடும் போது, குறையும்போது உறவு முறை மாறுபடுகிறது என்கிறார். விக்கிபீடியாவில் உள்ள இந்த படத்தைப் பாருங்கள் புரியும். 

லிமரன்ஸ் (Limerance)
ஒருவர் காதலில் விழும் முதல் நிலையை லிமரன்ஸ் என்கிறார்கள். இது காதலில் விழப்போகும் அந்த விநாடி மனநிலை. 'தேவதையைக் கண்டேன்: காதலில் விழுந்தேன்' என்கின்ற நொடி. உடலில் எத்தனை மாற்றங்கள் ஒரு வித உற்சாகம்
(Excitement), படபடப்பு, நடுக்கம், லேசான மயக்கம் , இத்யாதிகள். இந்த லிமரன்ஸ் நிலையை அனுபவித்திருக்கிறீர்களா?

இந்த துவக்கநிலையிலேயே ஒருவர் 3 மாதம் முதல் 3 வருடங்கள் வரை இருக்க முடியும் என்கிறார்கள். ' சொல்லாமலே, இதயம்' பட காதல் வகையறாக்கள் இவைதான்.

 சைக்காலஜிஸ்டுகள், ஒரு காதல் உருவாக குறைந்தது எட்டுவாரங்கள் ஆகும் என்கிறார்கள். ஒரு ஆய்வில் 94 நிமிடங்களில் இருவருக்கிடையே காதல் வர வைத்தனராம். முதல் 4 நிமிடங்கள் ஒருவருக்கொருவர் கண்களை உற்றுநோக்க வைத்தனர். பிறகு 90 நிமிடங்கள் தயாரிக்கப்பட்ட உரையாடல்களை நிகழ்த்த இருவருக்குள்ளும் காதல் உருவானதாம். 

காதல் ஹார்மோன்கள்

காதல் என்பது இரு பாலருக்கிடையே தோன்றும் பல்வேறு ரசாயனங்களின் கலவைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 
நமது மூளையில் சுரக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டரான 'டோபோமைன்' (Dopomine)தான் லிமரன்ஸ் நிலையில் மண்டைக்குள் பட்டாம்பூச்சி பறப்பது, உருவமில்லா உருண்டைகள் உருள்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவது. டோபோமைன்தான் மனிதனது கற்றல், ஞாபகத் திறன், பேச்சுத் திறமை அனைத்திற்கும் காரணம். காமத்தின் உச்சநிலையை உருவாக்குவதும் டோபோமைன்தான்.

டோபோமைன் சுரந்து காதல் வந்து, 'அட்ரினலின்'(Adrenaline) சுரக்கிறது. அது செய்யும் வேலைதான் படபடப்பு, மறதி, பசியின்மை, தூக்கமின்மை. அதே போல 'செரடோனின்' (Serotonin) சுரந்து கனவுகளை வரவழைப்பது, நமக்கு பிடித்தமானவர்களுடன் கனவில் இருப்பது பொன்ற வேலைகளைச் செய்கிறது.
அடுத்துதான் மூளையின் ஹைப்போதாலாமஸில் மிக முக்கியமான ஆக்சிடோசின் (Oxytocin) சுரக்கிறது. அது பிட்யூட்டரி சுரப்பி வழியாக ரத்தத்தில் கலக்கிறது. ஆக்சிடோசின் தான் இனப்பெருக்க வேலைகளைத் தூண்டுவது, தாய்க்கும் சேய்க்குமான உறவுக்குக் காரணம். குழந்தைக்குப் பாலூட்டும்வரை  இது சுரக்கும் என்கிறார்கள். அதேபோல காதலர்களுக்கிடையே உடல் மற்றும் உணர்வுரீதியான பிணைப்புக்கும்  ஆக்சிடோசின் தான் காரணம். 
எனவே காதல் கொள்ள ஆக்சிடோசின் நன்றாக சுரக்க வேண்டும். அதற்கு நல்ல உடற்பயிற்சி, உற்சாகம், காதலர்களுக்கிடையே தொடுதல் வேண்டும்.

இன்னும் தற்போதைய காதல், 90களுக்கு முந்தைய காதல், காதலர்களைப் பற்றியெல்லாம் எழுத ஆசை. வேறு கட்டுரையாக எழுதுகிறேன். காதல் என்றாலே உற்சாகம் பீறிட்டு எழுகிறதல்லவா?






















கருத்துகள்

  1. காதலுக்கு விளக்கம் அளிக்க கிரேக்கத்திலிருந்து நம் நாடு வரை பயணிக்க வைத்தீர்கள். அன்பான காதல் ஒரு மனிதனை உள்ளிருந்து எப்படியெல்லாம் மாற்றுகிறது. எளிய நடையில் அழகாக விளக்கிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...