சங்க நூல்கள் அறிமுகம் - 8
பதிற்றுப்பத்து
கடைச் சங்க காலத்தில் சேர நாடு பரந்து விரிந்து, வளத்தாலும் சிறந்து விளங்கியது. அப்படி சிறந்து விளங்கிய 10 சேர மன்னர்களைப் பற்றி 10 புலவர்கள் தலா பத்து பாடல்களாக 100 பாடல்களைப் பாடியதே பதிற்றுப் பத்து. அவர்களது ஆட்சி முறை,
கொடை, வீரம், வெற்றி, புகழ், அறிவு, பண்பாடு ஆகிய புறப் பொருட்களைப் பாடும் புறப்பாடல்கள். இதில் முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை.பாடல்கள் 5 முதல் 57 அடி வரையுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தொகுத்தவர், தொகுப்பித்தவர் பற்றிய குறிப்பு இல்லை. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பத்தி இறுதியிலும் அதனைப் பாடிய புலவர், பாட்டுடைத் தலைவன், அவன் வழங்கிய கொடை, பத்துப் பாடல்களின் பெயர்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்ற பதிகம் இடம் பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுத்த ஒருவரால் இப்பதிகம் பாடப்பட்டிருக்கலாம்.
இந்நூலை முதலில் பதிப்பித்தவர் உ,வே, சாமிநாதைய்யர். உரை இயற்றியவர் சு.துரைசாமிப் பிள்ளை. பரிபாடலைப் போலவே பதிற்றுப் பத்தும் இசையோடு பாடுதற்குரியது.சில பாடல்கள்
பாடல் - 11, *புண்ணுமிழ் குருதி*,
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
பாடல் - 42 *தசும்பு துளங்கு இருக்கை*
பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு ஆழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடு போர்க் குட்டுவ!
மைந்து உடை நல் அமர்க் கடந்து வலம் தரீஇ,
இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டிச் 10
சாந்து புறத்து எறித்த *தசும்பு துளங்கு இருக்கைத்*
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து,
கோடியர் பெரும் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15
மன்பதை மருள அரசுபடக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20
மா இரும் தெள் கடல் மலி திரைப் பெளவத்து,
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண் பல வரூஉம் புணரியின் பலவே."
பொருள்
கரிய பனந்தோட்டாலாகிய மாலையையும், பொன்னாற் செய்த வீரக் கழலையும், மீனைப்பிடிக்கின்ற சூழ்ச்சியோடு சிறற் பறவையானது குளிர்ந்த களத்து நீருட் பாய்ந்து மேலெழுந்த காலத்துத் தோன்றும் அதன் அலகைப் போல வெள்ளூசியானது மூழ்கி மூழ்கி எழுந்து செயற்படுதலாலே தைக்கப் பெற்ற நெடிய தழும்பு பரந்த போர்ப்புண்ணின் வடுவானது பொருந்திய மார்பினையும்; அம்புகளாற் புண்பட்ட உடம்பினையும் உடையவர்களாகப் போர் மேற்கொண்டு, வந்தோரல்லாத பிறருடன் தும்பை சூடிப் பொருதலை மேற்கொள்ளாது, போர் குறித்தாருடனேயே போர் செய்த மாட்சியும் உடையவராகிய, அத்தகையவரான மறக்குடிச் சிறந்தோர்க்குத் தலைவனே! நல்ல நெற்றியுடையாளான வேண்மாளின் கணவனே! தலைமை சான்ற யானைகளையும் எதிர்நின்று அளிக்கும் பேராற்றல் மிக்க குட்டுவனே!
பகைவருடன் செய்த ந ல்ல போரிலே, அப்பகைவரை எதிர்நின்று பொருது வெற்றி கொண்டு, நின்வீரர்களுக்கு வெற்றிப் புகழ் தந்தனை! இஞ்சியும் பூவும் விரவிய பசிய தாரினைப் பூட்டி, சந்தனப் புறத்தே பூசப் பெற்ற கட்குடம் அசையும் இடத்திலிள்ள, இனிய சேறாக விளைந்து முதிர்ந்த, நீல மணியின் நிறத்தைக் கொண்ட கள்ளினைத் தனக்காக மட்டுமே பேணிவைத்துக் கொள்ளாது, அதனைப் பிறர்க்கும் கொடுத்தலாலே, அவர் எல்லோரும் வளவிய களிப்புச் சுரந்து நிறைபவராயினர். கூத்தரது பெரிய சுற்ரமானது வாழ்வினைப் பெறும் படியாக, அசையும் இயல்பினையுடைய தலையாட்டமணிந்து விளங்கும் செருக்குடைய குதிரைகளை நீ வழங்கினாய். அந்த நின் கொடைச் செயலை நினைத்தால் கண்டும் கேட்டும் அறிந்த மக்கள் வியப்படையும் படியாகப் பகைவனைப் போரில் வென்றாய்.
முற்பட்ட பொற்வினையானது எதிர்வரப் பெறுதலைக் காணும் பொருட்டாக, நின் தேர்மறவரோடு கூடிய ஏனை மறவர் சுற்றமெல்லாம் உலகமெங்கணும் மொய்த்தபடி நிற்பாராயினர். ஒளிருகின்ற உயர்ந்த மருப்புகளை ஏந்திய களிற்று யானைகளின் மேலாக ஊர்ந்தபடி செல்லும், நின் வெற்றியைப் போற்றிப் பாராட்டினர். கரிய பெரிய தெளிந்த கடலினது மிக்க திரைகளையுடைய பரப்பில், நுரையாகிய வெள்ளிய தலையினை உடைய நிறமுள்ள பிசிர்களாகச் சென்று கரைக்கண் மோதி உடையும்படியாகத், தண்ணிய பலவாக வரும் அலைகளைக் காட்டிலும் நீ அன்று வளங்கிய குதிரைகள் பலவாகும், பெருமானே!
பதிவிறக்க:
பதிற்றுப் பத்து- புலியூர்க் கேசிகன் (Download)
கருத்துகள்
கருத்துரையிடுக